கும்மட்டிக்களி கன்னிகள்..!


கும்மட்டிக்களி கன்னிகள்..!
x

கேரளாவின் திருச்சூர், பாலக்காடு மற்றும் மலப்புரத்தில் நடந்த ஓணம் கொண்டாட்டத்தின் போது சுனிதா, சபீதா மற்றும் சனிதா ஆகியோர் கும்மட்டிக்களி என்ற பாரம்பரிய நடனத்தை ஆடி அசத்தினர்.

கேரள பாரம்பரிய நடனமாடும் முதல் பெண்மணிகள் என்ற பெருமையை சுனிதா, சபீதா மற்றும் சனிதா ஆகியோர் பெற்றுள்ளனர். கேரளாவின் திருச்சூர், பாலக்காடு மற்றும் மலப்புரத்தில் நடந்த ஓணம் கொண்டாட்டத்தின் போது இவர்கள் கும்மட்டிக்களி என்ற பாரம்பரிய நடனத்தை ஆடி அசத்தினர்.

இதில், சனிதா ஆசிரியையாகப் பணியாற்றுகிறார். சபீதாவும், சுனிதாவும் திருச்சூரில் உள்ள தனியார் நிறுவனங்களில் பணியாற்றுகிறார்கள். தங்கள் ஆசையை நிறைவேற்ற குடும்பத்தினர் முழு ஆதரவு அளிப்பதாக இவர்கள் கூறுகிறார்கள்.

இது குறித்து சனிதா கூறுகையில், "கும்மட்டிக்களி நடனத்தில் ஓர் அங்கமாக இருக்க வேண்டும் என்பது என் கனவு. பல ஆண்டுகளாக நாங்கள் பார்வையாளர்களாகவே இருந்தோம். சிறு வயதிலேயே முகமூடி அணிந்து புற்களால் ஆடை செய்வோம். ஆனால், நடனமாட எங்களுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. என் கனவைப் பற்றி கணவரிடம் சொன்னபோது, அவர் ஒப்புக்கொண்டு அனைத்து கட்டத்திலும் உதவினார்" என்றார்.

சுனிதா, "கும்மட்டிக்களி நடனம் எங்களின் குடும்ப நடனம். முந்தைய ஆண்டுகளில் திருச்சூரில் புலிக்களி ஆட்டத்தை பெண்கள் ஆடினாலும், கும்மட்டிக்களி ஆட்டத்தில் பங்கேற்க ஊக்குவிக்கப்படவில்லை. எனினும், கும்மட்டிக்களி ஆட்டத்தில் பங்கேற்றபோது சிலர் எதிர்த்தனர். அதனால் மீண்டும் புலிக்களி ஆட்டத்துக்கு திரும்பினோம். இந்தக் கலை வடிவங்கள் பல நூற்றாண்டுகளாகப் பெண்களை ஒதுக்கியே வந்துள்ளது. இப்பகுதியில் உள்ள இளைஞர்கள் கும்மட்டிக்களியை ஓணத்துடன் தொடர்புடைய உள்ளூர் திருவிழாவாகக் கருதுகின்றனர். வீடு, வீடாகச் சென்று குடும்பங்களுக்கு ஓணம் வாழ்த்துகளை தெரிவிக்கும் கும்மட்டிக்களி நிகழ்ச்சி மணிக்கணக்கில் நீடிக்கிறது. இந்தப் பாரம்பரிய கலையில் பெண்கள் பங்கேற்பதை மக்கள் வரவேற்கத் தொடங்கியுள்ளனர்" என்றார்.

கும்மட்டிக்களி கலைஞர்கள் பார்ப்படகபுல்லு என்ற புல் வகையால் ஆன ஆடையை அணிவார்கள். பலா மரம் உள்ளிட்ட மரத்தால் ஆன முகமூடியை அணிவார்கள். அந்த முகமூடியில் பிரகாசமான வண்ணங்கள் பூசப்படுகின்றன. ஒவ்வொரு கும்மட்டியும் இந்து புராணங்களில் இருந்து வரும் கதாபாத்திரங்களை சித்தரிக்கிறது.


Next Story