புழல் சிறையில் கைதிகளிடம் 2 செல்போன்கள் பறிமுதல் - சிறை காவலர்களிடம் தகராறு செய்ததால் பரபரப்பு


புழல் சிறையில் கைதிகளிடம் 2 செல்போன்கள் பறிமுதல் - சிறை காவலர்களிடம் தகராறு செய்ததால் பரபரப்பு
x

புழல் சிறையில் கைதிகளிடம் 2 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதற்காக சிறை காவலர்களிடம் கைதிகள் தகராறு செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை

சென்னையை அடுத்த புழல் விசாரணை சிறையில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசாரணை கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த சிறையில் கைதிகள் கஞ்சா, செல்போன் ஆகியவற்றை பயன்படுத்துவது அதிகரித்து வருகிறது. அவற்றை பறிமுதல் செய்யும் போது சிறை காவலர்களிடம் கைதிகள் தகராறு செய்வதும், அவர்களை தாக்குவதும் அரங்கேறி வருகின்றன.

இந்த நிலையில் நேற்று 20-க்கும் மேற்பட்ட சிறை காவலர்கள், விசாரணை சிறையில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சென்னை போதை பொருள் தடுப்பு போலீசாரால் கடந்த மாதம் கைதான சென்னை கண்ணகி நகரைச் சேர்ந்த சக்திவேல் (வயது 22) என்பவரிடம் நடத்திய சோதனையில் அவர் செல்போன் வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த செல்போனை போலீசார் பறிமுதல் செய்தனர்.

அதேபோல் போதை பொருள் தடுப்பு போலீசாரால் கடந்த மாதம் கைதான தண்டையார்பேட்டையை சேர்ந்த பாபு (24) என்ற கைதியிடம் நடத்திய சோதனையிலும் அவர் பயன்படுத்திய செல்போன், சிம் கார்டு, சார்ஜர் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

இதை கண்டித்து சிறை காவலர்களிடம் கைதிகள் இருவரும் தகராறு செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து புழல் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறையில் உள்ள கைதிகளுக்கு செல்போன் எப்படி கிடைத்தது? அந்த செல்போனில் அவர்கள் யாரிடம் பேசினார்கள்? என விசாரித்து வருகின்றனர்.


Next Story