ஜவுளி வர்த்தக ஆலோசகரிடம் ரூ.11 லட்சம் மோசடி


ஜவுளி வர்த்தக ஆலோசகரிடம் ரூ.11 லட்சம் மோசடி
x
தினத்தந்தி 14 Jun 2023 7:15 PM GMT (Updated: 14 Jun 2023 7:16 PM GMT)

கோவையில் ஆன்லைன் மூலம் பகுதி நேர வேலைவாய்ப்பு இருப்பதாக கூறி ஜவுளி வர்த்தக ஆலோசகரிடம் ரூ.11 லட்சத்தை ஆன்லைன் மூலம் மோசடி செய்த நபர் குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோயம்புத்தூர்

கோவை

கோவையில் ஆன்லைன் மூலம் பகுதி நேர வேலைவாய்ப்பு இருப்பதாக கூறி ஜவுளி வர்த்தக ஆலோசகரிடம் ரூ.11 லட்சத்தை ஆன்லைன் மூலம் மோசடி செய்த நபர் குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆன்லைனில் வேலை

கோவை கணபதி மணியக்காரம்பாளையத்தை சேர்ந்தவர் கோபால கிருஷ்ணன் (வயது 57). ஜவுளி வர்த்தக ஆலோசகர். இவரது வாட்ஸ்-அப் எண்ணிற்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு குறுந்தகவல் வந்தது. அதில் பகுதி நேரமாக ஆன்லைனில் வேலை இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து கோபாலகிருஷ்ணன் அதில் உள்ள லிங்கை கிளிக் செய்து அதில் தனது விவரங்களை பதிவு செய்தார்.

இதையடுத்து அவருக்கு யூடியூப் சேனல்களுக்கு நல்ல முறையாக ரிவ்யூ கொடுக்க வேண்டும் என்ற டாஸ்க் கொடுக்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் கூறிய யூடியூப் சேனல்களுக்கு அவர் ரிவ்யூ கொடுத்தார். இதையடுத்து அவரது வங்கி கணக்கிற்கு மர்ம நபர் ரூ.5 ஆயிரம் பணத்தை ஆன்லைன் மூலம் அனுப்பி வைத்தார்.இதையடுத்து அவருக்கு 2-வது பணி வழங்கப்பட்டது. இதற்கு அவருக்கு ரூ.10 ஆயிரம் வழங்கப்பட்டது.

பண மோசடி

இதனை தொடர்ந்து அவருக்கு மர்ம நபர் இனி பணம் செலுத்தினால் மட்டுமே அடுத்த கட்டமாக ஆன்லைன் மூலம் பணி வழங்க முடியும் என்று தெரிவித்து உள்ளார். இதனை நம்பிய கிருஷ்ணன் பல்வேறு கட்டங்களாக ரூ.10 லட்சத்து 95 ஆயிரம் பணத்தை ஆன்லைன் மூலம் மர்ம நபர் கூறிய வங்கி கணக்கிற்கு அனுப்பி உள்ளார். ஆனால் அந்த நபர் பணத்தை எதுவும் திருப்பி தராமல் மோசடி செய்தார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த கிருஷ்ணன் இதுகுறித்து கோவை மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story