சென்னை விமான நிலையத்தில் ரூ.1 கோடி தங்கம் பறிமுதல்


சென்னை விமான நிலையத்தில் ரூ.1 கோடி தங்கம் பறிமுதல்
x

சென்னை விமான நிலையத்தில் ரூ.1 கோடி மதிப்புள்ள 1.73 கிலோ தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

மீனம்பாக்கம்,

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு துபாயில் இருந்து விமானம் வந்தது. அந்த விமானம் மீண்டும் உள்நாட்டு விமானமாக சென்னையில் இருந்து டெல்லிக்கு புறப்பட்டு செல்ல வேண்டும். விமான ஊழியர்கள் விமானத்தை சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். அப்போது விமானத்தின் இருக்கை ஒன்று தூக்கி கொண்டு இருந்தது. அதை விமான ஊழியர்கள் சரி செய்தபோது இருக்கைக்கு அடியில் பார்சல் ஒன்று இருப்பது தெரியவந்தது.

தங்க பசை

இதுபற்றி தகவல் அறிந்ததும் விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் விரைந்து வந்து மெட்டல் டிடெக்டர் மூலம் அந்த பார்சலை ஆய்வு செய்தனர். அதில் அபாயகரமான பொருட்கள் இல்லை என உறுதியானதால் அந்த பார்சலை பிரித்து பார்த்தனர். அதில் பிளாஸ்டிக் பவுச்சுக்குள் தங்க பசை இருந்ததை கண்டுபிடித்தனர்.

உடனடியாக விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். சுங்க இலாகா அதிகாரிகள் அந்த தங்கத்தை பறிமுதல் செய்தனர். அதில் சுமார் ரூ.73 லட்சம் மதிப்புள்ள 1.25 கிலோ தங்கம் இருந்தது.

ரூ.1 கோடி தங்கம் பறிமுதல்

அதேபோல் சிங்கப்பூரில் இருந்து வந்த விமானத்தில் சென்னையைச் சேர்ந்த 45 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் சுற்றுலா பயணியாக சென்றுவிட்டு திரும்பி வந்தார். அவர் மீது சந்தேகம் கொண்ட பெண் சுங்க இலாகா அதிகாரிகள், அவரை தனி அறைக்கு அழைத்துச் சென்று சோதித்தனர். அதில் அந்த பெண் உள்ளாடைகளுக்குள் 5 பெரிய தங்க சங்கிலிகளை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர். அவரிடம் இருந்து ரூ.27 லட்சம் மதிப்புள்ள 473 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர்.

சென்னை விமான நிலையத்தில் அடுத்தடுத்து நடத்தப்பட்ட சோதனையில் சுமார் ரூ.1 கோடி மதிப்புள்ள 1.73 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக சுங்க இலாகா அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story