தென் மாநில முதல்-மந்திரிகள் ஒன்றிணைய வேண்டும் - கி.வீரமணி
தென் மாநில முதல்-மந்திரிகள் ஒருங்கிணைந்து உரிமைக்குரல் கொடுப்பது அவசியம் என திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கூறியுள்ளார்.
சென்னை,
திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தென் மாநிலங்களில் தற்போதுள்ள 129 மக்களவை உறுப்பினர்களில், வருகிற காலகட்டங்களில் 33 இடங்களை இழக்க ஏற்பாடுகள் விரைவாக நடந்துகொண்டுள்ளதாக செய்திகள் வருகிறது. மக்கள்தொகை கட்டுப்பாடு என்ற மத்திய அரசின் கொள்கைகளை சிறப்பாக-வலிமையாகக் கடைப்பிடித்து, மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தியதற்கான பரிசு தான் இந்த இழப்பு.
129 இடங்களில் 33 இடங்களை இழக்கும் மாநிலங்கள் கேரளா, கர்நாடகா, தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா. 15-வது நிதிக் கமிஷன் 1971-ம் ஆண்டின் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு என்ற பழைய ஆதார அடிப்படையை நீக்கிவிட்டு, 2021-ம் ஆண்டின் ஆதார் குறியீட்டை அடிப்படையாகக் கொள்வதால், அரசியலிலும், ஜனநாயகத்திலும் இந்த விசித்திர வளர்ச்சிக்கான தண்டனை போலும்.
தென் மாநில முதல்-மந்திரிகள் இதுபோன்ற பொது பிரச்சினைகளில் ஒருங்கிணைந்து உரிமைக்குரல் கொடுத்து இந்த ஆபத்துகளைக் களைய முன்வருதல் அவசரம், அவசியம். இதிலும் தமிழ்நாட்டு திராவிட மாடல் ஆட்சியும், அதன் ஒப்பற்ற முதல்-அமைச்சரும் முயற்சிகளை முன்னெடுப்பதும் இன்றியமையாததாகும். இது காலத்தின் கட்டாயம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.