சென்னையில் தினமும் 100 சம்பவங்கள்: போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரிடம் செல்போன் பறிப்பு - மனைவியுடன் பஸ்சில் ஏறும்போது துணிகரம்
சென்னையில் மனைவியுடன் பஸ்சில் ஏறிய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரிடம் செல்போனை பறித்து சென்று விட்டனர். சென்னையில் இதுபோல் தினமும் 100 செல்போன் பறிப்புகள் நடப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
சென்னையில் செல்போன் பறிப்பு சம்பவங்கள் அதிகளவில் நடைபெறுகிறது. புதுப்புது குற்றவாளிகள் செல்போன் பறிப்பு சம்பவங்களில் ஈடுபடுவதால், போலீசாரால் அவர்களை கண்டுபிடிக்க முடியாத நிலை உள்ளது. தனியாக செல்லும் பெண்களிடம் செல்போனை பறிக்கிறார்கள். பஸ்சில் ஏறும் போது கவனம், பஸ்சில் ஏறுவதில் மட்டுமே இருக்கும். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கூட்டத்தோடு கூட்டமாக நின்று குற்றவாளிகள் செல்போன்களை நைசாக பறிக்கிறார்கள்.
சென்னையில் தினமும் 100 செல்போன் பறிக்கும் குற்றச்செயல்கள் நடப்பதாக கூறப்படுகிறது. செல்போனை இழந்த நிறைய பேர் புகார் கூட கொடுக்காமல் சென்றுவிடுகிறார்கள். பறிக்கப்படும் செல்போன்களுக்கு உடனே பணம் கொடுத்து வாங்கும் கும்பலும் உள்ளது. இதுபோன்ற செல்போன்கள் உடனடியாக வெளிமாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. கையில் உடனே தேவையான பணம் கிடைப்பதால் குற்றவாளிகள் செல்போன் பறிப்பு குற்றத்தில் அதிக அளவில் ஈடுபடுவதாக சொல்லப்படுகிறது.
சென்னை கே.கே.நகரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் தனது மனைவியுடன் பஸ்சில் ஏறி உள்ளார். அப்போது அவர் பையில் வைத்திருந்த விலை உயர்ந்த செல்போன் பறிபோய் விட்டது. உடனடியாக அவர் கே.கே.நகர் போலீஸ்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். செல்போனை பறிகொடுத்த ராஜேந்திரன் பாதுகாப்பு பிரிவில் பணிபுரிகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.