உலகின் உயரமான சிலைகள்


உலகின் உயரமான சிலைகள்
x

உலகின் உயரமான சிலைகள் அவர்களின் வாழ்வியலை, வரலாற்றுடன் தொடர்புடைய அம்சங்களை அடையாளப்படுத்தும் விதமாகவும், சுற்றுலாத் தலமாகவும் அமைந்து உலகின் கவனத்தை ஈர்க்கின்றன.

பழங்காலம் முதலே சிலைகள் அமைக்கும் வழக்கம் நடைமுறையில் இருக்கிறது. விண்ணுடன் போட்டிப்போடும் அளவுக்கு கம்பீரமாக உயர்ந்து நிற்கும் வகையிலான சிலை கட்டுமானம் நகரங்களின் வளர்ச்சியிலும் முக்கிய பங்கு வகிக்கின்றன. சம்பந்தப்பட்ட நபர்களின் நினைவை சுமந்து கொண்டிருக்கும் சிலைகள், அவர்களின் வாழ்வியலை, வரலாற்றுடன் தொடர்புடைய அம்சங்களை அடையாளப்படுத்தும் விதமாகவும், சுற்றுலாத் தலமாகவும் அமைந்து உலகின் கவனத்தை ஈர்க்கின்றன. அத்தகைய உயரமான சிலைகள் சில உங்கள் பார்வைக்கு..

லேக்யுன் செக்கியா, மியான்மர்

115.8 மீட்டர் உயரம் கொண்ட லேக்யுன் செக்கியா, உலகின் மூன்றாவது உயரமான சிலையாகும். மியான்மரின் சாகாயிங் பிராந்தியத்தில் உள்ள கட்டகன் டவுங் கிராமத்தில் இந்த சிலை காணப்படுகிறது. புத்தர் நின்ற நிலையிலும், அதன் அருகிலேயே மற்றொரு புத்தர் சிலை படுத்த நிலையிலும் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

இந்த சிலைகளின் கட்டுமானம் 1996-ம் ஆண்டு தொடங்கியது. ஆனால் சிலைகளின் கட்டுமானம் முடிவடைவதற்கு 12 ஆண்டுகள் ஆகிவிட்டது. 2008-ம் ஆண்டு சிலை திறக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வந்தது.

செண்டாய் டைகன்னோன், ஜப்பான்

ஜப்பானில் வழிபடப்படும் ஒரு தெய்வத்தின் சிலை இது. உலகின் ஆறாவது மிக உயரமான சிலையாக விளங்கும் இது மியாகி மாகாணத்தில், செண்டாய் நகரில் அமைந்துள்ளது. வெண்மை நிறத்தில் பளிச்சென்று தெரியும் வகையில் இதன் வடிவமைப்பு உள்ளது. நீண்ட தூரத்தில் இருந்தும் இந்த சிலையை காண முடியும்.

ஒற்றுமையின் சிலை, இந்தியா

சுதந்திரப் போராட்ட வீரர் சர்தார் வல்லபாய் படேலின் உருவ சிலையான இது, அவரது 143-வது பிறந்தநாளைக் குறிப்பிடும் வகையில், 2018-ம் ஆண்டு அக்டோபர் 31-ந் தேதி அன்று திறக்கப்பட்டது. ஒற்றுமையின் சிலை என அழைக்கப்படும் இது குஜராத்தின் சாது பெட்டில் அமைந்துள்ளது.

உலகின் மிக உயரமான சிலை இதுதான். உயரம் 182 மீட்டர். 562 சமஸ்தானங்களை ஒன்றிணைத்து இந்திய நாட்டை சீரமைத்ததன் நினைவாக 'ஒற்றுமையின் சிலை' என்று இதற்கு பெயரிடப்பட்டுள்ளது.

வசந்த கோவில், சீனா

'ஸ்பிங்க் டெம்பிள் புத்தா' எனப்படும் இது உலகின் இரண்டாவது உயரமான சிலை என்ற சிறப்பை பெற்றது. சீனாவின் ஹனான் மாகாணத்தில் போடுஷான் என்ற இயற்கை எழில் சூழ்ந்த பகுதியில் புத்தருக்கே உரித்தான அமைதியான சூழலில் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த புத்தர் சிலையின் உயரம் 128 மீட்டர். தாமரை வடிவ சிம்மாசனத்தில் புத்தர் நின்ற நிலையில் ஆசி வழங்கும் வகையில் இந்த சிலை வடிவமைக்கப் பட்டுள்ளது.

நம்பிக்கை சிலை, இந்தியா

உலகின் நான்காவது உயரமான சிலையான இது ராஜஸ்தான் மாநிலம் நாத்துவாராவில் அமைந்துள்ளது. 106 மீட்டர் உயரம் கொண்ட சிவபெருமான் சிலை இது. கையில் திரிசூலத்துடன் கால் மேல் கால் போட்டு சிவபெருமான் அமர்ந்த நிலையில் இந்த சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. நம்பிக்கை சிலை என அழைக்கப்படும் இதனை 20 கிலோமீட்டர் தொலைவில் இருந்தும் முழுமையாக பார்க்க முடியும்.

உஷிகு தைபுட்சு சிலை, ஜப்பான்

1993-ம் ஆண்டு ஜப்பானின் உஷிகு பகுதியில் இது கட்டப்பட்டது. தாமரை மேடையின் மேல் 100 மீ உயரத்தில் அமிதாபா புத்தரின் உருவத்தை காட்சிப்படுத்தும் வகையில் இந்த சிலை பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ளது. இந்த சிலை வெண்கலத்தால் ஆனது.


Next Story