தேனி மாவட்டத்திற்க்கு 2 நாட்கள் உள்ளூர் விடுமுறை...!
கோவில் திருவிழாக்களை முன்னிட்டு தேனி மாவட்டத்துக்கு 2 நாட்கள் உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது.
தேனி,
கூடலூர் அருகே பளியன்குடி மலை உச்சியில், தமிழக-கேரள மாநில எல்லையில் மங்கலதேவி கண்ணகி கோவில் உள்ளது. வரலாற்று சிறப்பு மிக்க இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்ரா பவுர்ணமி திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த திருவிழாவில் இருமாநிலத்தில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பார்கள்.
இந்த ஆண்டிற்கான திருவிழா அடுத்த மாதம் (மே) 5-ந்தேதி நடக்கிறது. இந்த திருவிழா நடைபெறும் நாளில் தேனி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. உள்ளூர் விடுமுறை தினத்தை ஈடுசெய்யும் வகையில் மே 20-ந்தேதி (சனிக்கிழமை) வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் வீரபாண்டி கவுமாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா மே 9-ந்தேதி தொடங்கி 16-ந்தேதி வரை நடக்கிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் 12-ந்தேதி (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. இதையொட்டி 12-ந்தேதி தேனி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அளித்து கலெக்டர் ஷஜீவனா உத்தரவிட்டுள்ளார். அதை ஈடுசெய்யும் வகையில் மே 27-ந்தேதி (சனிக்கிழமை) வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.