கிராமப்புறங்களில் களைகட்டும் 'பொங்கல்' விளையாட்டுகள்


கிராமப்புறங்களில் களைகட்டும் பொங்கல் விளையாட்டுகள்
x

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கிராமப்புறங்களில் சில விளையாட்டுக்களை பார்ப்போம்.

பொங்கல் பண்டிகை என்றாலே, முதலில் நினைவுக்கு வருவது கரும்பு தான். பொங்கல் அன்று வீட்டின் முன்பு பொங்கலிட்டு வழிபட்டதும், கிராமப்புறங்களில் பல்வேறு விளையாட்டுகள் ஆங்காங்கே நடைபெறும். இதில் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டுக்கு அடுத்ததாக மஞ்சு விரட்டு, வடமாடு, ரேக்ளா ரேஸ் போட்டி, வழுக்கு மரம் ஏறுதல், இளவட்டக்கல் தூக்குதல், தெருக்களில் சிறுவர்கள் முதல் பெரியவர்களுக்கான விளையாட்டு போட்டிகள் போன்றவை புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கிராமப்புறங்களில் பிரபலம். அவற்றில் சில விளையாட்டுக்களை இங்கே பார்ப்போம்.

காட்சி பொருளான இளவட்டக்கல்

இளவட்டக்கல் தூக்குதல் என்பது தமிழர்களின் ஒரு பாரம்பரிய விளையாட்டாகும். இந்த இளவட்டக்கல் இன்றை இளைஞர்களிடம் கேட்டால், 'ஆம் கேள்விபட்டிருக்கிறோம், சினிமாவில் பார்த்திருக்கிறோம், இணைய வீடியோக்களில் பார்த்தது உண்டு' என்றுதான் பதில் வரும். முன் காலத்தில் இளவட்டக்கல் தூக்கும் போட்டி மிகவும் பிரபலம். இந்தக் கல்லை தூக்குபவர்கள் உடல் வலிமை மிக்கவராக கருதப்பட்டனர். அந்தக் கல்லை தூக்கும் நபருக்குதான், பெண்ணை திருமணம் முடித்து வைக்கும் வழக்கமும் இருந்தது. நாளடைவில் இந்த வழக்கம் மறைந்ததால், இளவட்டக்கல் காட்சிப் பொருளாக மாறிப்போனது.

வடமாடு

ஒரு பெரிய வட்டத்திற்குள் காளையை கயிறு கட்டி வைத்து, அந்த வட்டத்திற்குள் காளையை மாடுபிடி வீரர்கள் பிடிக்க வேண்டும். இதில் காளையின் திமிலை வீரர்கள் போட்டிப்போட்டு பிடிப்பார்கள். காளைகள் பிடிபடாமல் வீரர்களுக்கு தண்ணி காட்டும். இந்த விளையாட்டு புதுக்கோட்டை மாவட்டத்தில் அதிக இடங்களில் நடைபெறுவது உண்டு.

மஞ்சு விரட்டு

ஜல்லிக்கட்டை விட மஞ்சுவிரட்டு கொஞ்சம் பரபரப்பாக காணப்படும். ஜல்லிக்கட்டை போல வாடிவாசல் வைத்து, காளைகள் அவிழ்த்து விடப்படுவதில்லை. பெரிய திடலில் ஆங்காங்கே காளைகளை வண்டியில் இருந்து இறக்கிய இடத்தில் அப்படியே அவிழ்த்து விடும் போது வெடிகளையும் வெடிப்பது உண்டு. இந்த வெடி சத்தத்திற்கு காளைகள் தலைதெறிக்க ஓடும். அந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் துணிந்து அடக்குவது உண்டு. இதில் சில காளைகள், பார்வையாளர்கள் கூட்டத்திலும் புகுந்து ஓடும். மாடுபிடி வீரர்களையும் சில நேரங்களில் பதம் பார்த்து விடும்.

மாட்டு வண்டி பந்தயம்

மாட்டு வண்டி, குதிரை வண்டிகளில், குறிப்பிட்ட தூரம் வரை சென்று திரும்பி வர வேண்டும். முதல் மூன்று இடங்களைப் பிடிப்பவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும். இதற்காக பிரத்யேகமாக காளைகளை அதன் உரிமையாளர்கள் வளர்த்து வருகின்றனர். ரேஸ் மாடுகள் தனி அடையாளத்துடன் திகழும். இதேபோல் மாடுகளை கட்டப்படும் வண்டிகளும் பிரத்யேகமாக தயார் செய்யப்படும். இதேபோல குதிரைகளும் தனி ரகம் தான். வருடம் முழுவதும் இதனை பராமரித்து வருவது ஒரு தனிப்பெருமை தான்.

வழுக்கு மரம்

தமிழர்களின் பாரம்பரியமான விளையாட்டு போட்டிகளில், வழுக்கு மரம் ஏறுதல் பிரபலமான ஒன்று. இப்போட்டி உழவர் திருநாள் மற்றும் தைப்பூச நாட்களில் நடத்தப்பட்டு வருகிறது. பண்டிகை தினங்களுக்கு ஒரு வாரம் முன்பாகவே சுமார் 50 முதல் 60 அடி உயரம் கொண்ட மரங்களைத் தேர்வு செய்து, அவற்றை வெட்டி அதன் பட்டைகளை உரித்து தயார் செய்வார்கள். போட்டி நடைபெறும் மைதானத்தில் அவை, பொக்லைன் எந்திர உதவியுடன் ஊன்றப் படும். அந்த மரம் முழுவதும் கிரிஸ் தடவப்படும். மேலும் வேஸ்ட் ஆயில் கேன்களையும் மரத்தின் உச்சியில் கட்டி வைப்பார்கள். இதனால் மரம் ஏறுபவர்களுக்கு வழுக்கும். அவ்வளவு எளிதில் வழுக்கு மரத்தில் ஏற முடியாது. மரத்தின் உச்சியில் பரிசுத் தொகை வைக்கப்பட்டிருக்கும். உச்சியைத் தொடுபவருக்கு அந்தப் பரிசு வழங்கப்படும்.


Next Story