நல் வாழ்வுக்கு வித்திடும் விஷயங்கள்


நல் வாழ்வுக்கு வித்திடும் விஷயங்கள்
x

காலையில் எழுந்ததும் ஒரு சில பழக்கவழக்கங்களை பின்பற்றுவது நல் வாழ்வுக்கு வித்திடும். நோய் நொடிகள் நெருங்க விடாது காக்கும். நீண்ட ஆயுளுடன் வாழ வழிகாட்டும்.

ஆரோக்கியமாகவும், உற்சாகமாகவும், தன்னம்பிக்கையுடனும் செயல்பட தூண்டும். அதற்கு காலை எட்டு மணிக்குள் ஒருசில விஷயங்களை செய்வது அவசியமானது.

தண்ணீர் பருகுங்கள்: இரவு முழுவதும் தண்ணீர் குடிக்காமல் பல மணிநேரம் இருப்பது, நீரிழப்புக்கு ஆளாக நேரிடும். அதனை தடுக்க காலையில் எழுந்தவுடன் இரண்டு டம்ளர் தண்ணீர் குடிப்பது அவசியமானது. இது நீரேற்றத்தை தக்கவைப்பதுடன் வளர்சிதை மாற்றத்தை தொடங்குவதற்கும் வித்திடும். உடலுக்கு கூடுதல் ஆற்றல் கிடைப்பதற்கு தண்ணீருடன் எலுமிச்சை சாறு கலந்து பருகலாம்.

தியானம் செய்யுங்கள்: காலையில் தியானம் செய்வதற்கு 10 நிமிடங்கள் ஒதுக்கினால் போதும். அது மூளை நிதானமாகவும், அமைதியாகவும் செயல்பட உதவும். மேலும் ஆக்கப்பூர்வமாக சிந்திக்கவும் தூண்டும். நாள் முழுவதும் உற்சாகமாக செயல்படவும் துணைபுரியும்.

எழுதுங்கள்: மூளை அமைதியின்றி குழப்பமான மன நிலையில் இருந்தால் எழுதும் பழக்கத்தை பின்பற்றுங்கள். எழுதும் வழக்கத்தை பின்பற்றுவது சிக்கல்களை எளிதாக தீர்க்கவும், கருத்து வேறுபாடுகளை சரிசெய்யவும், எண்ணங்களை கட்டமைக்கவும் உதவும். மேலும் எழுதுவது மன அழுத்தத்தில் இருந்து விடுபடவும், மனநிலையை மேம்படுத்தவும் உதவும்.

உடற்பயிற்சி செய்யுங்கள்: உடற்பயிற்சி செய்யும்போது மூளையில் எண்டோர்பின்கள் வெளியிடப்படும். இந்த ரசாயனம் வலி, அசவுகரியம் மற்றும் மன அழுத்த ஹார்மோன்களை குறைக்க உதவும். உடலுக்கு தேவையான ஆற்றலை அதிகப்படுத்தும். நல்வாழ்வுக்கு வழிவகுக்கும். உடலை கட்டுக்கோப்புடன் பராமரிக்க உதவும். இலக்குகளை அடைய உந்துதலுடனும் செயல்பட தூண்டும்.

சூரிய ஒளியை நுகருங்கள்: காலையில் 8 மணிக்குள் சூரிய ஒளி உடலில் படுமாறு சில நிமிடங்களை ஒதுக்க வேண்டும். ஏனெனில் சூரிய ஒளி மெலடோனின் உற்பத்தியை நிறுத்தும். இது தூக்கம் வரவழைக்கும் ஹார்மோன் ஆகும். இதன் விளைவாக, காலையில் அதிக விழிப்புடன் இருப்பீர்கள். நீங்கள் எழுந்திருக்கும்போது சூரிய வெளிச்சம் படராமல் இருட்டாக இருந்தால், வீட்டில் விளக்குகளை எரிய விடுங்கள்.

காபி பருகுங்கள்: காலை உணவை உட்கொள்வதற்கு முன்பு காபி பருகலாம். இதுவும் தூக்க கலக்கத்தை போக்கி அதிக விழிப்புடன் உணர வைக்கும். அதிலிருக்கும் காபின் காலையில் குறைவான சோர்வை உணர வைக்கும்.

காலை உணவை உண்ணுங்கள்: காலை உணவை உண்பவர்கள் உடல் பருமனாக இருப்பதற்கான வாய்ப்புகள் குறைவு. நாள் முழுவதும் பசி உணர்வும் குறைவாக இருக்கும். வளர்சிதை மாற்றமும் சிறப்பாக செயல்படும். காலை உணவு உடலுக்கு அதிக ஆற்றலை தரும். கவனிக்கும் திறனையும், நினைவாற்றலையும் மேம்படுத்த உதவும்.

அன்புக்குரியவர்களுடன் நேரத்தை செலவிடுங்கள்: மனதுக்கு பிடித்தமான நபர்களுடன் காலையில் சிறிது நேரம் செலவிடுவது மனநிலையை அதிகரிக்க உதவும். குடும்பத் துடன் காலை உணவை உட்கொள்ளலாம். நண்பர்கள் அல்லது உறவினர்களுடன் தொலைபேசியில் பேசலாம். அவர்களுடன் சிறிது தூரம் நடை பயிற்சி மேற்கொள்ளலாம். நகைச்சுவை உணர்வு கொண்டவர்களுடன் பேசி மகிழலாம். இவை நேர் மறையான எண்ணங்களுடன் அன்றைய நாளை தொடங்குவதற்கு அடித்தளமிடும்.

