அரிய வகை நோய் பாதித்த குழந்தைகளுக்காக வாழ்க்கையை அர்ப்பணித்த பெண்மணி


அரிய வகை நோய் பாதித்த குழந்தைகளுக்காக வாழ்க்கையை அர்ப்பணித்த பெண்மணி
x

மத்திய அரசு சமீபத்தில் அறிவித்த பத்ம விருது பட்டியலில் புதுவையை சேர்ந்த டாக்டர் நளினியும் இடம் பெற்றார். ஹீமோபிலியா நோயால் (ரத்தம் உறைவதை தடுக்கும்) பாதிக்கப்படும் குழந்தைகளுக்கான சேவையை பாராட்டி நளினிக்கு நாட்டின் உயரிய பத்மஸ்ரீ விருது வழங்கப்படுகிறது.

டாக்டர் நளினி, தஞ்சாவூரை பூர்வீகமாக கொண்டவர். இவரது தந்தை பார்த்தசாரதியும் டாக்டர்தான். தாயார் பெயர் விஜயா. அந்த பகுதியில் `2 ரூபாய் டாக்டர்' என்று பெயர் பெற்ற பார்த்தசாரதி வாகன வசதி இல்லாத அந்த காலத்தில் சைக்கிளில் சென்று கிராம மக்களுக்கு சேவை புரிந்தவர்.

நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்பு 28-5-1944-ல் நளினி பிறந்தார். சிறுவயது முதலே பல்வேறு நோய் தாக்குதலுக்கு ஆளாகி அவரது படிப்பே கேள்விக்குறியானது. அவரது தாய் விஜயா அவருக்கு ஆசிரியராக இருந்து பாடம் கற்பித்து வந்தார்.

நளினியின் தாய் வழி பாட்டி, தாத்தா பெங்களூருவில் வசித்ததால் நளினியும் அங்கு சென்று தனது பள்ளிப் படிப்பை முடித்தார். 6 வயது முதலே யோகாவும் கற்றுக்கொண்டார்.

பெங்களூருவில் பள்ளிப் படிப்பை முடித்த நளினி தமிழக மருத்துவக் கல்லூரிகளில் சேர விண்ணப்பித்தார். ஆனால் இடம் கிடைக்கவில்லை. இதனால் திருச்சி சீதாலட்சுமி- ராமசாமி கல்லூரியில் சேர்ந்து பி.எஸ்சி. (வேதியியல்) படித்தார். அப்போதுதான் புதுச்சேரி மருத்துவக் கல்லூரி (தற்போதைய ஜிப்மர்) குறித்த விவரம் அறிந்து இந்தக் கல்லூரியில் சேர விண்ணப்பித்தார். படிப்பில் சிறந்து விளங்கியதால் அவருக்கு இடமும் கிடைத்தது. 1963-ம் ஆண்டு புதுச்சேரி மருத்துவக்கல்லூரியில் சேர்ந்தார்.

1965-ம் ஆண்டு கோரிமேட்டில் புதிய கட்டிடத்துடன் ஜிப்மர் மருத்துவக் கல்லூரியாக உருவெடுத்தது. அதே கல்லூரியில் குழந்தைகள் மருத்துவ பிரிவில் நளினி எம்.டி. (1971-74) முடித்தார். அதன்பின் யு.பி.எஸ்.சி. எனப்படும் மத்திய பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வை எழுதினார். அதில் வெற்றி பெற்று 1975 முதல் 1977 வரை சென்னையில் பணியாற்றினார். அதன் பிறகு ஜிப்மருக்கு பணிமாறுதலாகி புதுவைக்கு வந்து தனது மருத்துவ சேவையை நளினி தொடங்கினார்.

அந்த காலகட்டத்தில்தான் ஹீமோபிலியா நோய் பாதித்த குழந்தைகள் ஜிப்மருக்கு சிகிச்சைக்கு வந்தனர். 10 ஆயிரம் பேரில் ஒருவருக்கு ஏற்படும் இந்த அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளிடம் பரிவு காட்டினார், நளினி. அதுவே தனக்கான முழுநேர பணியாக மாற்றிக் கொண்டார்.

''இந்த நோயானது மரபணு மாற்றத்தால் வரக்கூடியது. இது பெரும்பாலும் ஆண் குழந்தைகளையே தாக்குகிறது. ஆனால் சமீப காலமாக ஒருசில பெண் குழந்தைகளும் பாதிக்கப்பட்டு வருவது துரதிருஷ்டமானது. இந்த நோயை கண்டறிய ஜிப்மர் மற்றும் வேலூர் சி.எம்.சி. மருத்துவமனையில் பிரத்யேக ஆய்வகம் உள்ளது. இதற்கு வயிற்றுப்பகுதியில் இருந்து சதையை எடுத்து ஆய்வு செய்வார்கள்.

