கிழக்கு கடற்கரை சாலையில் 10 கி.மீ. தூரம் மதில் சுவர்; செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அடிக்கல் நாட்டினார்
கிழக்கு கடற்கரை சாலையில் 10 கி.மீ. தூரம் மதில் சுவர் அமைக்கும் பணிக்காக கலெக்டர் ராகுல்நாத் அடிக்கல் நாட்டினார்.
1,000 ஏக்கர் நிலம்
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் சாலவான்குப்பம் முதல் திருவிடந்தை வரை உள்ள 1,000 ஏக்கர் நிலங்களை வைணவ பக்தரான பிரம்மசாரியாக வாழ்ந்த நெம்மேலி ஆளவந்தார் நாயக்கர் என்பவர் 100 ஆண்டுகளுக்கு முன்னர் திருவிடந்தை நித்தியகல்யாண பெருமாள் கோவில், மாமல்லபுரம் தலசயன பெருமாள்கோவிலுக்கு தானமாக எழுதி வைத்துவிட்டு மறைந்தார். தற்போது இந்துசமய அறநிலையத்துறை மறைந்த அவரது பெயரிலேயே ஆளவந்தார் நாயக்கர் என்ற பெயரில் ஒரு அறக்கட்டளை ஏற்படுத்தி அதற்கு தனி செயல் அலுவலரை நியமித்து பாதுகாத்து பராமரித்து வருகிறது. இந்த நிலையில் கிழக்கு கடற்கரை சாலையில் சாலவான்குப்பம் முதல் திருவிடந்தை வரை உள்ள 1000 ஏக்கர் நிலங்களில் சவுக்கு மரங்கள் வளர்த்து பாதுகாத்து பராமரித்து வருகிறது.
காதலர்களின் புகலிடம்
இந்த சவுக்கு தோப்பு சென்னை மாநகர், சென்னை புறநகர் பகுதிகளில் இருந்து வரும் காதலர்களின் புகலிடமாக திகழ்ந்து வந்தது. இங்கு தனிமையில் நுழையும் காதல் ஜோடிகளை மிரட்டி பணம் பறிப்பது, காதலனுடன் வரும் பெண்களை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்வது, சென்னையில் கொலை செய்யப்படும் நபர்களை யாரும் அவர்களை அடையாளம் கண்டுபிடிக்காத வகையில் முகத்தை சிதைத்து இங்குள்ள சவுக்கு தோப்புக்குள் பிணத்தை போட்டு செல்வது போன்ற விரும்பத்தகாத செயல்கள் நடைபெற்று வந்தன.
இந்த குற்ற சம்பவங்கள் ஒரு புறம் நடந்தாலும் நில ஆக்கிரமிப்பாளர்கள் பலர் போலி ஆவணங்கள் மூலம் இந்த இடத்தை ஆக்கிரமிக்கும் முயற்சியிலும் ஈடுபட்டும் வந்தனர். மேலும் 1,000 ஏக்கர் நிலத்தை காவலர்கள் இரவு பாதுகாப்பது இயலாத காரியம் என்பதால் மாற்று முடிவு எடுத்து செயல்படுத்த தமிழக அரசும், அறநிலையத்துறையும் ஆலோசித்தது.
மதில் சுவர்
இதையடுத்து பல கோடி ரூபாய் மதிப்பிலான 1,000 ஏக்கர் பரப்பளவுள்ள இந்த சவுக்கு தோப்பு பகுதியை பாதுகாக்கும் வகையில் காதல் ஜோடிகள், சமூக விரோதிகள் என யாரும் உள்ளே நுழையாத வகையில் மாமல்லபுரம் அடுத்த கிழக்கு கடற்கரை சாலையில் சாலவான்குப்பம் முதல் திருவிடந்தை வரை உள்ள 10 கிலோமீட்டர் தூரத்திற்கு ரூ.10 கோடி மதிப்பீட்டில் நீண்ட மதில்சுவர் அமைக்க இந்துசமய அறநிலையத்துறைக்கு தமிழக அரசு ஆணை பிறப்பித்து ஒப்புதல் வழங்கியது.
அடிக்கல்நாட்டு விழா
இதையடுத்து ரூ.10 கோடி மதிப்பீட்டில் நீண்ட மதில் சுவர் அமைக்கும்பணி சாலவான்குப்பத்தில் இந்து அறநிலையத்துறை சார்பில் அத்துறை அதிகாரிகள் முன்னிலையில் பூமி பூஜை மற்றும் அடிக்கல் நாட்டு விழா நடந்தது. இதில் தலசயன பெருமாள் கோவில் செயல் அலுவலர் சக்திவேல் தலைமையில், திருப்போரூர் எல்.எல்.ஏ. எஸ்.எஸ்.பாலாஜி, திருப்போரூர் ஒன்றியக்குழு தலைவர் எஸ்.ஆர்.எல்.இதயவர்மன், பட்டிபுலம் ஊராட்சிமன்ற தலைவர் வரலட்சுமி லட்சுமிகாந்தன், ஒன்றிய கவுன்சிலர் எஸ்.தேசிங்கு முன்னிலையில், செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் 1000 ஏக்கர் நிலத்தை பாதுகாக்கும் வகையில் நீண்ட மதில் சுவர் கட்ட பூமிபூஜை நடத்தி அடிக்கல் நாட்டினார். இதில் இந்துசமய அறநிலையத்தறை இணை ஆணையர் வான்மதி, துணை ஆணையர் லட்சுமிகாந்தபாரதிதாசன், வார்டு கவுன்சிலர் தனலட்சுமிவேதகிரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.