நீச்சல்-சைக்கிள் ஓட்டுதல்: உடல் எடை குறைப்புக்கு எது சிறந்தது?


நீச்சல்-சைக்கிள் ஓட்டுதல்: உடல் எடை குறைப்புக்கு எது சிறந்தது?
x

உடல் எடையை குறைப்பதற்கு சைக்கிள் ஓட்டுவது சிறந்ததா? நீச்சல் பழகுவது நல்லதா? என்ற விவாதம் நீண்ட காலமாக தொடருகிறது.

உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் உணவு பழக்கம் உடற்பயிற்சி ஆகிய இரண்டையும் முறையாக பின்பற்ற வேண்டும். உடற் பயிற்சி மேற்கொள்ளாத சமயங்களில் உடல் இயக்கத்துக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். சைக்கிள் ஓட்டுவது கூட சிறந்த உடல் இயக்க செயல்முறையாக அமையும். நீச்சல் பயிற்சியும் மேற்கொள்ளலாம். உடல் எடையை குறைப்பதற்கு சைக்கிள் ஓட்டுவது சிறந்ததா? நீச்சல் பழகுவது நல்லதா? என்ற விவாதம் நீண்ட காலமாக தொடருகிறது. உடல் எடை குறைப்புக்கு எது சிறந்தது என்று பார்ப்போம்.

சைக்கிள் ஓட்டுதல்:

மிதமான வேகத்தில் சைக்கிள் ஓட்டினால் அதுவும் குறைந்த தீவிரம் கொண்ட இலகுவான உடற்பயிற்சியாக அமையும். அன்றாட வாழ்க்கை முறையின் ஒரு அங்கமாக சைக்கிள் பயிற்சியை தொடரலாம். காலையில் எழுந்ததும் சில கிலோ மீட்டர் தூரம் சைக்கிள் ஓட்டும் வழக்கத்தை பின் தொடர்ந்தாலே போதுமானது. அது முடியாத பட்சத்தில் தினமும் கடைக்கு செல்வதற்கு சைக்கிளை பயன்படுத்தலாம். அலுவலகத்துக்கும் சைக்கிளில் செல்லும் வழக்கத்தை பின்பற்றலாம். நீச்சல் பயிற்சியை போல் அதிக நேரம் செலவிட வேண்டியதில்லை. சைக்கிள் ஓட்டுவது தசைகளை வலுவாக கட்டமைக்க துணை புரியும். நீச்சலுடன் ஒப்பிடும்போது உடலின் கீழ் பாகத்துக்கு சைக்கிள் பயிற்சி கூடுதல் நன்மை வழங்கும். குறிப்பாக கால்களின் இயக்கத்தை அதிகரிக்க செய்யும். 70 முதல் 80 கிலோ எடை கொண்ட நபர் மணிக்கு 15 கி.மீ. வேகத்தில் சைக்கிள் ஓட்டினால் சுமார் 600 கலோரிகளை எரித்துவிடலாம். எலும்புகளை வலுப்படுத்துவதற்கு நீச்சலை விட சைக்கிள் பயிற்சியே உதவும்.

இருப்பினும் உடல் எடையை குறைக்கும் விஷயத்தில் சைக்கிளை விட நீச்சல் பயிற்சியே சிறப்பானது. அது ஒரே நேரத்தில் அதிக கலோரிகளை எரிக்க உதவுகிறது. தசைகளை வலுப்படுத்தும் விஷயத்தில் சைக்கிள் நீச்சல் இரண்டுமே பலன் தரக்கூடியது. இரு பயிற்சிகளும் நுரையீரல் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும். உடல் எடையை குறைப்பதற்கு உடற்பயிற்சி மட்டுமே பலன் தராது. உடல் எடையை குறைக்கும் விஷயத்தில் 70 சதவீத பங்கு உணவுக்குத்தான் இருக்கிறது. அதனால் உணவு விஷயத்திலும் கூடுதல் அக்கறை கொள்ள வேண்டும்.

நீச்சல்:

உடலின் அனைத்து பாகங்களையும் இயங்க வைக்கும் தன்மை நீச்சலுக்கு உண்டு. மற்ற உடற்பயிற்சி போல கடினமான உடல் செயல்பாடுகளை மேற்கொள்ள வேண்டியதில்லை. நீரில் லேசாக உடலை அசைத்தாலே போதுமானது. அதிக கலோரிகளையும் எரித்துவிடும். நீச்சல் பயிற்சி நுரையீரலுக்கும் இதயத்துக்கும் சிறந்ததாக கருதப் படுகிறது. நுரையீரல் இதய நோய் பாதிப்புக்கு ஆளாகுபவர்களுக்கு நீச்சல் சிறந்த பயிற்சியாக அமைந்திருக்கிறது. மூட்டுவலி போன்ற பாதிப்புகளுக்கு ஆளாகுபவர்களுக்கும் நீச்சல் பயிற்சி சிறந்தது. நீச்சல் பயிற்சியை தொடரும்போது மூட்டுகளில் எந்த அழுத்தமும் ஏற்படாது.

கடுமையான உடல் உழைப்பு அல்லாத நடைப்பயிற்சி ஜாக்கிங் யோகா போன்ற இலகுவான பயிற்சிகள் கொழுப்பை எரிக்க சிறந்தவை. நீச்சலும் இலகுவான உடற்பயிற்சியாக விளங்குகிறது. அதனால் சைக்கிள் ஓட்டுதலுடன் ஒப்பிடும்போது உடல் எடையை குறைப்பதற்கு உதவும் சிறந்த பயிற்சி முறையாக அமைந்திருக்கிறது. 70 முதல் 80 கிலோ எடை கொண்ட நபர் ஒரு மணி நேரம் நீச்சல் பயிற்சி மேற்கொண்டால் 750 கலோரிகள் வரை எரித்து விடலாம். உடலின் மேல் பாகம் கீழ் பாகம் ஆகிய இரண்டையும் ஒருங்கிணைத்து ஒட்டுமொத்த உடலுக்கும் சிறந்த உடற்பயிற்சியை வழங்கக்கூடிய தன்மை நீச்சலுக்கு உண்டு. முறைப்படி நீச்சல் கற்றுக்கொண்டு சரியான முறையில் நீந்தி பயிற்சி செய்தால் உடலும் மனமும் தளர்வடையும். தியானம் செய்வதற்கு இணையான பலனையும் பெற முடியும்.


Next Story