ஒரே நாடு, ஒரே தேர்தல் ஏற்புடையதா? அதிகாரி, அரசியல் நோக்கர் கருத்து
ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வருவது என்பது சாத்தியமானதா? ஏற்புடையதா? என்பது பற்றி அரசு உயர் அதிகாரிகள் மற்றும் அரசியல் நோக்கர்கள் பல்வேறு விதங்களில் கருத்துகளைக் கூறுகின்றனர்.
'ஒரே நாடு, ஒரே தேர்தல்' என்பது நமது நாட்டிற்கு ஒன்றும் புதிதல்ல. கடந்த 1967-ம் ஆண்டு நாடாளுமன்றத்திற்கும், சட்டமன்றத்திற்கும் ஒன்றாகவே தேர்தல் நடத்தப்பட்டுள்ளது. அதன் பிறகு, 1968 மற்றும் 1969-ம் ஆண்டுகளில் சில மாநில சட்டசபைகள் பல்வேறு காரணங்களால் கலைக்கப்பட்ட பின்னர் சட்டசபை மற்றும் நாடாளுமன்ற தேர்தல்கள் தனித்தனியே நடத்தப்படத் தொடங்கியது.
ஒருவருக்கு 2 ஓட்டு
ஒரே தேர்தல் என்பது நாடாளுமன்றத்துடன் மாநிலங்களில் உள்ள சட்டமன்றங்களுக்கும் சேர்த்து ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதுதான். அவ்வாறு நடத்தும்போது பொதுமக்கள் ஒரே நேரத்தில் 2 வாக்குகள் செலுத்த வேண்டியது வரும். ஒன்று மாநில சட்டசபைக்கு, மற்றொன்று நாடாளுமன்றத்திற்கு என வாக்களிக்க வேண்டும். இப்படியாக இரண்டுக்கும் சேர்த்து ஒரே தேர்தல் நடத்துவதால் அரசுக்கு தேர்தலுக்கான செலவு குறையும்.
இதை தவிர்த்து பல நடைமுறை சிக்கல்கள் இருப்பதாகவும் கூறப்படுகிறது. குறிப்பாக, நாடு முழுவதும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதால் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் பற்றாக்குறை, வாக்குப்பதிவு எந்திரங்கள் பற்றாக்குறை போன்ற பல சிக்கல்கள் உள்ளன. இந்த பிரச்சினைகளை தவிர்த்து அரசியல் ரீதியிலான பிரச்சினைகளும் உள்ளன.
இவற்றை தாண்டி ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வருவது என்பது சாத்தியமானதா? ஏற்புடையதா? என்பது பற்றி அரசு உயர் அதிகாரிகள் மற்றும் அரசியல் நோக்கர்கள் பல்வேறு விதங்களில் கருத்துகளைக் கூறுகின்றனர். அதன் விவரம் வருமாறு:-
ஒரே நாள் தேர்தல் நல்லது
முன்னாள் தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா கூறியதாவது:-
இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரைப்படி நாடாளுமன்ற தேர்தல், சட்டசபை தேர்தல் மற்றும் உள்ளாட்சி தேர்தல்கள் என 3 வகைகளில் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை நாடு முழுவதும் தேர்தல்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதுதவிர அரசுகள் கவிழும் பட்சத்திலும், கட்சி தாவல்களாலும், வேட்பாளர்கள் மறைந்தாலும் இடைத்தேர்தல்கள் நடத்தப்படுகின்றன.
இவ்வாறு நடத்தப்படும் தேர்தல்களினால் அரசுக்கு ஏற்படும் செலவுகள் என்பது மிக அதிகமாக இருக்கிறது. இதனைக் கருத்தில் கொண்டுதான் 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' என்ற ஆலோசனை கூறப்பட்டுள்ளது. ஆனால் இதனை செயல்படுத்துவது எப்படி சாத்தியமாகும் என்று பார்க்க வேண்டும்.
