அண்ணா பிறந்தநாளையொட்டி அரியலூரில் 14-ந்தேதி சைக்கிள் போட்டி


அண்ணா பிறந்தநாளையொட்டி அரியலூரில் 14-ந்தேதி சைக்கிள் போட்டி
x

அண்ணா பிறந்தநாளையொட்டி சைக்கிள் போட்டி அரியலூரில் 14-ந்தேதி நடக்கிறது.

அரியலூர்

அறிஞர் அண்ணா பிறந்தநாளையொட்டி ஆண்டுதோறும் சைக்கிள் போட்டி நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி அரியலூர் மாவட்டத்தில் சைக்கிள் போட்டிகள் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் வருகிற 14-ந்தேதி காலை 7 மணியளவில் நடைபெறுகிறது. இந்த போட்டி 13, 15, 17 வயதுக்குட்பட்ட மாணவ-மாணவிகளுக்கு 3 பிரிவுகளாக நடத்தப்படும். இந்த போட்டியில் கலந்து கொள்ளும் மாணவ-மாணவிகள் சாதாரண கைப்பிடி கொண்ட சைக்கிளாகவும், இந்தியாவில் தயார் செய்யப்பட்ட சாதாரண சைக்கிளை மட்டுமே பயன்படுத்த வேண்டும். அகலமான கிராங்க் பொருத்தப்பட்ட சைக்கிளை பயன்படுத்தக்கூடாது. மாணவ-மாணவிகள் போட்டி தொடங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பே போட்டி நடைபெறும் இடத்திற்கு வந்து சேர வேண்டும். மேலும் வயது சான்றிதழை பள்ளி தலைமையாசிரியரிடம் இருந்து பெற்று, ஆதார் அட்டை நகலுடன் சேர்த்து கட்டாயம் கொண்டு வர வேண்டும்.

போட்டியானது 13 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கு 15 கி.மீ., மாணவிகளுக்கு 10 கி.மீ., 15 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கு 20 கி.மீ., மாணவிகளுக்கு 15 கி.மீ., 17 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கு 20 கி.மீ., மாணவிகளுக்கு 15 கி.மீ. என்ற தொலைவுகளின் அடிப்படையில் நடைபெறும். போட்டி நடைபெற இருக்கும் தடங்கள் பற்றி போட்டிநாள் அன்று தெரிவிக்கப்படும். இதில் முதல் 3 இடங்களில் வெற்றி பெறுபவர்களுக்கு பரிசுத்தொகையாக முறையே ரூ.5 ஆயிரம், ரூ.3 ஆயிரம், ரூ.2 ஆயிரமும் வழங்கப்படும். 4 முதல் 10 இடங்களை பெறுபவர்களுக்கு தலா ரூ.250 வீதம் காசோலையாகவோ அல்லது வங்கி மூலமாகவோ வழங்கப்படும்.


Next Story