கவிதா ராமு: புதுமையான புதுக்கோட்டை கலெக்டர்


கவிதா ராமு: புதுமையான புதுக்கோட்டை கலெக்டர்
x

புதுக்கோட்டை கலெக்டரான 'கவிதா ராமு', பல அதிரடி நடவடிக்கைகளுக்கு புகழ்பெற்றவர். 'சமூகநீதி' மீறப்படும் இடங்களில் எல்லாம், அதை நிலைநாட்ட போராடுபவர். அதிரடி சம்பவங்கள் மட்டுமின்றி பல வைரல் சம்பவங்களுக்கும் இவர் புகழ் பெற்றவர்.

ஆம்...! மழைக்காலத்தில் பள்ளிக்கு விடுமுறை கோரி கலெக்டரின் சமூக வலைத்தளத்தில் பள்ளி மாணவர்கள் பதிவிட்டதற்கு, பதில் அளித்து விடுமுறை விட்டது, மகளிர் தின விழாவின்போது சக பெண் அதிகாரிகளை உற்சாகப்படுத்தும் நோக்கில், அவர்களுடன் நடனமாடியது என இந்த அதிரடி கலெக்டர் பல சமயங்களில், அன்பான கலெக்டராகவும் மாறிவிடுவார். அதிரடி கலந்த அன்புடன், சமூகநீதி சிந்தனைகளுடன் மக்கள் பணியாற்றி வரும் கவிதா ராமுவை சந்தித்து பேசினோம்.

நம்முடைய கேள்விகளுக்கு, நிதானமாக பதிலளித்தார். அவற்றை தொகுத்திருக்கிறோம்...

கவிதா ராமு எப்போதும் டிரெண்டாகவே இருப்பது எப்படி?

(சிரிக்கிறார்) டிரெண்டாக இருக்க வேண்டும் என்பது எனது ஐடியா கிடையாது. என்னுடைய செயல்பாடுகளும், சுபாவமும் அப்படி அமைந்துவிட்டது.

சமூக சீர்திருத்த கருத்துக்கள், சிறு வயதில் இருந்தே எனக்குள் ஆழமாக பதிந்துவிட்டது. எனது தந்தை ராமு நிறைய கூறியிருக்கிறார். எனது தந்தை ஊரான அரியலூர் மாவட்டம் கண்டிராதித்தம் கிராமத்திற்கு பெரியார் 3 முறை வந்திருக்கிறார். அப்போதெல்லாம் என்னுடைய தந்தை கருப்பு சட்டை அணிந்து, முன் நின்றிருக்கிறார். அதேசமயம் மூட நம்பிக்கைகளை தவிர்க்க நிறைய நிகழ்ச்சிகளை எனது தந்தையும் நடத்தியிருக்கிறார்.

பெரியார் பேசிய கருத்துகள், அவரது கொள்கைகளை என் தந்தை மூலமாக நிறைய கேட்டிருக்கிறேன். நானும் நிறைய புத்தகங்கள் படித்திருக்கிறேன். அதனால் எனக்கு இயல்பாகவே சமூக விழிப்புணர்வு கொஞ்சம் அதிகம். அது என்னுடைய பேச்சிலும், செயலிலும் வெளிப்படுவதாக நினைக்கிறேன்.

ஊழியர்களை உற்சாகப்படுத்துவது எனது இயல்பான குணம் தான். சமீபத்தில் நடந்த மகளிர் தின விழா நிகழ்ச்சியையும் இயல்பாக தான் ஏற்பாடு செய்து கொண்டாடினோம். ஊழியர்களும் உற்சாகமாக பங்கேற்று அவர்களுக்குள் இருந்த திறமைகளை வெளிப்படுத்தினர். இது ஒரு ஊக்கம் தான்.

ஐ.ஏ.எஸ். அதிகாரியாகும் ஆசை எப்போது தோன்றியது?

சிறுவயதில் எனக்கு ஐ.எப்.எஸ். அதிகாரியாக பணியாற்றும் ஆசை இருந்தது. ஏனெனில் ஐ.எப்.எஸ். அதிகாரியாக பணியாற்றும்போது நிறைய உலக நாடுகளுக்கு சென்று பணியாற்றலாம் என்ற எண்ணம் இருந்தது. அதன்பின் நான் நடனத்தில் முழு கவனம் செலுத்தினேன். நடனமும் கற்று கொண்டேன். அந்த நேரத்தில் எனக்கு தமிழ்நாட்டை விட்டு செல்ல மனமில்லை. நடன ஆசையினால், ஐ.எப்.எஸ். ஆபீசர் ஆசையை விட்டுவிட்டேன்.

