தமிழர் வழிபாட்டு முறையில் பொங்கல்
பண்டைய தமிழர்களின் வணக்கத்திற்குரிய ஒன்றாக இருந்தது இயற்கையை வணங்குவது. சூரியனையும் நெருப்பையும் நீரையும் மிருகங்களையும் வணங்குவது வழக்கம்.
மனிதர்கள் நாகரிகம் அடையத் தொடங்குவதற்கு முன்பிருந்தே வழிபாடுகளை தொடங்கினர். இதற்கு காரணம் இயற்கை சீற்றங்களினாலும் மிருகங்களினாலும் ஏற்பட்ட சேதங்களில் இருந்து தங்களை மீட்டுக் கொள்ள இயற்கையையும் மிருகங்களையும் வழிபட தொடங்கியதுதான். உலகெங்கிலும் பல சமுதாயங்கள் பலவிதமான வழிபாட்டு முறைகளை கொண்டிருந்தனர். பெரும்பாலும் காற்று நெருப்பு மண் மற்றும் கோள்களை உருவங்களாக சித்தரித்து அவற்றை வணங்குவது ஆதியில் வழக்கமாக இருந்து வந்தது யாவரும் அறிந்ததே. அதன் பின்பு மனித கலாச்சாரத்தில் கலையும் அறிவியலும் வளர தொடங்கிய பின் மனிதன் பல்வேறு கடவுள்களை சிருஷ்டி செய்து வணங்க ஆரம்பித்தான். பண்டைய தமிழர்களின் வணக்கத்திற்குரிய ஒன்றாக இருந்தது இயற்கையை வணங்குவது. சூரியனையும் நெருப்பையும் நீரையும் மிருகங்களையும் வணங்குவது வழக்கம். அந்த வகையில் பண்டைய தமிழர்கள் அறுவடை காலத்திற்கு பின்பு பொங்கல் பண்டிகையை கொண்டாட துவங்கினர். விவசாயத்திற்கு உபயோகப்படுத்தப்படும் கருவிகளையும் காளை மாடுகளையும் பசு மாடுகளையும் அறுவடை செய்த தங்களின் உணவு உற்பத்திகளையும் இவற்றிற்கு உறுதுணையாக இருக்கும் சூரியனை கருப்பொருளாக வைத்தும் வணங்கத் தொடங்கிய ஒரு பண்டிகையே பொங்கல் பண்டிகை.
பொங்கல் 3 நாட்கள் கொண்டாடப்படும் மிகவும் விசேஷமான அழகான ஒரு பண்டிகை. பண்டிகையின் போது வீடும் மனமும் சுத்தமாக இருக்க வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு வீடுகளை சுத்தம் செய்து தேவையில்லாத பொருட்களை வெளியேற்றி வீடுகளுக்கு வண்ணம் பூசி அழகுப்படுத்துவர. பொங்கலுக்கு முந்திய நாள் வீடுகளை சுத்தப்படுத்தி அப்புறப்படுத்திய குப்பைகளை, அதாவது முந்திய வருடம் விவசாயத்துக்கு உபயோகப்படுத்திய மூங்கில் கூடைகள் தட்டுகள் உடைந்த கலப்பைகள் முறங்கள் துடைப்பங்கள் போன்றவற்றை நெருப்பில் இட்டு எரித்து விடுவார்கள். பொங்கலன்று வீட்டில் எல்லாவிதமான காய்கறிகளையும் கொண்டு பதார்த்தங்கள் செய்வார்கள். அறுவடை செய்த புதிய தானியமான நெல்லை குத்தி அரிசி ஆக்கி அதை கொண்டு பொங்கல் செய்வார்கள். வெண்பொங்கல், வெல்லம் சேர்த்த இனிப்பு பொங்கல் போன்றவை பொங்கலன்று விசேஷமாக செய்யும் ஒன்று. பொங்கல் அன்று சூரியனுக்கு, தயாரித்த உணவுகளை படைத்து குடும்பத்தினர் அனைவரும் சாப்பிடுவது வழக்கம். கரும்பு மஞ்சள் பூசணி போன்றவை இந்த காலங்களில் அதிகம் விளையக்கூடிய பொருட்கள். அவற்றை கண்டிப்பாக உணவிலும் அலங்காரம் செய்வதிலும் பயன்படுத்துவர்.
