அரசு நிலத்தை ஆக்கிரமித்து வீடுகள் கட்டியுள்ளவர்களிடம் 10 மடங்கு மின் கட்டணம் வசூலிக்க வேண்டும் - சென்னை ஐகோர்ட்டு


அரசு நிலத்தை ஆக்கிரமித்து வீடுகள் கட்டியுள்ளவர்களிடம் 10 மடங்கு மின் கட்டணம் வசூலிக்க வேண்டும் - சென்னை ஐகோர்ட்டு
x

கோப்புப்படம்

அரசு நிலத்தை ஆக்கிரமித்து வீடுகள் கட்டியுள்ளவர்களிடம் பத்து மடங்கு மின் கட்டணம் வசூலிக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

சென்னை,

திருவள்ளூர் மாவட்டம் திருமுல்லைவாயிலில் நிலத்தை ஆக்கிரமித்து கட்டியுள்ள வீட்டை காலி செய்ய வேண்டும் என்று ஆவடி தாசில்தார் நோட்டீஸ் அனுப்பினார். அந்த நோட்டீசை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையுடன் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட மூன்று பேர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

இந்த வழக்கு நீதிபதிகள் வைத்தியநாதன் மற்றும் சத்தியநாராயண பிரசாத் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு நிலம் ஆக்கிரமிக்கப்படுவதை தடுப்பதற்காக ஆக்கிரமிப்பாளர்களுக்கு 10 மடங்கு மின் கட்டணம் வசூலிக்க வேண்டும் என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

மேலும் இது தொடர்பாக சட்ட திருத்தம் கொண்டு வரவேண்டும் என்றும் அவர்கள் தெரிவித்தனர். பின்னர் பத்து மடங்கு மின்கட்டணத்தை செலுத்த தயாராக இருப்பதாக மனு தாக்கல் செய்தால், வீட்டை காலி செய்ய பிறப்பித்த நோட்டீசிற்கு இடைக்கால தடை விதிப்பதாக மனுதாரர்களுக்கு நீதிபதிகள் தெரிவித்தனர். இதுகுறித்து மனு தாக்கல் செய்யவும் நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

அதன் பிறகு இந்த பத்து மடங்கு மின் கட்டணத்தை செலுத்த தயாராக இருப்பதாக மனுதாரர்கள் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில், குறிப்பிட்ட அந்த நிலம் பட்டா நிலம் என்று தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அந்த நிலத்தை அளந்து ஆக்கிரமிப்பில் உள்ளதா இல்லையா என்பதை கண்டறிந்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று ஆவடி தாசில்தாருக்கு உத்தரவிட்ட நீதிபதிகள் விசாரணையை தள்ளி வைத்தனர்.


Next Story