வெள்ளப்பெருக்கால் 13 கிராமங்கள் துண்டிப்பு: கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே ஆபத்தான முறையில் பயணிக்கும் மாணவர்கள்


வெள்ளப்பெருக்கால் 13 கிராமங்கள் துண்டிப்பு: கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே ஆபத்தான முறையில் பயணிக்கும் மாணவர்கள்
x

கொசஸ்தலை ஆற்று வெள்ளப்பெருக்கால் 13 கிராமங்கள் துண்டிக்கப்பட்டன. ஆற்றின் குறுக்கே ஆபத்தான முறையில் மாணவர்கள் பயணிக்கின்றனர்.

திருவள்ளூர்

வடகிழக்கு பருவமழையின் காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஆறு, ஏரி, குளங்கள் அனைத்தும் வேகமாக நிரம்பி வருகிறது.

திருவள்ளூர் அருகே விடையூர்-கலியனூர் இடையே செல்லும் கொசஸ்தலை ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக மேல்விளாகம், கலியனூர், கலியனூர் காலனி, மணவூர், நெமிலியகரம், குப்பம் கண்டிகை, இராஜபத்மாபுரம், மருதவல்லிபுரம், ஒண்டிகுடிசை, சின்னம்மாபேட்டை, ஜாகீர் மங்கலம், பழையனூர், காபுல் கண்டிகை, உள்ளிட்ட 13 கிராமங்கள் துண்டிக்கப்பட்டு உள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் 20 கிலோ மீட்டர் சுற்றிச் செல்லும் அவலம் ஏற்பட்டுள்ளது.

விடையூர்-கலியனூரை இணைக்கும் வகையில் கடந்த 2016-17-ம் ஆண்டு ரூ.3 கோடி 60 லட்சம் திட்டம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வந்த மேம்பால பணி கடந்த 5 ஆண்டுகளாக பாதியில் நிறுத்தப்பட்டு கிடப்பில் போடப்பட்டு உள்ளது.

தற்போது கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இருப்பதால் அப்பகுதியை சேர்ந்த பள்ளி மாணவ, மாணவிகள் விடையூர் பகுதியில் உள்ள மேல்நிலைப்பள்ளிக்கு ஆற்றின் குறுக்கே பாதியில் நிறுத்தப்பட்டுள்ள மேம்பால ஏணியில் ஏறி ஆபத்தான முறையில் சென்று வரும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் முதியவர்கள், பெண்கள், வேலைக்கு செல்பவர்கள் என பலதரப்பட்ட மக்களும் மிகவும் அவதியுற்று வருகிறார்கள்.

வருடா வருடம் பருவமழை காலங்களில் கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் 13 கிராமங்கள் துண்டிக்கப்படுவதும், பள்ளி மாணவர்கள், பொதுமக்கள், வேலைக்குச் செல்லாமல் வீட்டில் முடங்கி வருவதும் தொடர்கதையாக இருந்து வருகிறது.

இத்தகைய அவல நிலையை போக்க கிடப்பில் போடப்பட்டுள்ள மேம்பாலத்தை அரசு விரைந்து முடித்து தர வேண்டுமென அப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.


Next Story