நகங்கள் மஞ்சள் நிறமாக மாறினால்..


நகங்கள் மஞ்சள் நிறமாக மாறினால்..
x

சிலருக்கு நகங்கள் மஞ்சள் நிறமாகவோ அல்லது வேறு நிறமாற்றங்களுடனோ காணப்படும். அது ஏதேனும் நோய் பாதிப்புக்கான அறிகுறியாகத்தான் இருக்கும் என்று பயப்பட தேவையில்லை.

பெண்கள் மட்டுமல்ல ஆண்களும் இப்போது நக பராமரிப்புக்கு முக்கியத்துவம் கொடுக்க தொடங்கி இருக்கிறார்கள். நகங்களை சுத்தமாக வைத்திருந்தாலே போதும். அதுவே உடல் நலனை பிரதிபலித்துவிடும். சிலருக்கு நகங்கள் மஞ்சள் நிறமாகவோ அல்லது வேறு நிறமாற்றங்களுடனோ காணப்படும். அது ஏதேனும் நோய் பாதிப்புக்கான அறிகுறியாகத்தான் இருக்கும் என்று பயப்பட தேவையில்லை. மஞ்சள் நக பிரச்சினை கொண்டவர்கள் நகங்களை எவ்வாறு சுத்தம் செய்வது என்று பார்ப்போம்.

நகங்களை முறையாக சுத்தம் செய்யாதது, நெயில் பாலிஸை அளவுக்கு அதிகமாக நகங்களில் தடவுவது போன்ற காரணங்களாலும் நகங்கள் நிறமாற்றம் அடையக்கூடும். பேக்கிங் சோடா மற்றும் பற்களை வெண்மையாக்கும் பேஸ்டுகளை கொண்டு கூட நகங்களை சுத்தம் செய்யலாம். இவை சருமத்தில் எதிர்மறையான விளைவுகள் எதையும் ஏற்படுத்தாது. துத்தநாகம் மற்றும் பயோட்டின் அதிகம் நிரம்பிய உணவுகளை உட்கொள்ளலாம். இவை நகங்களை வலுவாக்கும். நகங்கள் பளபளப்புடன் காட்சி அளிப்பதற்கும் உதவும்.

நக பராமரிப்புக்கு எலுமிச்சை பழத்தையும் உபயோகிக்கலாம். ஒரு டம்ளர் குளிர்ந்த நீரில், எலுமிச்சை பழத்தை சாறு பிழிந்து கொள்ளவும். அந்த நீரில் நகங்களை முக்கி மூன்று நிமிடங்கள் ஊற வைக்கவும். பின்பு நகங்களை உலரவைத்துவிட்டு கைகளை கழுவிவிடலாம். தொடர்ந்து இவ்வாறு செய்துவந்தால் நகங்களில் படிந்திருக்கும் கறைகள் நீங்கும். நகங்கள் பிரகாசிக்கவும் செய்யும்.

வைட்டமின் ஈ மாத்திரைகள், வைட்டமின் ஈ லோஷன்கள் போன்றவையும் நகங்களில் படிந்திருக்கும் மஞ்சள் நிறத்தை போக்க உதவும். வைட்டமின் ஈ நிறைந்த ஆமணக்கு எண்ணெய் அல்லது பாதாம் எண்ணெய்யையும் நகங்களில் தடவி மசாஜ் செய்யலாம். இதுவும் மஞ்சள் நிறத்தை போக்க உதவும். பூஞ்சை தொற்றுகளை விரட்டும் லோஷன்கள், மருந்துகளையும் டாக்டரின் பரிந்துரையின் பேரில் பயன்படுத்தலாம்.

கால் மற்றும் விரல் நகங்கள் ஆரோக்கியமாகவும், பொலிவாகவும் காட்சி அளிப்பதற்கு வாரம் ஒருமுறை ஆலிவ் எண்ணெய் கொண்டு மசாஜ் செய்து வரலாம். வேதிப்பொருட்கள் அதிகம் கலந்த நக பாலிஷ்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். நகங்களை கடிப்பதையும் நிறுத்த வேண்டும்.

கைகளை அடிக்கடி கழுவும் பழக்கத்தையும் பின்பற்றி வர வேண்டும். மேலும் கைகளை எப்போதும் உலர்வாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க வேண்டும். நகங்களை முறையாக பராமரித்து வந்தாலே மஞ்சள் நிறமாக மாறுவதை தடுத்துவிடலாம்.


Next Story