உலக சிட்டுக்குருவிகள் தினம்
சிட்டுக்குருவி நம் குடும்பத்தில் ஓர் உறுப்பினர் என்ற எண்ணத்துடன் அவற்றை காக்க நாம் அனைவரும் உலக சிட்டுக்குருவி நாளில் உறுதிமொழி எடுக்கலாம்.
'சிட்டுக்குருவி... சிட்டுக்குருவி... சேதி தெரியுமா?' என்றொரு பழைய பாடல் உண்டு. அப்பாடலில் ஒரு பெண் தனது நிலையை சேதியாக சிட்டுக்குருவியிடம் பாடல் வடிவில் தெரிவிப்பதாகக் காட்சி அமைக்கப்பட்டிருக்கும். இது ஒரு கற்பனையாக இருந்தாலும்கூட, அந்த காலகட்டங்களில் சிட்டுக்குருவியை வீடுகளில் வளர்த்துவரும் அளவிற்கு அவற்றின் இனம் பலகிப்பெருகி இருந்தன. ஆனால் இன்றைய காலகட்டத்தில் சிட்டுக்குருவியை பற்றி நாம் ஒரு செய்தியாகத்தான் தெரிந்துகொள்ள வேண்டியுள்ளது.
அதன் ஒரு தொடர்ச்சியாகத்தான், `உலக சிட்டுக்குருவிகள் நாள்' ஆண்டுதோறும் மார்ச் 20-ம் நாள் உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. சிட்டுக்குருவிகளின் எண்ணிக்கை சமீபகாலங்களில் குறைந்து வருவதன் காரணமாகவும், தினமும் தனது வாழ்வுக்காக அந்தக் குருவிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து எடுத்துக்கூறி அதன் வாயிலாக மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வும் 2010-ம் ஆண்டில் இருந்து உலக சிட்டுக் குருவிகள் நாள் கொண்டாடப்பட்டு வருகிறது.
சிட்டுக்குருவிகள் கம்பு, கேழ்வரகு, தினை போன்ற சிறுதானிய வகைகளைத்தான் அதிகம் உண்ணுகின்றன. தற்போதைய சூழலில், இந்த உணவு வகைகள் சிட்டுக்குருவிகளுக்கு கிடைப்பதில் சிரமம் ஏற்படுகிறது. மேலும் இவை புழு, பூச்சிகள், வெட்டுக்கிளிகள் போன்ற விவசாயப் பயிர்களை பாதிக்கும் சிறு பூச்சியினங்களையும் சாப்பிடுகின்றன.
கூரைவீடுகள் இல்லாமை, குளிரூட்டி அறைகள் பயன்பாட்டால் ஜன்னல், மாடம், பரண்கள் போன்றவை இல்லாததால் இவை கூடுகட்டி வாழ இயலவில்லை. மனிதனின் தற்போதைய பழக்கவழக்க மாறுதல், வானை முட்டும் தீப்பெட்டி வடிவிலான அடுக்குமாடி குடியிருப்புகள், தகவல் தொழில்நுட்ப புரட்சி, மரங்களை வெட்டுதல் போன்ற காரணங்களால், சிட்டுக்குருவி எனும் சி(ட்டு)ற்றினம், தற்போது ஆபத்தின் விளிம்பில் மெல்லமெல்ல அழியும் இனமாக மறைந்து வருகிறது. இதனால் உணவு சங்கிலித்தொடர் மற்றும் சுற்றுச்சூழல் சமநிலையும் பாதிக்கப்படுகின்றன.
பலசரக்கு கடைகள் மூடப்படுதல், பல்பொருள் அங்காடிகள் பெருக்கம், இங்கு நெகிழிப்பைகளில் தானியங்களை அடைத்து விற்றல், அதனால் தானியங்கள் சிதற வாய்ப்பின்மை, பூச்சிக்கொல்லி மருந்துகள் தெளித்தல் போன்ற மனித செய்கைகளால் இவை நம்மை விட்டு காணாமல் போய்விட்டன. அலைப்பேசி பயன்பாட்டிற்கு பின், இக்குருவிகள் கிட்டத்தட்ட முற்றிலும் அழியும் நிலைக்கு வந்துவிட்டன. அலைப்பேசி கோபுரங்களில் இருந்து வெளியேறும் கதிர்வீச்சு, குருவியின் கருவையும் அவற்றின் கனவையும் சிதைத்துவிடுகின்றன. முட்டையிட்டாலும், அக்கரு வளர்ச்சி பருவத்தை அடைய முடியாமல் போகிறது.
சரி, சிட்டுக்குருவிகளை பாதுகாக்க நாம் ஒவ்வொருவரும் என்ன செய்ய வேண்டும்? சிறிய அளவில் மாடித்தோட்டங்களை உருவாக்கலாம். அத்தோட்டங்களில் செடி, கொடி வளர மண்புழு உரம் போன்ற இயற்கை உரங்களை பயன்படுத்தலாம். வீடுகளில் மீதமான தானிய வகைகளை இக்குருவிகள் உணவாக உட்கொள்ள தூவி விடலாம். இவை குடிப்பதற்கு மிகச்சிறிய பாத்திரங்களில் குடிநீர் வைக்கலாம். சிட்டுக்குருவி நம் குடும்பத்தில் ஓர் உறுப்பினர் என்ற எண்ணத்துடன் அவற்றை காக்க நாம் அனைவரும் உலக சிட்டுக்குருவி நாளில் உறுதிமொழி எடுக்கலாம். அவ்வாறு செய்தால், 'ஏ குருவி.... சிட்டுக்குருவி...' என்று கூவி மகிழலாம்.