ரூ.3.62 கோடியில் 15 புதியவளர்ச்சித்திட்ட பணிகள்


ரூ.3.62 கோடியில் 15 புதியவளர்ச்சித்திட்ட பணிகள்
x

செந்துறை ஒன்றியத்தில் ரூ.3.62 கோடியில் நடைபெற உள்ள 15 புதிய வளர்ச்சித்திட்ட பணிகளை போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்.

அரியலூர்

தொடக்க விழா

அரியலூர் மாவட்டம், செந்துறை ஒன்றியத்தில் ரூ.3.62 கோடி மதிப்பீட்டில் 15 புதிய வளர்ச்சித் திட்டப்பணிகள் தொடக்க விழா நடைபெற்றது. விழாவிற்கு அரியலூர் மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா தலைமை தாங்கினார். இதில் போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வளர்ச்சித்திட்ட பணிகளை தொடங்கி வைத்தார். இதையடுத்து பூஜைகள் செய்யப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டன. இதில் செந்துறை ஒன்றியம், சின்ன ஆனந்தவாடி கிராமம், காலனி கீழத்தெருவில் சிமெண்டு சாலை மற்றும் கழிவுநீர் கால்வாய் அமைத்தல், சின்ன ஆனந்தவாடி மேலத்தெருவில் சிமெண்டு சாலை அமைத்தல், ஆனந்தவாடி- சோழன்குறிச்சி ஏரி ஆழப்படுத்துதல் மற்றும் பலப்படுத்துதல், உஞ்சினி கிராமத்தில் உஞ்சினி வடக்கு தெருவில் உள்ள குளத்தை ஆழப்படுத்துதல் மற்றும் பலப்படுத்துதல், உஞ்சினி ஊராட்சியில் ரேஷன் கடை கட்டிடம் அமைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற உள்ளது.

வளர்ச்சித்திட்ட பணிகள்

மேலும், குமிழியம் ஊராட்சியில் அமைந்துள்ள அரசு மேம்படுத்தப்பட்ட முதன்மை சுகாதார மருத்துவமனைக்கு மேலும் விரிவுபடுத்தும் விதமாக புதிய வட்டார சுகாதார மைய கட்டிடம் அமைக்கும் பணியினை தொடங்கி வைத்து, காசநோய் ஒழிப்புத்திட்டத்தின் சார்பில் ஊட்டச்சத்து அடங்கிய பொருட்களை நோயாளிகளுக்கு வழங்கினார். பின்னர் பரணம் கிராமத்தில் பரணம்- செல்லியம்மன் கோவில் குளத்தை ஆழப்படுத்துதல் மற்றும் கரைகளை பலப்படுத்துதல், பரணம் கிராமத்தில் தெற்கு பரணத்தில் சிமெண்டு சாலை அமைத்தல், வடக்கு பரணத்தில் ரேஷன் கடை கட்டிடம் அமைக்கும் பணியினையும், செம்மண்பள்ளம் கிராமத்தில் நாகல்குழி முதல் செம்மண்பள்ளம் வரை சாலை அமைத்தல் என ரூ.3.62 கோடி மதிப்பீட்டில் 15 புதிய வளர்ச்சித் திட்டப்பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

இந்நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் இலக்குவன், உடையார்பாளையம் வருவாய் கோட்டாட்சியர் பரிமளம், துணை இயக்குனர் (சுகாதாரம்), அஜித்தா, ஊரக வளர்ச்சித் துறை செயற்பொறியாளர் பிரபாகர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஊராட்சிமன்றத் தலைவர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Next Story