14-வது ஊதிய ஒப்பந்தம்: வரும் 23-ம் தேதி போக்குவரத்து தொழிலாளர்களுடன் 7-ம் கட்ட பேச்சுவார்த்தை
போக்குவரத்து கழக தொழிலாளர்களுக்கான 14-வது ஊதிய ஒப்பந்தத்தின் 7-ம் கட்ட பேச்சுவார்த்தை வரும் 23-ம் தேதி குரோம்பேட்டையில் நடைபெற உள்ளது.
சென்னை,
அரசு போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு, மூன்று ஆண்டுக்கு ஒரு முறை, ஊதிய ஒப்பந்த பேச்சு நடத்தப்பட்டு, ஊதிய உயர்வு நிர்ணயம் செய்யப்படுகிறது. இதன்படி, 13-வது ஊதிய ஒப்பந்தம், 2019 ஆகஸ்ட் மாதத்தில் முடிந்தது. 14-வது ஊதிய ஒப்பந்தம் கடந்த மாதம் போடப்பட்டிருக்க வேண்டும். ஆனால், கொரோனா தொற்று பாதிப்பு, சட்டசபை தேர்தல், அமைச்சர் மாற்றம் உள்ளிட்ட காரணங்களால், ஒப்பந்த பேச்சு முழுவீச்சில் நடைபெறவில்லை.
இதனையடுத்து போக்குவரத்துக் கழக தொழிலாளர்களுக்கான 14-வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை 6 கட்டங்களாக நடைபெற்றுள்ளது. இறுதியாக கடந்த 3-ம் தேதி நடைபெற்ற பேச்சுவார்த்தையின்போது உடன்பாடு எட்டப்படவில்லை எனவும், பெரும்பாலான கோரிக்கைகள் ஏற்கப்பட்டிருப்பதாகவும் போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், இந்த நிலையில், போக்குவரத்து தொழிலாளர்களுக்கான 14-வது ஊதிய ஒப்பந்தத்தின் 7-ம் கட்ட பேச்சுவார்த்தை வரும் 23-ம் தேதி (செவ்வாய்க்கிழமை) சென்னை குரோம்பேட்டையில் உள்ள மாநகர போக்குவரத்துக் கழக பயிற்சி மைய வளாகத்தில் நடைபெற உள்ளது.
இந்த பேச்சுவார்த்தையில், போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், போக்குவரத்து துறை அதிகாரிகள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட 66 தொழிற்சங்கத்தினர் பங்கேற்க உள்ளனர். இந்த 7-ம் கட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படும் என தொழிற்சங்கத்தினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.