கேக்கை ஆடையாக அணிந்து சாதனை
கேக் ஆடை உலகின் மிகப்பெரிய அணியக்கூடிய ஆடையாகவும் அடையாளப்படுத்தப்படுகிறது.
திருமண நிகழ்வில் அடுக்கடுக்கான தோற்றத்துடன் கூடிய பிரமாண்டமான கேக் வடிவமைக்கப்படுவதுண்டு. திருமண ஆடையே கேக்காக மாறினால் எப்படி இருக்கும்? என்று பேக்கரி கடைக்காரர் ஒருவர் யோசித்திருக்கிறார். அதனை சாத்தியப்படுத்தி ஆடை வடிவில் கேக்கை வடிவமைத்தும் விட்டார். அது கின்னஸ் சாதனையிலும் இடம் பிடித்துவிட்டது.
131.15 கிலோ எடையுள்ள அந்த கேக் ஆடை உலகின் மிகப்பெரிய அணியக்கூடிய ஆடையாகவும் அடையாளப்படுத்தப்படுகிறது. இந்த கேக் ஆடையை வடிவமைத்தவர், சுவிட்சர்லாந்தை சேர்ந்த நடாஷா கோலின் கிம் பா லீ போகாஸ் என்ற பெண்மணி. இவர் கேக் தயாரிப்புகளில் நிபுணத்துவம் பெற்றவர். 2014-ம் ஆண்டு பேக்கரியை நிறுவி இருக்கிறார்.அது அங்கு பிரபலமான பேக்கரியாக விளங்குகிறது.
கடந்த மாதம் சுவிட்சர்லாந்தின் பெர்ன் நகரில் திருமண கண்காட்சி நடத்தப்பட்டது. அதில் இந்த கேக் ஆடையை முயன்று பார்த்திருக்கிறார். அது சாத்தியமாகிவிட்டது. முதலில் மணப்பெண் அணியும் கவுன் வடிவிலான கேக்கை தனியாக வடிவமைத்திருக்கிறார். அதற்குள் இருந்து ஒரு பெண் எழுந்தபடி நின்று போஸ் கொடுக்க கேக்கை கொண்டு அந்த பெண்ணின் அங்கங்களை ஆடையாக உருமாற்றிவிட்டு விட்டார்.
இந்த கேக் ஆடை 4.15 மீட்டர் சுற்றளவு, 1.57 மீட்டர் உயரம் மற்றும் 1.319 மீட்டர் விட்டம் கொண்டது. திருமண வைபவத்தின்போது மணப்பெண்கள் விரும்பி அணியும் ஸ்வீட்ஹார்ட் நெக்லைன் கொண்ட திருமண கவுனை ஒத்திருந்தது. அது கேக்கில்தான் தயாரிக்கப்பட்டதா? என்று கேட்கும் அளவுக்கு நிஜமான ஆடை போலவே காட்சி அளிக்கிறது.
இதனை கின்னஸ் அமைப்பு அங்கீகரித்து தனது அதிகாரப்பூர்வ வலைத்தளப்பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டுள்ளது. ஏராளமானோர் அந்த வீடியோவை பகிர்ந்துள்ளனர். அதனை இரண்டே நாளில் 10 லட்சத்துக்கும் அதிகமானோர் பார்வையிட்டுள்ளனர். ''ஆடை இருக்கிறது. கேக் எங்கே?" என்று ஒருவர் வியப்பாக கேட்க, ஆடையே கேக்தான்'' என்று பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.
இதனை நம்ப முடியவில்லை என்று பலரும் கூறி இருக்கிறார்கள்.
"சில வருடங்களுக்கு முன்பு எனது சிறிய கடையில் திருமண கேக்கை அலங்கரிப்பதில் மும்முரமாக ஈடுபட்டிருந்தபோது, முழு திருமண ஆடையும் கேக்கில் செய்யப்பட்டு இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்ற யோசனை தோன்றியது. சில நாட்களுக்குப் பிறகு, எனது இளைய மகள் எல்லி எனது முயற்சிக்கு வடிவம் கொடுத்தார். சருமத்தோடு ஒட்டியபடி அணியக்கூடிய ஆடையின் ஒரு பகுதியை உருவாக்குவதே சவாலானதாக இருந்தது. நீண்ட முயற்சிக்கு பிறகு கைகூடி இருக்கிறது. அதை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது'' என்கிறார், நடாஷா.