மார்கழி மாதம் முழுவதும் பெண்கள் அதிகாலை எழுந்து கோலம் போடும் பொழுது அந்தக் கோலத்தின் நடுவே பசுஞ்சாணத்தை உருண்டையாக பிடித்து வைத்து அதன் மேல் பூசணிப்பூவை கவிழ்த்து வைப்பர். இப்படி ஒரு கோலத்தின் மேல் ஐந்து ஆறு பத்து உருண்டைகள் வரையில் கூட வைப்பது வழக்கம். மாலை ஆனவுடன் அந்த சாணி உருண்டையை எடுத்து சுவற்றில் வட்டமாக தட்டி வைத்து விடுவர். இப்படி ஒரு மாதம் சேர்ந்த அந்த சாண வறட்டியை எடுத்து அதை அடுக்கி அதன் மேல் புது பானையை வைத்து மஞ்சள் செடியை கொண்டு அதை அலங்கரித்து, அதில் புது அரிசி போட்டு பொங்கல் சமைப்பர். இந்த பொங்கல் சாதத்துடன் எல்லா காய்கறிகளும் சேர்ந்த குழம்பை சேர்த்து சாப்பிடும் பொழுது அலாதியான சுவையில் இருக்கும்.
பொங்கலுக்கு அடுத்த நாளான மாட்டுப் பொங்கல் அன்று மாடுகளை சுத்தம் செய்து குளிப்பாட்டி அவற்றின் கொம்புகளுக்கு வண்ணம் தீட்டி வண்ணக் காகிதங்களால் அலங்காரம் செய்து கால்களுக்கு சலங்கைகளை கட்டி மாடுகளை கோவில்களுக்கு மாலையில் ஒட்டி செல்வர். காலை நேரத்தில் மாட்டு கொட்டகையை சுத்தப்படுத்தி அங்கேயே பொங்கலிட்டு இறைவனுக்கு படைத்து அந்தப் பொங்கலை மாடுகளுக்கு ஊட்டி விடுவர். வயல்களில் வேலை செய்யும் காளை மாடுகளுக்கும் பால் கொடுக்கும் பசு மாடுகளுக்கும் நிலத்திற்கு தேவையான சத்துக்களை அளிக்கும் சாணத்தை அளிப்பதற்காகவும் மாடுகளுக்கு நன்றி கூறும் வகையில் இந்த மாட்டுப் பொங்கல் திருநாள் கொண்டாடப்படுகிறது.
பொங்கல் மாட்டுப் பொங்கல் முடிந்த பின் மூன்றாவது நாளான காணும் பொங்கல் அன்று அறுவடை முடிந்து உணவுப் பொருட்களும் வீடு வந்து சேர்ந்து விட்டதால் குதூகலமாக உணவுப் பொருட்களையும் காய்கறிகளையும் சமைத்த பலகாரங்களையும் எடுத்துக் கொண்டு பெரியவர்களையும் உறவினர்களையும் சென்று கண்டு மகிழ்ந்து வருவது ஒரு விழாவாகவே அந்த நாட்களில் கொண்டாடப்பட்டது. இப்படி தங்களின் தொழில் மற்றும் வாழ்க்கையோடு ஒன்றிணைந்ததாக பொங்கல் பண்டிகையை வருடந்தோறும் கொண்டாடி மகிழ்வது தமிழர் பண்பாடு. இன்று நகரத்தில் வசிக்கும் நம் குழந்தைகளுக்கும் இந்த பண்பாட்டை எடுத்துக் கூறுவதும் பண்டிகைகளின் காரணங்களை எடுத்து கூறுவதும் நம் கடமை எனலாம். இன்று நகரத்தில் இருப்பவரின் பொங்கல் திருவிழா கொண்டாடும் முறைகள் மாறி இருந்தாலும் நம் முன்னோர் கடைப்பிடித்த அந்த பண்டிகைக்கான முறைகளை தெரிந்து வைத்திருப்பது நல்லது.