அப்துல் கலாமுக்கு பாடம் சொல்லி கொடுத்த 100 வயது பேராசிரியர் மரணம்


அப்துல் கலாமுக்கு பாடம் சொல்லி கொடுத்த 100 வயது பேராசிரியர் மரணம்
x
தினத்தந்தி 11 April 2024 9:41 AM IST (Updated: 11 April 2024 9:48 AM IST)
t-max-icont-min-icon

அப்துல் கலாமுக்கு பாடம் சொல்லி கொடுத்த பேராசிரியர் வயதுமூப்பு காரணமாக மரணம் அடைந்தார்.

திண்டுக்கல்,

இந்தியாவின் ஏவுகணை நாயகன் என்று போற்றப்படுபவர், முன்னாள் ஜனாதிபதி ஏ.பி.ஜே.அப்துல்கலாம். ஆராய்ச்சி மட்டுமின்றி கற்பித்தலில் அதிக ஆர்வம் கொண்டவர் ஆவார். இவர், திருச்சி தூய வளனார் கல்லூரியில் இயற்பியல் பயின்றார். அப்போது அவருக்கு இயற்பியல் பாடம் கற்பித்தவர் பேராசிரியர் லடிஸ்லாஸ் சின்னத்துரை. இதனால் அவர் மீது ஏ.பி.ஜே.அப்துல்கலாம் தனி மரியாதை வைத்து இருந்தார்.

திருச்சி மேரிஸ்அவென்யு பகுதியை சேர்ந்த பேராசிரியர் லடிஸ்லாஸ் சின்னத்துரை, ஏசு சபையில் சேர்ந்து 1970-ம் ஆண்டு பாதிரியார் ஆனார். திருச்சி, திண்டுக்கல்லில் இறை பணியில் ஈடுபட்டார். மேலும் ஓய்வுக்கு பின்னர் அவர், திண்டுக்கல்லில் உள்ள பெஸ்கி இல்லத்தில் தங்கி இருந்தார். இதனால் ஏ.பி.ஜே.அப்துல்கலாம் திண்டுக்கல்லுக்கு 2 முறை வந்த போது, தனது முன்னாள் பேராசிரியரான லடிஸ்லாஸ் சின்னத்துரையை சந்தித்து ஆசிபெற்றார். அப்போது இருவரும் தனிமையில் நீண்டநேரம் உரையாடியது குறிப்பிடத்தக்கது.

இந்தநிலையில் 101 வயதான லடிஸ்லாஸ் சின்னத்துரை வயதுமூப்பு காரணமாக நேற்று மாலை மரணம் அடைந்தார். இதையடுத்து அவருடைய உடலுக்கு மதுரை மறைமாநில ஏசு சபை தலைவர் தாமஸ் அமிர்தம், பெஸ்கி கல்லூரி அதிபர் மைக்கேல்தாஸ், பாதிரியார்கள் அஞ்சலி செலுத்தினர். இன்று (வியாழக்கிழமை) லடிஸ்லாஸ் சின்னத்துரையின் உடல் நல்லடக்கம் செய்யப்படுகிறது.


Next Story