பழந்தமிழர்களின் தற்காப்பு கலைகளை ஆவணமாக்கியவர்
சென்னையை சுற்றியிருக்கும் பல அரசுப்பள்ளிகளில், கடந்த 20 ஆண்டுகளாக இலவசமாக தற்காப்பு பயிற்சிகளை பயிற்றுவிக்கும் ஸ்டாலினுடன் சிறுநேர்காணல்.
* உங்களை பற்றி கூறுங்கள்?
திருச்செந்தூர் அருகே இருக்கும் உடன்குடி புதூர் கிராமம், என் சொந்த ஊர். என் தந்தை சிலம்பம் சுற்றுவதை பார்த்தும், ஆக்ஷன் நாயகன் புரூஸ்லீயால் ஈர்க்கப்பட்டும் தற்காப்பு கலைகள் பயிலும் நோக்கத்துடன் சென்னைக்கு வந்தேன். மனோகர் என்பவரிடம் ஆரம்பத்தில் கராத்தே கலை பயின்றேன். அதில் எல்லா நுணுக்கங்களையும் கற்றுக்கொண்ட பிறகு, என்னுடைய 18 வயதிலேயே கற்றுக்கொடுக்க ஆரம்பித்தேன். மாநில அளவிலான போட்டிகளில், தங்கமும் வென்றேன்.
* தற்காப்பு கலைகள் என்ற பட்டியலில் நிறைய கலைகள் இருக்கிறது. அதில் கராத்தே கலை மட்டும் உங்களைக் கவர என்ன காரணம்?
ஆம்..! தற்காப்பு கலை என்பதற்குள் நிறைய கலைகள் அடங்கி இருக்கிறது. இதில் முதன்முதலில் கராத்தே கலையால் ஈர்க்கப்பட்டு, 8-ம் நிலை கருப்பு பட்டை வரை முன்னேறினேன். பிறகு தமிழர்களின் வீரக்கலையான சிலம்பம் கலை பயின்றேன்.
இவற்றிற்கு அடுத்தபடியாக, குத்துவரிசை, தாய்ச்சி, நுங்க்சக், டோன்பா ஆகிய கலைகளையும் கற்றுக்கொண்டேன்.
இதில் கராத்தேவும், போர்க்கலை சிலம்பமும் ரொம்ப ஸ்பெஷல். ஏனெனில் கராத்தே, உடலை ஆரோக்கியமாகவும், வலுவாகவும் வைத்துக்கொள்ள உதவும் தற்காப்பு கலை. அதேசமயம் தமிழரின் வீரப்போர் கலையான, சிலம்பம் பயின்றேன். ஏனெனில் சிலம்ப கலையில், பல்வேறு விதமான போர் ஆயுதங்கள் பயன்படுத்தப்படும் என்பதால், சிலம்பம் கற்றுக்கொண்டேன்.
அந்தவகையில் கராத்தே மூலம் கை-கால்களை கொண்டு சண்டையிடவும், சிலம்பம் மூலமாக ஆயுதங்களை பயன்படுத்தி சண்டையிடவும் கற்றுக்கொண்டேன்.
* பள்ளி குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்க ஆரம்பித்தது எப்போது?
தற்காப்பு கலைகள் பயின்று முடித்ததும், தொழில், வருமானம், வாழ்க்கை, எதிர்காலம்... இப்படி பல்வேறு சிந்தனைகள் எழுந்தன. ஆனால் நான் எதை பற்றியும் யோசிக்காமல், தற்காப்பு கலையோடு ஐக்கியமாக ஆசைப்பட்டேன். அதை கற்றுக்கொடுக்க தொடங்கினேன். அப்போதுதான், அரசுப்பள்ளி மாணவ-மாணவிகளுக்கு இலவசமாக தற்காப்பு கலை கற்றுக்கொடுக்கும் எண்ணம் தோன்றியது.
குறிப்பாக பல்வேறு சீண்டல்களை சந்திக்கும் ஏழை மாணவிகளுக்கு, அவர்களுக்கு பிடித்தமான, அவர்கள் விரும்பும் தற்காப்பு கலைகளை இலவசமாக கற்றுக்கொடுக்க ஆரம்பித்தேன். அன்றிலிருந்து இன்று வரை, இந்த தற்காப்பு கலை பயிற்சிகள், வாரந்தோறும் பல அரசுப்பள்ளிகளில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
* பலரும் தற்காப்பு கலை கற்றுக்கொடுக்கிறார்கள். அவர்களில் இருந்து நீங்கள் எப்படி வித்தியாசப்படுகிறீர்கள்?
ஆரம்பத்தில், ஜப்பானிய தற்காப்பு கலை மீது மோகம் ஏற்பட்டுதான், கராத்தே கலை கற்றுக்கொண்டேன். ஆனால், கராத்தே பயின்று பயிற்சி செய்யும் ஜப்பானியர்களுக்கும், அதே கலையை பயின்று பயிற்சி செய்யும் இந்தியர்களுக்கும் இடையே நிறைய முரண்பாடுகளை காண முடிந்தது.