நடனம் கற்றுக்கொண்டு, நடனத்தை கற்றுக்கொடுத்தபடியே விரிவுரையாளராகவும் பணியாற்றிக்கொண்டிருந்தேன். அதையே, என் வாழ்க்கையாக மாற்றிக்கொள்ளும் ஆசையும் இருந்தது. அப்போதுதான் எனது தந்தை என்னை ஐ.ஏ.எஸ். ஆபீசராக பார்க்க ஆசைப்பட்டார். நடனத்தில் மிகுந்த ஆர்வம் காட்டுவதைபோல் ஐ.ஏ.எஸ். தேர்வை எழுதி, வெற்றி பெற வேண்டும் என என்னிடம் கூறினார். அதற்கு பிறகுதான், ஐ.ஏ.எஸ். பணியில் ஆர்வம் காட்டினேன். 2002-ம் ஆண்டு ஐ.ஏ.எஸ். தேர்வு எழுதி வெற்றி பெற்றேன்.

கலெக்டர் என்பதை தாண்டி கவிதாராமுவின் கூடுதல் திறமைகள் என்ன?

நான் நடனம், இசையை கற்றிருக்கிறேன். தியாகராஜ ஆராதனையில் பாடியிருக்கிறேன். வீணையும் வாசிப்பேன். பரதத்தில் நான் ஒரு டீச்சர். பள்ளியில் படிக்கும்போது விளையாட்டு வீராங்கனை. விளையாட்டுகளில் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தையும் பெற்றிருக்கிறேன்.

10-ம் வகுப்பு வரை விளையாட்டில் ஆர்வமாக இருந்தேன். உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல், ஈட்டி எறிதல் போட்டிகளில் மாநில அளவில் வெற்றி பெற்று பரிசுகளை பெற்றிருக்கிறேன். அந்த நேரத்தில் நடனத்தின் மீதான ஆர்வம் அதிகமாக இருந்ததால் விளையாட்டு மீதான ஆர்வத்தை விட்டுவிட்டேன். ஒருசில நேரங்களில், அதை நினைத்து வருந்தியது உண்டு.

பரதநாட்டியத்தில் அதிக ஈடுபாடு கொண்டிருப்பது எப்படி?

இசை பயிற்சிகள் மூலமாக, பரதநாட்டியத்தில் ஆர்வம் உண்டானது. அதன் காரணமாக 4½ வயதிலிருந்தே நடனம் ஆடி வருகிறேன். பரதம் முறையாக கற்றுள்ளேன். எனக்கு நடனமாடுவது மிகவும் பிடிக்கும். நான் புதுக்கோட்டைக்கு கலெக்டரான பின்பு பரத நாட்டியம் ஆடவில்லை. அதற்கு முன்பு வரை ஆடியுள்ளேன். கொரோனா காலத்திற்கு முன்பு துறை அதிகாரியாக இருந்தபோது பரத நாட்டியம் ஆடியிருக்கிறேன். மார்கழி மாத சீசனில் பரதநாட்டியம் ஆடியிருக்கிறேன்.

ஜப்பான், அமெரிக்கா, சிங்கப்பூர், மலேசியா, ஆங்காங், கனடா உள்ளிட்ட வெளிநாடுகளிலும் பரத நாட்டியம் ஆடியிருக்கிறேன். பரதநாட்டியம் ஆடி, முன்னாள் முதல்-அமைச்சர்கள் கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோரிடம் விருதும் வாங்கியுள்ளேன். தற்போது குச்சிப்புடி நடனமும் கற்று வருகிறேன். பரதமும், குச்சிப்புடியும் இணைந்து ஆட வேண்டும் என்பது வெகுநாள் ஆசை. ஒரு நடன கலைஞராக, அதை என்னுடைய லட்சியமாகவும் கொண்டிருக்கிறேன். நான் ஐ.ஏ.எஸ். அதிகாரியாக பணியாற்றுவதுடன், நடனம் கற்றுக் கொள்வதிலும், நடனம் கற்றுக் கொடுப்பதிலும் ஆர்வம் காட்டுகிறேன்.

உங்களது நடவடிக்கைகளை பாராட்டியும் செய்திகள் வரும். அதேபோல விமா்சனங்களும் வரும். இதனை எப்படி எடுத்துக்கொள்வீர்கள்?

எனது நடவடிக்கைகளை பொறுத்தவரை நான் சரியாக செய்கிறேன். என்னுடைய பார்வையில், என்னுடைய மனசாட்சிக்கு விலகி செல்லாமல் பணியாற்றுகிறேன். மற்றவர்களுடைய பார்வையில் எனது நடவடிக்கைகள் சர்ச்சையாக தெரியலாம். அதேபோல, மற்றவர்கள் அதனை எப்படி பார்க்கிறார்கள்? என்பது அவர்களது விருப்பம். நான் அதை பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை.

