ஓய்வுகாலத்தை வசந்தமாக்கும் 50-30-20 விதிமுறை


ஓய்வுகாலத்தை வசந்தமாக்கும் 50-30-20 விதிமுறை
x

முதுமை பருவத்தை எட்டும்போது அனுபவிக்கும் ஓய்வு கால வாழ்க்கை வசந்தமாக அமைய இளமைப் பருவத்திலேயே திட்டமிடுவது அவசியமானது.

முதுமை பருவத்தை எட்டும்போது அனுபவிக்கும் ஓய்வு கால வாழ்க்கை வசந்தமாக அமைய இளமைப் பருவத்திலேயே திட்டமிடுவது அவசியமானது. பணி ஓய்வுக்கு பின்னர் வருமானம் தடைபடும்போது செலவுகளை எப்படி சமாளிப்பது என்பதை முன்கூட்டியே தீர்மானிக்க வேண்டும். ​​

எதிர்கால செலவுகளுக்கு எவ்வளவுபணம் தேவைப்படும் என்பதை கணக்கிட்டு அதற்கேற்ப சேமிக்க தொடங்க வேண்டும். இன்றைய காலகட்டத்தில் வருமானத்தில் ஒரு பகுதியை நம் வங்கி கணக்கிலேயே சேமித்து வருவது என்பது சவாலானது. திடீர் செலவுகள் எட்டிப்பார்க்கும்போது அந்த சேமிப்பு கை கொடுக்கும். கடன் வாங்க வேண்டிய அவசியம் எழாது.

ஆனால் செலவுகள் எட்டிப்பார்க்கும்போதெல்லாம் சேமிப்பு பணம்தான் சட்டென்று நினைவுக்கு வரும். அதனை எடுத்து தாராளமாக செலவு செய்வதற்கு மனம் பழகிவிடும். அதனால் சேமிப்பு கரைந்து கொண்டிருக்கும். எந்த அளவுக்கு சேமிப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கிறோமோ அந்த அளவுக்கு திடீர் செலவு ஏற்படும்போது சேமித்த பணத்தை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்.

எவ்வளவுதான் சேமித்து வந்தாலும் செலவை சமாளிக்கும் கேடயமாக அது அமைந்துவிடும் என்பதால் ஓய்வு காலத்துக்குப் பிறகு முதுமையிலும் நலமுடன் வாழ சேமிப்புடன், முதலீடுக்கும் முக்கியத்துவம் கொடுப்பது புத்திசாலித்தனம்.

வருமானத்தின் ஒரு பகுதியை சேமிக்க தொடங்க வேண்டும். அந்த சேமிப்பின் சிறு பகுதியாவது முதலீடு திட்டமாகவோ, சேமிப்பு திட்டமாகவோ இருக்க வேண்டும். மாதாந்திர முதலீடு, சேமிப்பு திட்டங்கள் ஏராளம் இருக்கின்றன. அவற்றுள் உங்களுக்கு பொருத்தமானதை தேர்ந்தெடுப்பது முக்கியமானது.

முதலீடு, சேமிப்புக்கு பணம் ஒதுக்குவதற்கு 50-30-20 என்ற விதிமுறையை கட்டாயம் பின்பற்ற வேண்டும். அப்போதுதான் சேமிப்பும், முதலீடும் சாத்தியமாகும். இந்த விதிமுறையின்படி மாத வருமானத்தில் 50 சதவீதத்தை குடும்ப செலவுகளுக்காக ஒதுக்க வேண்டும். வீட்டுக் கடன் அல்லது வீட்டு வாடகை, தனிநபர் கடன், கிரிடிட் கார்டு கடன், வாகனக் கடன், வீட்டு மளிகை செலவு, கல்விக் கட்டணம், மருத்துவ செலவு உள்ளிட்டவை இதில் அடங்கும்.

இந்த விதிமுறையில் 30 சதவீத தொகை குடும்பத் தேவைகளை அடிப்படையாக கொண்டது. அது இன்சூரன்ஸ் ஆக இருக்கலாம். வார இறுதி நாட்களை மகிழ்ச்சியாக கழிப்பதற்கு செலவிடும் தொகையாகவும் இருக்கலாம். விரும்பிய பொருட்களை வாங்குவதற்கும் செலவிடலாம். ஆனால் மீதமிருக்கும் 20 சதவீத தொகைதான் முக்கியமானது.

இந்தத் தொகையை சேமிப்புக்கோ அல்லது முதலீட்டுக்கோ பயன்படுத்த வேண்டும். இதுதான் எதிர்கால வாழ்க்கையை மகிழ்ச்சியுடன் கழிப்பதற்கு கைகொடுக்கும் உற்றத்தோழனாக இருக்கும். பணத்தை சேமிக்க மற்றும் முதலீடு செய்ய நிதி ஆலோசகரின் உதவியையும் நாடலாம். பயனுள்ள செயல் திட்டத்தை உருவாக்க அவர்களின் வழிகாட்டுதலை பின்பற்றலாம்.


Next Story