மிக்ஜம் புயல் நிவாரண பணிகளில் 18,400 காவலர்கள் - சென்னை காவல்துறை தகவல்
மழை வெள்ளத்தில் சிக்கிய 6,500 பொதுமக்கள் மீட்கப்பட்டதாக சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது.
சென்னை,
மிக்ஜம் புயல் காரணமாக சென்னையில் கனமழை பெய்தது. இதனால் நகரின் பல்வேறு இடங்களில் சாலைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் தேங்கி, பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது.
இதனிடையே வெள்ளத்தில் சிக்கிய மக்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. சென்னை பெருநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர், சென்னையில் மழைநீர் சூழ்ந்த பல்வேறு பகுதிகளுக்கு நேரில் சென்று மீட்பு மற்றும் நிவாரண பணிகளை நேரில் ஆய்வு செய்தார்.
இந்த நிலையில் மிக்ஜம் புயல் மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் 18,400 காவலர்கள் ஈடுபட்டதாகவும், 6,500 பொதுமக்கள் மீட்கப்பட்டு, 21,967 உணவு பொட்டலங்கள் விநியோகிக்கப்பட்டதாகவும் சென்னை பெருநகர காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.
சாலையில் விழுந்த 465 மரங்கள் அகற்றப்பட்டதாகவும், தேங்கிய மழைநீரில் சிக்கிய 489 வாகனங்கள் மீட்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மருத்துவ உதவி தேவைப்படும் நபர்கள், கர்ப்பிணி பெண்கள் உள்ளிட்டோருக்கு ஆம்புலன்ஸ் வசதிகள் ஏற்பாடு செய்து தரப்பட்டதுடன், வயதான நபர்களுக்கும் மருத்துவ சிகிச்சை அளிக்க வழிவகை செய்யப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.