மதிய உணவை தீர்மானியுங்கள்: ஒவ்வொரு நாளும் மதியம் சாப்பிடும் உணவை வார இறுதி நாட்களில் பட்டியலிடுங்கள். சாப்பிட்ட உணவு ஆரோக்கியமானதா? அவற்றில் ஊட்டச்சத்துக்கள் எந்த அளவுக்கு இருந்தன என்பதை கணக்கிடுங்கள்.

சமூகவலைத்தளங்களை தவிருங்கள்: காலையில் கண் விழித்தவுடன் ஸ்மார்ட்போனில் குறுஞ்செய்திகள், மின்னஞ்சல்கள் மற்றும் சமூக ஊடக தகவல்களை பார்ப்பதுதான் பலருடைய வழக்கமாக இருக்கிறது. அப்படி செய்வது நேரத்தை விரயமாக்கும். கண்களுக்கும் ஒருவித சோர்வை ஏற்படுத்தி விடும். கவன சிதறலை உண்டாக்கும். அன்றைய நாள் பற்றிய திட்டமிடுதலை தாமதப்படுத்திவிடும்.

இலக்குகளை நிர்ணயிங்கள்: தினமும் இலக்குகள் மற்றும் அட்டவணை அமைத்து செயல்பட வேண்டும். அது இலக்குகளை அடைவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கும். முன்கூட்டியே திட்டமிடும்போது, சரியான வழிமுறைகளை பின்பற்றி செயலாற்றலாம்.

நன்றி சொல்லுங்கள்: எதிர்மறை எண்ணங்கள் இலக்குகளை நோக்கிய பயண தூரத்தை தாமதப்படுத்தலாம். ஒவ்வொரு நாளும் காலையில் ஏதாவது 3 விஷயங்களுக்கு நன்றி சொல்வதற்கு சில நிமிடங்களை ஒதுக்குங்கள். முந்தைய நாள் மற்றவர்கள் செய்த உதவிக்கு நன்றி சொல்வதாக இருக்கலாம். வாழ்க்கைக்கு வழிகாட்டியாக விளங்குபவர்களுக்கு நன்றி கூறலாம்.

இந்த பணி நேர்மறையான சிந்தனையை விதைக்கும். அன்றைய நாளை நேர்மறையான கண்ணோட்டத்துடன் தொடங்க வழிகாட்டும்.

படியுங்கள்: புத்தக வாசிப்பு பயிற்சி என்பது மனதையும், சொற்களஞ்சியத்தையும், கூர்மைப்படுத்தும் சிறந்த மனப்பயிற்சியாகும். காலையில் செய்திகளை படிக்க நேரம் ஒதுக்கினால், நடப்பு நிகழ்வுகளை அறிந்து கொள்ளலாம். ஒவ்வொரு நாளும் வேலைக்குச் செல்வதற்கு முன்பு சிறிது நேரம் வாசிப்பு பழக்கத்தை பின் தொடர்வது புதிதாக ஒன்றைக் கற்றுக்கொள்ள உதவும்.

ஆழமாக சுவாசியுங்கள்: காலையில் எழுந்ததும் ஆழமான சுவாச பயிற்சிகளை எடுத்துக்கொள்வது மனதை நிதானப்படுத்தவும், தெளிவுபடுத்தவும், அன்றைய நாளை தயார் படுத்தவும் உதவும். ஆழ்ந்த சுவாசம் மன அழுத்தத்தைக் குறைக்கும். ரத்த ஓட்டத்தை மேம்படுத்தும். மூளை மற்றும் இதய ஆரோக்கியத்தை வலுப்படுத்தும். உடற்பயிற்சியும் செய்து வரலாம். அதனை பின்பற்ற முடியாதவர்கள் கை, கால்களை நீட்டி, மடக்கும் எளிய பயிற்சிகளை மேற்கொள்ளலாம்.

உடனே எழுந்திருங்கள்: காலையில் முதல் முறையாக அலாரம் அடித்த உடனேயே எழுந்துவிடும் பழக்கத்தை பின்பற்றுங்கள். அது காலை நேரத்தை அதிகம் பயன்படுத்துவதற்கான சூழலை ஏற்படுத்தி கொடுக்கும். 10 நிமிடம் தாமதமாக அடுத்த அலாரத்தில் எழுந்து கொள்ளலாம் என்று தூங்குவது சோர்வையே உண்டாக்கும். ஒவ்வொரு நாளும் முன்கூட்டியே எழுவதற்கும் திட்டமிட வேண்டும். தினமும் ஐந்து நிமிடங்கள் முன்கூட்டி எழுவது அதிக நேரத்தை ஏற்படுத்தி கொடுக்கும். அவசரப்படாமல் எல்லா வேலைகளையும் செய்து முடிப்பதற்கு நேரமும் கிடைக்கும்.

1 More update

Next Story