மின்சார கட்டணத்திற்கு 'குட்-பை'- சஞ்சய் தேஷ் பாண்டே


மின்சார கட்டணத்திற்கு குட்-பை- சஞ்சய் தேஷ் பாண்டே
x

கர்நாடகாவைச் சேர்ந்த கட்டிடவியலாளரான சஞ்சய் தேஷ் பாண்டே, வீடு மற்றும் அலுவலகத்துக்கு சூரியசக்தி மின்சாரத்தைப் பயன்படுத்துவதன் மூலம் ஆண்டுக்கு ரூ.2 லட்சம் ரூபாய் வரை மிச்சப்படுத்தி வருகிறார்.

கடந்த 1990-ம் ஆண்டு மும்பையில் கட்டிடவியல் படிப்பைப் படித்துக் கொண்டிருந்தபோது, நண்பர் வீட்டுக்கு சென்றிருக்கிறார். அங்கு நண்பரின் தந்தையிடம் பேசிக் கொண்டிருந்தபோது, வீட்டுத் தேவைகளுக்கு சூரியசக்தி மின்சாரத்தை அவர் பயன்படுத்துவது தெரியவந்தது. அப்போதிலிருந்து சூரியசக்தி பயன்பாடு குறித்த ஆர்வம் அவருக்கு அதிகமானது.

இது குறித்து சஞ்சய் கூறுகையில், ''மும்பையில் சிறிய அறையில் தங்கியிருந்தபோது வெப்பம் அதிகமாக இருந்தது. சிறிய அளவிலான சூரியசக்தி மின்சாரம் உற்பத்தி செய்யும் பேனலை அமைத்துக் கொள்ளுமாறும், அதன்மூலம் மின்விசிறியை இயக்க முடியும் என்றும் அங்கு தங்கி இருந்தவர்கள் சொன்னார்கள். அப்போதுதான் முதல் முறையாக முயற்சி செய்து பார்த்தேன். சூரியசக்தி மின்சாரம் மூலம் ஒரு நாள் முழுவதும் ஒரு மின்விசிறி மற்றும் ஒரு மின் விளக்கைப் பயன்படுத்த முடிந்தது. இதன்மூலம் வெப்பத்தில் இருந்து தப்பியதோடு, மின்சாரத்துக்கான செலவும் குறைந்தது.

இந்த அனுபவத்தின் அடிப்படையில் எனது சொந்த ஊரான ஹுப்ளியில் கடந்த 2000-ம் ஆண்டில் சூரியசக்தி மின்சாரம் உற்பத்தி செய்யும் பேனல்களை அமைத்தேன். சூரியசக்தி மின்சாரத்தை நான் பயன்படுத்தியபோது பேனல் விலை அதிகமாக இருந்தது. ஆனால், கடந்த 2 ஆண்டுகளாக அதன் விலை குறைந்திருக்கிறது.

வழக்கமாக என் அலுவலகத்துக்கு ரூ.5,500 வரை மின் கட்டணம் செலுத்தி வந்தேன். சூரியசக்தி மின்சாரத்துக்கு மாறிய பிறகு, மின் கட்டணம் பூஜ்ஜியமாகிவிட்டது. அதேபோல் வீட்டுக்கும் மாதந்தோறும் குறைந்தது ரூ.4 ஆயிரம் வரை மின் கட்டணம் செலுத்திக் கொண்டிருந்தோம். சூரியசக்தி மின்சாரத்தை பயன்படுத்திய பிறகு தற்போது மின் கட்டணம் பூஜ்ஜியமாகிவிட்டது.

வாகனங்களை இயக்க எரிபொருளுக்காக மாதம் ரூ.12 ஆயிரம் செலவழித்து வந்தோம். இன்றைக்கு மின்சார வாகனங்களைப் பயன் படுத்துகிறோம். சூரியசக்தி மின்சாரத்தைப் பயன்படுத்தி வாகனங்களுக்கு சார்ஜ் செய்கிறோம்'' என்றார்.


Next Story