காஞ்சீபுரத்தில் டெங்கு காய்ச்சலுக்கு 1½ வயது குழந்தை சாவு


காஞ்சீபுரத்தில் டெங்கு காய்ச்சலுக்கு 1½ வயது குழந்தை சாவு
x

காஞ்சீபுரத்தில் டெங்கு காய்ச்சலுக்கு 1½ வயது குழந்தை பரிதாபமாக இறந்தான்.

காஞ்சிபுரம்

காஞ்சீபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட 49-வது வார்டு பகுதி அன்னை காமாட்சி அவென்யு பகுதியில் ஏராளமானோர் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் முதல் குறுக்கு தெருவில் மதுராந்தகம் வட்டத்தில் வேளாண் அலுவலராக பணிபுரியும் விஜயன்- பிரியா தம்பதியின் 1½ வயது குழந்தையான சாத்விக் கடந்த ஞாயிற்றுக்கிழமை காய்ச்சல் காரணமாக காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு அதன் பின்னர் சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டான்.

அங்கு பரிசோதிக்கப்பட்டதில் குழந்தைக்கு டெங்கு அறிகுறி இருப்பது தெரியவந்தது. அதற்கான சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு குழந்தை சாத்விக் பரிதாபமாக இறந்தான்.

இதை தொடர்ந்து அந்த பகுதி மாநகராட்சி ஊழியர்கள் டெங்கு கொசு தடுப்பு பணியில் ஈடுபட்டனர். நத்தப்பேட்டை ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் அங்கு சிறப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டு அங்கு வசித்து வரும் நபர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

குறிப்பாக அந்த பகுதியில் 6-க்கும் மேற்பட்டோருக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாகவும், அதற்கான சிகிச்சையை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

காஞ்சீபுரம் மாநகராட்சி ஊழியர்கள் அங்கு தடுப்பு பணிகள் மேற்கொண்டுள்ளனர். மாநகராட்சி உறுப்பினர் பூங்கொடிதசரதன் ஆய்வு செய்து, குழந்தையின் தாயாரை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.


Next Story