ஒரே ஆண்டில் 1500 மாணவர் சேர்க்கை: மருத்துவ கல்லூரி வரலாற்றில் இதுவே முதல் முறை - அமைச்சர் மா.சுப்ரமணியன் பேட்டி


ஒரே ஆண்டில் 1500 மாணவர் சேர்க்கை: மருத்துவ கல்லூரி வரலாற்றில் இதுவே முதல் முறை - அமைச்சர் மா.சுப்ரமணியன் பேட்டி
x

ஒரே ஆண்டில் 1500 மாணவர் சேர்க்கை என்பது மருத்துவ கல்லூரி வரலாற்றில் இதுதான் முதல் முறை என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை,

தமிழகத்தில் மருத்துவக் கல்லூரி இல்லாத 6 மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரி அமைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரேடியோ கதிர் இயக்கவியல் துறை தரம் உயர்த்தப்பட்ட நிகழ்வில் அமைச்சர் மா சுப்பிரமணியன் கலந்து கொண்டார்.

அப்போது பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், ஒரே ஆண்டில் 1500 மாணவர் சேர்க்கை என்பது மருத்துவ கல்லூரி வரலாற்றில் இதுதான் முதல் முறை. இந்தியாவிலேயே ஒரே ஆண்டில் அதிகபட்சமாக 1500 மருத்துவ கல்லூரி மாணவர் சேர்க்கை என்பதும் இந்த ஆண்டுதான் நடைபெற்றிருக்கிறது என்று கூறினார்.

மேலும், கடந்தாண்டு 11 புதிய மருத்துவக் கல்லூரிகள் வாயிலாக ஆயிரத்து 450 மருத்துவ கல்வி இடங்கள் கிடைக்கப்பெற்றதாகவும், நடப்பாண்டில் கூடுதல் இடங்கள் கிடைக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்தார்.

மாவட்டத்திற்கு ஒரு மருத்துவ கல்லூரி வீதம் தென்காசி, மயிலாடுதுறை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை உட்பட 6 மாவட்டங்களில் புதிய மருத்துவ கல்லூரி அமைப்பது தொடர்பாக , மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியாவை சந்தித்து மனு அளிக்கவுள்ளதாகவும் கூறினார்.


Next Story