மழைக்காலமும்.. இருமலும்..!


மழைக்காலமும்.. இருமலும்..!
x

மழைக்காலத்தில் சளியும், இருமலும் ஏற்படுவது தவிர்க்க முடியாதது. அதிகாலை பொழுதில் அவற்றின் வீரியம் அதிகமாக இருக்கும். வீட்டு சமையலறை பொருட்களை கொண்டே ஆரம்ப நிலையிலேயே இதற்கு தீர்வு கண்டுவிடலாம்.

* சளி பிரச்சினைக்கு தொண்டை வலிதான் ஆரம்பக்கட்ட அறிகுறியாக இருக்கும். அதிகாலை எழுந்ததும் வெதுவெதுப்பான நீரில் உப்பு கலந்து வாய் கொப்பளிப்பது சிறப்பானது. அது தொண்டையில் ஏற்படும் கரகரப்பு தன்மையை நீக்கும். தொண்டை வலியையும் கட்டுப்படுத்தும். சளி பிரச்சினையை போக்கவும் துணை புரியும்.

* சளி, இருமலுக்கான ஆரம்பக்கட்ட அறிகுறிகள் தென்பட தொடங்கிவிட்டாலே எல்லா நேரமும் சுடுநீரை குடிப்பதற்கு வழக்கப்படுத்திக்கொள்ள வேண்டும். சுடு நீரில் சிறிதளவு சுக்கு தூள், எலுமிச்சை சாறு, தேன் கலந்தும் பருகலாம்.

* காலை வேளையில் சூடான நீரில் லவங்கபட்டை தூள் மற்றும் தேன் கலந்து பருகி வரலாம். அதுவும் தொண்டைக்கு இதமளிக்கும்.

* ஏலக்காய்யை பொடித்து டீயாக தயாரித்தும் பருகலாம். அது மழைக்கால நோய் தொற்றுகளில் இருந்து காக்க உதவும்.

* இஞ்சியை பொடித்து சாறு எடுத்து அதனுடன் சிறிதளவு தேன் கலந்து பருகுவதும் மார்பு சளிக்கு நிவாரணம் அளிக்கும்.

* சாம்பார் வெங்காயம், இஞ்சி சாறு, தேன் இவை மூன்றையும் ஒன்றாக கலந்து பருகுவதும் சளி தொந்தரவுக்கு தீர்வளிக்கும்.

* வெதுவெதுப்பான பாலில் சிறிதளவு தேன் கலந்து அதனுடன் ஜாதிக்காயையும், ஏலக்காயையும் பொடித்து போட்டு பருகலாம். இது மழைக்கால நோய்கள் நெருங்கவிடாமல் தற்காத்துக்கொள்ள உதவும்.

* குங்குமப்பூவை பாலுடன் கலந்து பருகுவதும் சளி பிரச்சினையை போக்க உதவும்.

* மழைக்கால மாதங்களில் மஞ்சள் தூளை பாலில் கலந்து பருகி வருவதும் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும். பல நோய் தொற்றுகளில் இருந்து தற்காத்துக்கொள்ளவும் உதவும்.

* பூண்டுவை சூப்பாகவோ, சமையலில் சேர்த்தோ சாப்பிட்டு வரலாம். அதுவும் சளி, இருமலை சுலபமாக கட்டுப்படுத்திவிடும்.


Next Story