ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு புது வகை வைரஸ் மாறுபாடுக்கு எதிரான நோயெதிர்ப்பு சக்தி 4 மடங்கு அதிகம்.! ஆய்வில் தகவல்


ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு புது வகை வைரஸ் மாறுபாடுக்கு எதிரான நோயெதிர்ப்பு சக்தி 4 மடங்கு அதிகம்.! ஆய்வில் தகவல்
x
தினத்தந்தி 2 Sept 2022 6:29 PM IST (Updated: 2 Sept 2022 6:43 PM IST)
t-max-icont-min-icon

தடுப்பூசி செலுத்தி கொரோனா தொற்றால் பாதிக்கப்படாதவர்களை விட இவர்களது உடலில் நோயெதிர்ப்பு சக்தி அதிகமாக இருக்கும்.

வாஷிங்டன்,

போர்ச்சுகலில் உள்ள ஆராய்ச்சியாளர்கள், கொரோனா வைரஸ் மாறுபாடுகள் மற்றும் தொற்றுநோய் ஏற்பட்ட பின் உடலில் அவற்றால் ஏற்படும் பாதுகாப்பின் அளவு ஆகியவற்றை மதிப்பிட்டு ஆய்வு செய்தனர்.

இந்த ஆராய்சி முடிவுகள் நியூ இங்கிலாந்து ஜர்னல் ஆப் மெடிசின் இதழில் சமீபத்தில் வெளியிடப்பட்டது.

தற்போதைய காலகட்டத்தில் அதிகமக பரவும் பிஏ.5 வகை வைரஸ் மாறுபாட்டால், தடுப்பூசி போடப்பட்ட மக்கள் பாதிக்கப்படுவதற்கான சாத்தியக்கூறு பற்றி இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

அதன்படி, பிஏ.1 மற்றும் பிஏ.2 வகை வைரஸ் மாறுபாட்டால் பாதிப்புக்கு உள்ளானவர்களின் உடலில் பிஏ.5 வகை வைரஸ் மாறுபாடுக்கு எதிராக சிறந்த நோயெதிர்ப்பு சக்தி இருக்கும்.

2020 மற்றும் 2021 காலகட்டத்தில் பிற வகை உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் மாறுபாடுகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் பிஏ.5 வகை வைரஸ் மாறுபாடுக்கு எதிராக போதுமான நோயெதிர்ப்பு சக்தி இருக்கும்.

தடுப்பூசி செலுத்திய பின்னரும், ஒமைக்ரான் வைரசின் முதல் வகை உருமாற்றம் அடைந்த வைரசால் பாதிப்புக்கு உள்ளானவர்களின் உடலில் 4 மடங்கு அதிகமான பாதுகாப்பு இருக்கும். தடுப்பூசி செலுத்தி கொரோனா தொற்றால் பாதிக்கப்படாதவர்களை விட இவர்களது உடலில் வைரசுக்கு எதிரான நோயெதிர்ப்பு சக்தி அதிகமாக இருக்கும்.

மருத்துவ ஆராய்ச்சி மற்றும் மதிப்பீட்டில் உள்ள கொரோனா தடுப்பூசிகள், வைரஸின் பிஏ.1 துணை வகையை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்படுகின்றன. இந்நிலையில் இந்த ஆய்வு முடிவு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

போர்ச்சுகலில் வசிக்கும் 12 வயதுக்கு மேற்பட்ட மக்கள் தொகையில் பதிவான கொரோனா பாதிப்பு விவரங்களின் பதிவுகளை கொண்டு இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வெளியாகியுள்ளது என்று லிஸ்பன் பல்கலைக்கழகத்தின் இணைப் பேராசிரியர் மானுவல் கார்மோ கோம்ஸ் கூறினார்.

ஏற்கெனவே கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு மீண்டும் தொற்று ஏற்படுவதற்கான சாத்தியக்கூறு பற்றி ஆராய்ச்சியாளர்கள் பகுப்பாய்வு செய்தனர். இதன்மூலம், முந்தைய நோய்த்தொற்றுகளால் வழங்கப்பட்ட பாதுகாப்பின் சதவீதத்தை கணக்கிட முடிந்தது.


Next Story