129 இடங்களில் காய்ச்சல் சிறப்பு முகாம்- 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு பரிசோதனை
மதுரையில் நேற்று 129 இடங்களில் காய்ச்சல் சிறப்பு முகாம்கள் நடந்தது. இதில், 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு பரிசோதனை செய்யப்பட்டது.
டெங்கு காய்ச்சல்
தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் பரவல் அதிகமாக உள்ளது. நாள்தோறும் சராசரியாக 30 பேர் வரை டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதன் காரணமாக அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் நோயாளிகளின் கூட்டம் அதிகமாக உள்ளது. இதனை தடுக்க தமிழக அரசின் மக்கள் நல்வாழ்வுத்துறை தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அதன்படி தமிழகத்தில் 1000 இடங்களில் காய்ச்சல் கண்டறியும் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி நேற்று தமிழகம் முழுவதும் ஆயிரம் இடங்களில் டெங்கு காய்ச்சல் தடுப்பு முகாம் நடந்தது.
மதுரையிலும் நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் 129 இடங்களில் காய்ச்சல் கண்டறியும் முகாம் நேற்று காலை முதல் மாலை வரை நடந்தது. இதில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டு, காய்ச்சல் பரிசோதனை செய்து கொண்டனர். குறிப்பாக எந்த பகுதிகளில் அதிகமாக காய்ச்சல் பரவி வருகிறது என்பதை கண்டறிந்து அந்த இடங்களில் இதுபோன்ற முகாம்கள் நடத்தப்பட்டது.
6 ஆயிரம் பேருக்கு பரிசோதனை
இது குறித்து மதுரை மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் குமரகுருபரன் கூறியதாவது:-
மதுரை மாவட்டம் முழுவதும் டெங்கு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு ஆயிரம் இடங்களில் காய்ச்சல் முகாம்கள் நடத்தியது. அதன்படி, மதுரையில் 129 இடங்களில் காய்ச்சல் முகாம்கள் நடந்துள்ளது. இதில் 14 நடமாடும் மருத்துவ குழுவும், 29 பள்ளி சிறார் நலத்திட்ட குழுவும் அடங்கும். இவர்கள் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று, காய்ச்சல் முகாம் நடத்தினர்.
இந்த முகாம்களில் காய்ச்சல் மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளது. அந்த மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட பின்பு, டெங்கு பாதிப்பு உள்ளதா என்பது குறித்த முழு விவரம் தெரியவரும். காலை முதல் மாலை வரை நடந்த இந்த முகாம்களில் கிட்டத்தட்ட 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பரிசோதனை செய்து கொண்டனர்.
மதுரையில் பெரிய அளவில் டெங்கு பாதிப்பு இருப்பது போன்று தெரியவில்லை. மழை நேரத்தில் வரும் காய்ச்சல், சளி போன்ற அறிகுறிகள் இருந்துள்ளது. இருப்பினும் பொதுமக்கள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். அரசு கூறும் அறிவுரைகளை கடைபிடித்தால், டெங்கு பாதிப்பில் இருந்து விடுபடலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.