என்னை பற்றிய விமர்சனங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவினால் அதிலிருந்து ஒதுங்கி விடுவேன். விமர்சனங்கள் முன்வைக்கப்படும்போது அதில் நேர்மறையான மற்றும் எதிர்மறையான கருத்துகளும் வரும். அந்த கருத்துகளால், மனது பாதிக்கக் கூடாது என்பதற்காக அதில் இருந்து வெளியே வந்துவிடுவேன். எனது தாய், தந்தையிடம் அதுபோன்ற விமர்சனங்களை பார்க்க வேண்டாம் என சொல்லிவிடுவேன். எனது நண்பர்களுக்கு என்னைப் பற்றி தெரியும். அதனால் அவர்கள் என்னிடம் எதுவும் கேட்க மாட்டார்கள்.

இதுவரை உங்களை பற்றி வெளிவந்த விமர்சனங்கள், சர்ச்சைகளில் மிகவும் வேடிக்கையானது எது?

விமர்சனங்கள், சர்ச்சைகள் என எதை வைத்து சொல்ல முடியும்...? எனது வேலையை நான் பார்க்கிறேன். 'சர்ச்சை' என கருத்து தெரிவிப்பவர்கள், உங்கள் வேலையை நீங்கள் பாருங்கள் அவ்வளவு தான். நான் எதையும் பெரிதாக எடுத்து கொள்ள மாட்டேன்.

உங்களுடைய தந்தை ஐ.ஏ.எஸ். அதிகாரியாக பணியாற்றியவர். உங்களது பணியில் சில நெருக்கடியான, குழப்பமான சூழல்களில் அவரிடம் அறிவுரை கேட்பது உண்டா?

நெருக்கடியான, குழப்பமான விஷயங்கள் எதையும் நான் வீட்டில் பகிர்ந்து கொள்ளமாட்டேன். அதை நானே சமாளிப்பேன். இது எனது தந்தைக்கும் தெரியும். நான் பணி தொடர்பாக எனது தந்தையிடம் எந்த அறிவுரையையும் கேட்டதில்லை. என்னுடைய தந்தை ஐ.ஏ.எஸ். அதிகாரியாக பணியாற்றியவர் என்றாலும், என்னுடைய பணி சம்பந்தமான விஷயங்கள் பற்றி அவரிடம் ஆலோசித்தது இல்லை.

* உங்களுடைய செயல்பாடுகளுக்கு தந்தையின் பாராட்டுகள் கிடைத்திருக்கிறதா?

நிச்சயமாக அவர் என்னை பல நேரங்களில் பாராட்டியிருக்கிறார். பெருமையாகவும் பேசுவார். தற்போது கூட மகளிர் தின விழா கொண்டாடிய வீடியோவை பார்த்து என்னை பாராட்டினார். எனது தாய் மணிமேகலையும், தம்பி கார்த்தியும், நண்பர்களும் எனது செயல்பாடுகளை எப்போதும் பாராட்டுவர்.

ஐ.ஏ.எஸ். குடும்ப பின்னணி என்பதால் தந்தையின் பணிமாறுதல் காரணமாக 9 பள்ளிகள் மாறி 12-ம் வகுப்பை படித்து முடித்ததாக கூறப்படுவது உண்மையா?

உண்மை தான். கோவையில் எனது தந்தை உதவி கலெக்டராக பணியாற்றினார். அப்போது பணியிட மாறுதல் காரணமாக நானும் பள்ளியை மாற்ற வேண்டியிருந்தது. கோவை, திருப்பத்தூர், சேலம், கடலூர், மதுரை, (மதுரையில் மட்டும் 3 பள்ளி) தஞ்சாவூர், சென்னை ஆகிய இடங்களில் படித்தேன். அத்தகைய இடமாறுதல், பள்ளி மாறுதல்களுக்கு நான் பழக்கப்பட்டிருந்ததால், அதனை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. எனக்கு அந்த நேரத்தில் நட்புகளை தொடருவதில் மட்டுமே கஷ்டமாக இருந்தது. அதே நேரத்தில் புதிய நட்புகளும் கிடைத்தது, பழகி விட்டது. கல்லூரி வாழ்க்கையை பொறுத்தமட்டில் சென்னையில் மட்டும்தான் படித்தேன். பள்ளி, கல்லூரி நண்பர்களுடன் இன்றளவும் தொடர்பில் தான் உள்ளேன்.

அரசு பணியில் உங்களது ரோல் மாடல் யார்?