பொதுவாக 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை மாநிலங்களில் சட்டசபை தேர்தல்களை நடத்தும் போது அவை நாடாளுமன்ற தேர்தல் நடத்தப்படும் தேதியுடன் ஒத்துப்போவதில்லை. மாறாக காலதாமதமாகவோ அல்லது முன்கூட்டியோ நடத்தும் சூழ்நிலைதான் இருக்கிறது.
அரசியல் அமைப்புச் சட்டத்தில் திருத்தங்கள் கொண்டு வந்த பின்னரே 'ஒரே நாடு ஒரே தேர்தல்' திட்டத்தை அமல்படுத்த முடியும். இதனை அரசியல் கட்சியினர் எந்த அளவிற்கு ஏற்றுக் கொள்வார்கள் என்று தெரியவில்லை. நாடு சுதந்திரம் பெற்ற காலகட்டத்தில் நாடாளுமன்றத்திற்கும், சட்டசபைகளுக்கும் ஒரே தேதியில் தான் தேர்தல் நடந்து இருக்கிறது. கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் அரசுகள் திடீரென்று கவிழ்ந்ததால் சட்டசபை தேர்தல் முன்கூட்டியே நடத்தப்பட வேண்டிய நிலை வந்துவிடும். இதனால் நாடாளுமன்ற தேர்தல் தேதியுடன் சட்டசபை தேர்தல் தேதி ஒத்துப்போகவில்லை.
நாடாளுமன்றம், சட்டசபைக்கு தேர்தல்கள் வெவ்வேறு தேதிகளில் நடத்தப்படும் போது இலவசங்கள், மானியங்கள் என்று அறிவிக்கப்பட்டு பிரசாரங்கள் மேற்கொள்ளப்படும். இதனால் வளர்ச்சித் திட்டங்கள் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. ஒரே நாடு, ஒரே தேர்தல் ஆலோசனை அமல்படுத்தப்பட்டால் மிகவும் நல்லது.
இவ்வாறு அவர் கூறினார்.
பொதுமக்கள் நலன்
சென்னையில் வசிக்கும் பாரதியாரின் தங்கை தங்கமாளின் கொள்ளு பேத்தி டாக்டர் இரா. உமாபாரதி கூறியதாவது:-
'ஒன்று பட்டால் உண்டு வாழ்வே - நம்மில், ஒற்றுமை நீங்கில் அனைவருக்கும் தாழ்வே' மற்றும் 'உயிர்களிடத்தில் அன்பு வேண்டும்' என்றெல்லாம் பொதுமக்கள் நலன் கருதி பல கருத்துகளை எங்களுடைய தாத்தா பாரதியார் கூறிச்சென்று உள்ளார். 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' என்று குரல் ஒலித்து வரும் இந்த வேளையில் அரசின் கஜானாவை பாதுகாப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்போவதாக கூறப்படுகிறது. 1 நாள், 2 நாள் என்று நாட்களை பார்க்காமல் ஓட்டு போடும் பொதுமக்களை பார்க்க வேண்டும். 2 நாட்கள் தேர்தலை நடத்தினால் அரசுக்கு ஒன்றும் பெரிய அளவில் செலவு ஏற்பட போவதில்லை. மாறாக வேட்பாளர்களுக்குத்தான் செலவு அதிகமாகும். காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரி வரை ஒரே நாள் தேர்தல் என்றால், நாடு முழுவதும் ஒரே நாளில் ஒரே மாதிரியான காலநிலை இருக்கப்போவதில்லை. ஒரு பகுதியில் மழையும், ஒரு பகுதியில் வெப்பமும் இருக்கும். வேட்பாளர்களும் கடந்த முறை செய்த சாதனை பட்டியலுடன் பொதுமக்களை சந்தித்து வாக்குகளைக் கேட்க வேண்டும். நிர்வாகப் பிரச்சினையைப் பார்க்காமல் பொதுமக்கள் நலன் கருதி முடிவுகளை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தொலைநோக்குப் பார்வை
