சேமிப்பு எப்படி இருக்க வேண்டும்..?
சேமிக்க வேண்டும் என்ற எண்ணம் எல்லோருக்குள்ளும் இருக்கிறது. ஆனால் நினைத்தபடி எல்லோருக்கும் சேமிப்பு அமைந்துவிடுவதில்லை. சிலர் எதிர்பார்த்ததைவிட குறைவாகவே சேமிக்கிறார்கள். சிலரது சேமிப்பு கரைந்தே போய்விடும். காரணம், சேமிப்பில் செய்யும் சில தவறுகள், உங்களது சேமிப்பு கணக்கை மாற்றியமைத்துவிடும். அந்த வகையில் சேமிப்பு நுணுக்கங்களை சென்னையை சேர்ந்த மேக்ஸிடோம் சுப்பிரமணி, விளக்குகிறார். அத்துடன் உங்களது சேமிப்பு எவ்வளவு வருடத்தில் இரட்டிப்பாகும் என்பதையும் விளக்குகிறார். அவர் நம்முடன் பகிர்ந்து கொண்டவை.
* எது சேமிப்பாக கருதப்படும்?
உங்களது அன்றாட வாழ்க்கைக்கு போக மீதமிருக்கும் சிறுபணமும், பெரிய சேமிப்புதான். மாத சம்பளக்காரர்கள் என்றால், அடுத்த சம்பளம் வரும்வரை தனது குடும்பத்திற்கு தேவையான அத்தியாவசிய தேவைகளுக்கு போக மீதமிருக்கும் பணம்தான் சேமிப்பு. ஆனால் அத்தியாவசிய தேவைகளை சுருக்கிக்கொண்டு சேமிப்பவர்களும் இருக்கிறார்கள். அதேபோல அனாவசியமாக செலவழிப்பவர்களும் இருக்கிறார்கள்.
* எந்தெந்த வழிகளில் சேமிக்கலாம்?
கடுகு டப்பாவில் பணத்தை வைப்பதுகூட சேமிப்புதான். ஆனால் நீங்கள் சேமிக்கும் பணம், சேமிக்கும் அளவை விட கூடுதலாக கிடைத்தால்தான் லாபகரமான சேமிப்பாக அமையும். அந்தவகையில் இன்சூரன்ஸ், பிக்ஸட் டெப்பாசிட், ஆர்.டி., வங்கி கணக்கு, தபால் நிலையம், தங்கம்-வெள்ளி, பங்கு சந்தை, மியூட்சுவல் பண்ட், ரியல் எஸ்டேட்... இப்படி சேமிக்க நிறைய வழிகள் இருக்கிறது. இவை ஒவ்வொன்றும், குறிப்பிட்ட வட்டி விகிதம்/முதலீட்டு காலத்தை அடிப்படையாக கொண்டு, சேமிப்பை இரட்டிப்பாக்குகிறது. இதில் உங்களுக்கு தேவையான, பழக்கமான வழிகளில் சேமிக்க பழகுங்கள்.
* பணத்தை விரைவாக இரட்டிப்பாக்கும் சேமிப்பு தளம் எது?
பங்கு சந்தை போன்ற ரிஸ்க் அதிகமாக இருக்கும் எல்லா சேமிப்பு தளங்களும் சேமிப்பை வெகுவிரைவாக இரட்டிப்பாக்கும். அதேசமயம் சிறுதவறு செய்தாலும் உங்களது சேமிப்பை வெகுவிரைவாகவே கரைக்கக்கூடும்.
* சேமிக்கும் விஷயத்தில் எதில் கவனம் செலுத்த வேண்டும்?
சேமிக்கும் விஷயத்தில் 'ரூல் ஆப் 72' ரொம்ப முக்கியம். 'ரூல் ஆப் 72' என்பது, நீங்கள் சேமிக்கும் தொகை, எவ்வளவு காலத்தில் இரட்டிப்பாகும் என்பதை விளக்கும் பார்முலா. உதாரணத்திற்கு, உங்கள் வங்கி கணக்கில் ரூ.1 லட்சம் பணத்தை சேமித்திருப்பதாக நினைத்து கொள்ளுங்கள். வங்கி வட்டிவிகிதம் 7 சதவீதமாக இருந்தால், அது ரூ.2 லட்சமாக இரட்டிப்பாக 10 வருடம் 3 மாதங்களாகும். (72/7) 72/காலம் அல்லது வட்டிவிகிதம் என்பதுதான், இந்த பார்முலா.
இந்த 'ரூல் ஆப் 72' பார்முலாவை பயன்படுத்திதான், எந்த சேமிப்பு திட்டத்தில் பணத்தை முதலீடு செய்து எவ்வளவு காலத்தில் திரும்ப பெறலாம் என்பதை வல்லுநர்கள் தீர்மானிக்கின்றனர்.
* சேமிப்பு பழக்கத்தில் தவிர்க்க வேண்டியவை எவை?
சேமிக்க நினைத்தால், முதலில் கடன் பெறுவதை நிறுத்த வேண்டும். கையில் இருக்கும் கடன் சுமைகளை விரைந்து முடிக்க வேண்டும். ஏனெனில் கடன், சேமிக்க வழிவகையே தராது. 'ரூல் ஆப் 72' படி, வங்கி கடன் அட்டை உங்களது 1 லட்சம் ரூபாய் கடனை, 2 வருடங்களிலேயே ரூ.2 லட்சமாக மாற்றிவிடுவதை விளக்குகிறது.
* எந்தெந்த வயதினர், எந்தெந்த வழிகளில், எவ்வளவு தொகை சேமிக்கலாம்?
புதிதாக வேலைக்கு செல்ல தொடங்கியிருக்கும் இளைஞர்கள், சின்ன தொகையை சேர்த்து வைக்க பழகலாம். குறிப்பாக பங்கு சந்தைகளில், முதலீடு செய்யலாம். அது 10 வருடங்களில் பெரிய முதலீடாக வளர்ந்திருக்கும். குடும்ப தலைவர்கள், 5 வருடங்களில் பலன் தரக்கூடிய குறுகிய கால மியூட்சுவல் பண்ட்ஸில் சேமிக்கலாம். பெண்கள் வழக்கம்போல தங்கத்தில் முதலீடு செய்வது, நகையாக அணிந்து கொள்ளக்கூடிய வாய்ப்பையும் கொடுக்கும். நல்ல முதலீடாகவும் அமையும்.
* பங்குசந்தை இளைய தலைமுறையினருக்கு நன்மை பயக்குமா?
பங்கு சந்தை பற்றி குறுகிய கால படிப்புகள் நிறைய இருக்கின்றன. அதை படிப்பதும் சிறந்த முதலீடுதான். உங்கள் வருமானத்தை பெருக்க இவை கைக் கொடுக்கும். இது உங்களது 2-வது வருமானத்தை உருவாக்கிக் கொடுக்கும்.