அரசு பணியில் ரோல் மாடல் என்று ஒருவரை மட்டுமே குறிப்பிட்டு கூற முடியாது. ஏனெனில் சிலரது செயல்பாடுகள் பிடித்திருக்கும். சிலரது நடவடிக்கைகள் பிடித்திருக்கும். சிலரது சீர்த்திருத்தங்கள் மற்றும் புத்தாக்க எண்ணங்கள் பிடித்திருக்கும். அந்தவகையில் அமுதா, மைதிலி, உதய்சந்திரன், ஒடிசா கேடரில் உள்ள பாலகிருஷ்ணன் என நிறைய அதிகாரிகளை அவர்களது பணியின் செயல்பாடுகளால் பிடிக்கும். அவர்களை எல்லாம் எனது ரோல்மாடலாக நான் எடுத்துக்கொள்வேன்.

ஒவ்வொரு அதிகாரிகளுக்கும் ஒரு லட்சியம், ஒரு பயணத்திட்டம் இருக்கும். உங்களுடையது என்ன?

கலெக்டராக என்னால் எவ்வளவு நலத்திட்டங்கள் செய்ய முடியுமோ? அதை எல்லாம் செய்வேன். எனக்கென தனியாக லட்சியம், பயண திட்டம் என்று வைத்து கொண்டது கிடையாது. ஒரு அதிகாரியாக எந்த துறையில் பணி செய்தாலும் அதில் சிறப்பாக பணி செய்ய வேண்டும் என்பது தான் எனது எண்ணம். நடனத்தில் எனக்கு லட்சியம் உண்டு.

நீங்கள் மேற்கொண்ட நடவடிக்கைகளில் ஆத்ம திருப்தி அளித்தது எது?

புதுக்கோட்டை மாவட்டத்தில் முத்துக்குடாவை சுற்றுலா தலமாக்க நடவடிக்கை எடுத்தது எனக்கு ஆத்ம திருப்தி அளித்தது.

செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடர்பாக நீங்கள் தயாரித்த விழிப்புணர்வு வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. அந்த வீடியோவை தயாரிக்க நினைத்தது எப்படி?

செஸ் விளையாடுவது போன்று வாளுடன் ஒரு நடனத்தை வைத்து தயாரிக்க திட்டமிடப்பட்டது. அந்த வீடியோவுக்கு நல்ல வரவேற்பு இருந்தது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது முகநூல் பக்கத்தில் பாராட்டி பகிர்ந்திருந்தது பெருமகிழ்ச்சி. இதேபோல் சீன அதிபர் மாமல்லபுரம் வந்தபோது கலை நிகழ்ச்சிகள் நடத்தும் குழுவுக்கு தலைமை பொறுப்பை ஏற்று நடத்தினேன். இதில் கலை நிகழ்ச்சிகளை பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜின் பிங் ஆர்வமாக கண்டு களித்தனர். இந்நிகழ்ச்சியை பிரதமர் மற்றும் சீன அதிபர் பாராட்டினர்.

* உங்களது திருமண வாழ்க்கை பற்றி கூறுங்கள்?

நான் காதல் திருமணம் செய்து கொண்டேன். எனது கணவர் ராகுலை சென்னையில் ஒரு நிகழ்ச்சியில் நான் சிறப்பு விருந்தினராக பங்கேற்க சென்றபோது சந்தித்தேன். அவர் மல்டி நேஷனல் கம்பெனியில் துணை தலைவராக பணியாற்றி வருகிறார். தனியாக ஸ்டார்ட் அப் நடத்தி வருகிறார். எங்களுக்குள் ஏற்பட்ட பழக்கம் காதலாக மாறியது. எனது வீட்டில் கூறியபோது பெற்றோர் சம்மதம் தெரிவித்தனர். கடந்த 2021-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டோம். எனது தந்தை, தாய் இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டவர்கள் தான்.


'நச்சு'ன்னு '10' பதில்கள்..!

கலெக்டர் பணி என்பது?

சுவாரசியமானது.

கலெக்டர் ஆகாமல் இருந்திருந்தால்?

முழு நேர நடன ஆசிரியை.

தமிழ்நாட்டில் பிடித்த விஷயம் எது?

சமூகநீதி சீர்திருத்த கருத்துக்கள்.

பிடிக்காத விஷயம் எது?

எதுவும் இல்லை.

ஐ.ஏ.எஸ். ராங்கில் பணியாற்ற விரும்பும் பொறுப்பு?

சுற்றுலாத்துறை.

மிகவும் வியந்து படித்த புத்தகம்?

ஓஷோ புத்தகங்கள்.

படிக்க விரும்பும் புத்தகம்?

'மாபெரும் தமிழ் கனவு' என்ற புத்தகத்தின் ஆங்கில மொழி பெயர்ப்பு.

உங்களது நிறைவேறாத ஆசை எது?

ஆசைக்கு அளவே இல்லை.

குடும்பம் என்பது?

முதுகெலும்பு.

டிரான்ஸ்பர் என்பது?

நல்லது.


Next Story