கராத்தே கலையின், மிக முக்கிய நுணுக்கங்களும், ரகசியங்களும் மற்ற நாட்டவர்களுக்கு மறைக்கப்படுவதை போல உணர்ந்ததால், நம் மண்ணின் போர்க்கலையான சிலம்பம் கற்றேன். அப்போதுதான், தமிழ் மண்ணின் மகத்துவ தற்காப்பு கலையான `குத்துவரிசை' பற்றி தெரிந்து கொள்ள முடிந்தது.
குத்துவரிசைதான், உலகின் பெரும்பாலான தற்காப்பு கலைகளின் பிறப்பிடம். அதை உணர்ந்து, குத்துவரிசை பற்றி தேட ஆரம்பித்தேன். நிறைய ஆசான்களை சந்தித்து, நிறைய நூல்களை புரட்டிப் பார்த்து குத்துவரிசை சம்பந்தமான முழுநீள ஆவணப்படம் ஒன்றை தயாரித்தேன். இந்த ஆராய்ச்சி தேடலில், குத்துவரிசை கலையும் கற்றுக்கொண்டேன். இது எனக்கு மட்டுமல்ல, இனி வரவிருக்கும் சந்ததியினருக்கும், மிகப்பெரிய பொக்கிஷமாக மாறியிருக்கிறது. ஏனெனில், குத்துவரிசையின் வரலாற்றையும் பெருமையையும் பேசும் அந்த ஆவணப்படம், குத்துவரிசையை கற்றுக்கொள்ளும் முறைகளையும் விளக்கும்.
இதற்கு அடுத்தபடியாக, போர்க்கலை சிலம்பத்தின் பெருமைகளை விளக்கும் மற்றொரு ஆவணப்படம் உருவாக்கினேன். அதை தொடர்ந்து, கராத்தே கலையில் கடைப்பிடிக்கப்படும் கட்டாக் (கற்பனை சண்டை) தொடர்பான ஆராய்ச்சி, ஆவணப்படத்தை உருவாக்கினேன். இப்படி, தற்காப்பு கலை தொடர்பான, 8 ஆவணப்படங்களை தயாரித்து பாதுகாக்கிறேன்.
* போர்க்கலை சிலம்பம் எப்படி வேறுபடுகிறது?
அலங்கார சிலம்பம், போர்க்கலை சிலம்பம் என இருவேறு கலைகள் உண்டு. இதில் அலங்கார சிலம்பம், நிகழ்ச்சிகளில் காட்சிக்காக அரங்கேற்றுவது. ஆனால் போர்க்கலை சிலம்பம் என்பது, நம் தமிழர்கள் போர்க்களத்தில் கையாண்டது. எதிரிகளை தாக்கி தலைத்தெறிக்க ஓட வைத்தது. இதை அலங்கார சிலம்பம் போல, சாதாரணமாக சுற்றிவிடமுடியாது. எதிரி நிற்கும் திசை, தொலைவு, எதிரியின் தாக்குதலை தடுக்கும் நுணுக்கம், திரும்பி தாக்கும் நுணுக்கம் என... ஆக்ரோஷமாக இருக்கும். அதுபற்றிதான், பிரத்யேக ஆவணப்படம் தயாரித்தேன்.
* உங்களுடைய ஆசை என்ன?
தமிழர்களின் போர்க்கலைகளை, உலகறிய செய்வதே என் நோக்கம். அதற்கான முயற்சிகளில்தான் இறங்கி இருக்கிறேன். மேலும் பள்ளி மாணவர்களை, ஒழுக்க நெறிமுறைகளுக்குள் வளர்த்து, சிறந்த குடிமகனாக மாற்றி அவர்களது வீட்டிற்கும், நாட்டிற்கும் பெருமை சேர்ப்பதே, என்னுடைய ஆசை.
* ஆவணப்படம் தயாரிப்பின்போது ஏதேனும் சுவாரசியங்கள் நிகழ்ந்தனவா?
நிறைய இருக்கிறது. அதில் ஒன்று, குத்துவரிசை தொடர்பான ஆவணப்படத்திற்காக, 24 மணிநேரம் தொடர்ச்சியாக தற்காப்பு கலை பயிற்சிகளை செய்து, வீடியோவாக பதிந்தோம்.
* மாணவிகள், ஆர்வமாக தற்காப்பு கலை பயில் கிறார்களா?
ஆம்..! நிறைய மாணவிகள், தாங்களாகவே முன்வந்து தற்காப்பு கலை பயில்கிறார்கள். அவர்களுக்கு, தற்காப்பு கலை கற்றுக்கொடுப்பதுடன், சமுதாய அக்கறை, சுய ஒழுக்கம், நன்னடத்தை, தன்னம்பிக்கை, நட்பு உணர்வு ஆகியவற்றையும் கற்றுக்கொடுக்கிறோம். அதேபோல, வீரக்கலை பயிற்சி தற்காப்பிற்கு மட்டுமல்லாமல், தனது உடல் அசைவுகளை கட்டுப் படுத்தி இயக்கவும், உணர்வுப் பூர்வமாக சிந்திக்கவும் வழிவகுக்கும். அந்த நுணுக்கங்களையும் கற்றுக்கொடுக்கிறேன்.