ஐகோர்ட்டு வக்கீல் பி.மீனாட்சி கூறியதாவது:-
'ஒரே நாடு, ஒரே தேர்தல்' என்ற முறையில் பொதுமக்களுக்கும், அரசுக்கும் நேரம் விரயமாவது தடுக்கப்படுவதுடன், அரசுக்கு மிக முக்கியமாக தேர்தல் செலவினங்களும் மிகக் குறைவாக இருக்கும். அதேப்போல் எந்தவித குழப்பமும் இல்லாமல் தேர்தல் முடிவுகளும் உடனுக்குடன் தெரிந்து விடும். ஒரே நாடு ஒரே தேர்தல் முறை மாநில கட்சிகளைவிட தேசிய கட்சிகளுக்குத்தான் பலமாக இருக்கும். கொள்கை ரீதியாக மாநில கட்சிகள் தேசிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து கொள்ளும் நிர்ப்பந்தத்திற்கும் ஆளாக நேரிடும். தேர்தல் சட்டங்கள் தொலைநோக்கு பார்வையில்தான் அமைக்கப்பட்டு இருக்கும். மாநில இடைத்தேர்தல்கள், ஆட்சி கலைப்பு போன்ற காரணங்களால் இந்த முறை எப்படி சாத்தியமாகும் என்பது கேள்வி குறிதான்.
இவ்வாறு அவர் கூறினார்.
வளர்ச்சியில் கவனம்
பரங்கிமலையைச் சேர்ந்த நிதி மற்றும் வரி ஆலோசகர் சி.சிவகுமார் கூறியதாவது:-
அதிக மக்கள் தொகை கொண்ட நமது நாட்டில் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு தேர்தல் செலவினங்களை குறைக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். அதே நேரத்தில் தேர்தல் என்றால் அரசு எந்திரமும், காவல் துறை மற்றும் வருவாய் துறை உள்ளிட்ட துறைகளும் 3 மாதங்களுக்கு மக்கள் பணியில் முழுமையாக ஈடுபட முடியாமல் தேர்தல் பணியில் ஈடுபடுவதால் மக்கள் பணி செய்ய முடியாத நிலையும் ஏற்படும். இருந்தாலும் ஒரே நாடு ஒரே தேர்தல் ஆலோசனை முழுமையாக வரவேற்கத்தக்கதுதான். இதன் மூலம் அரசுக்கு செலவினங்கள் குறைவதுடன், வளர்ச்சியிலும் அதிக கவனம் செலுத்த முடியும். ஜனநாயக அரசியல் கட்சிகளுக்கும் செலவுகளும் குறைய வாய்ப்பு அதிகம் உள்ளது. எனவே அனைத்து தரப்பினரும் இதற்கு வரவேற்பு அளிப்பார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
தெளிவான தீர்ப்புக்கு வாய்ப்பு
தகவல் தொழில்நுட்ப நிறுவன அதிகாரி சீனிவாசன் கூறியதாவது:-
'ஒரே நாடு, ஒரே தேர்தல்' என்ற முறையில் மத்திய, மாநில அரசுகளை தேர்வு செய்வதன் மூலம் தெளிவான தீர்ப்பு அளிக்க மக்களுக்கு ஒரு வாய்ப்புக் கிடைக்கும். அதேப்போல், சட்டசபைக்கு ஒரு நாளும், நாடாளுமன்றத்திற்கு ஒரு நாளும் தேர்தல் என்றால் அரசுக்கு செலவு அதிகரிப்பதுடன், சட்டம்-ஒழுங்கு பிரச்சினைகளும் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இது ஒரே நாளில் இரண்டு தேர்தல்களும் நடத்துவதன் மூலம் அரசுக்கு செலவு குறைவதுடன், பொதுமக்களுக்கும் நேரமும், பணமும், உழைப்பும் மிக்சப்படும். ஒருமித்த கருத்துகளை கொண்ட மத்திய, மாநில அரசுகளை ஒரே நேரத்தில் தேர்வு செய்வதன் மூலம் பொதுமக்களுக்கும் நன்மைகள் அதிகரிக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.