வயிற்றில் இருக்கும்போதே குழந்தைக்கு ஹீமோபிலியா பாதிப்பு உள்ளதா? என்பதை கண்டறியலாம். சிறுவயது முதலே எனக்கு குழந்தைகள் மீது பிரியம் அதிகம். அதனால் நான் இதை ஈடுபாட்டோடு செய்கிறேன். நான் அளிக்கும் சிகிச்சைக்கு என்னுடன் படித்தவர்கள், பணிபுரிந்தவர்கள் என பல நல்ல உள்ளங்கள் உதவி வருகின்றனர்'' என ஹீமோபிலியா நோய் பாதிப்பை விளக்கினார்.

இதற்கான மருந்து, மாத்திரைகள் அதிக விலை கொண்டதாகும். அதை சமூக சேவையாளர்கள் மூலம் பெற்று நோய் பாதித்தவர்களுக்கு வழங்கினார். தன்னலமற்ற இந்த சேவைக்காக நளினியுடன் பிற டாக்டர்களும் கைகோர்த்தனர்.

''ஹீமோபிலியாவினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிட டெல்லியில் தனி சங்கம் இருப்பதை அறிந்து கொண்டு, 1985-ம் ஆண்டு புதுச்சேரியிலும் ஹீமோபிலியா சங்கத்தை உருவாக்கினேன். அப்போது என்னிடம் 20 நோயாளிகள் மட்டுமே சிகிச்சை பெற்று வந்தனர். அவர்களுக்கான ஒரு ஊசியின் விலை ரூ.10 ஆயிரம். சிலருக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட ஊசிகளும் தேவைப்படும். அதை நன்கொடையாளர்களிடம் இருந்து பெற்று சிகிச்சை அளித்தேன்.

கடந்த 2001-ம் ஆண்டு முதல்-அமைச்சராக இருந்த ரங்கசாமியை சந்தித்து, ஹீமோபிலியாவினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் நாங்கள் உருவாக்கிய சங்கத்துக்கு இடம் வழங்க கோரிக்கை விடுத்தேன். அதை ஏற்று கோரிமேடு அப்பா பைத்தியசாமி கோவிலுக்கு அருகே உள்ள இடத்தை ரங்கசாமி வழங்கினார். அங்கு கட்டிடமும் கட்டித் தரப்பட்டது.

2005-ம் ஆண்டு முதல், அங்கேயே நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருகிறேன். இப்போது ஹீமோபிலியா நோயால் பாதிக்கப்பட்ட 300 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இவர்கள் அனைவரும் புதுச்சேரி, தமிழகத்தை சேர்ந்தவர்கள்'' என்று கனிவாக பேசும் நளினி, நோயாளிகள் மீது கரிசனம் காட்டுகிறார்.

தன்னிடம் சிகிச்சைக்கு வருபவர்களின் குடும்ப சூழ்நிலைகளை ஆய்வு செய்து உதவுவதில் நளினி தனி விருப்பம் கொண்டார். அந்த வகையில் 40 பேருக்கு கல்லூரி படிப்புக்கு உதவி செய்துள்ளார். வறுமையில் வாடும் அவர்களது தாய்மார்களுக்கு தனியாக சுயஉதவி குழுக்கள் அமைத்து தையல் எந்திரம், ஆடு, மாடு வாங்கி கொடுத்து வருமானத்துக்கு வழிகாட்டியானார்.

''பணி நிறைவு பெற 3 ஆண்டுகள் இருந்த நிலையில் ஜிப்மரில் இருந்து கடந்த 2003-ம் ஆண்டு விருப்ப ஓய்வு பெற்றுவிட்டேன். அதுமுதல் ஹீமோபிலியா நோய் குறித்த பல்வேறு ஆய்வுகளில் ஈடுபட்டவாறு, சங்க கட்டிடத்திலேயே தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகிறேன். இந்த ரத்த உறையாமை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வலியை குறைக்க ஓமியோபதி சிகிச்சைக்கும் ஏற்பாடு செய்து இருக்கிறேன். 6 வயது குழந்தை முதல் 72 வயது முதியோர் வரை சிகிச்சையில் உள்ளனர். ரத்த போக்கு ஏற்படும்போது தரப்படும் ஆன்டி-ஹீமோபிலியா காரணியின் (AHF) ஒரு குப்பி அளிக்க நோயாளிக்கு சுமார் 10 ஆயிரம் ரூபாய் செலவாகும். ஆனால் சங்கத்தின் மூலம் சிறு தொகையை பெற்றுக்கொண்டு, தேவையான ஊசி, மருந்து மாத்திரைகளை வழங்குகிறோம். ரத்த உறையாமை நோய்க்கு ஜிப்மர் மற்றும் தமிழக பகுதிகளில் உள்ள ஆஸ்பத்திரிகளுக்கு மருந்து வாங்கி செல்லும் அளவுக்கு எங்களது ஹீமோபிலியா சங்கம் உயர்ந்துள்ளது'' என்று பொறுப்பாக பேசும் டாக்டர் நளினியின் சேவையை பாராட்டி பல்வேறு நிறுவனங்கள் விருது வழங்கி கவுரவித்துள்ளன.

யுனிசெப் நிறுவனம் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கவுரவித்துள்ளது. கடந்த 2021-ம் ஆண்டு மகளிர் தினத்தன்று நளினியின் உருவம் பொறித்த தபால் தலை வெளியிடப்பட்டுள்ளது. சமீபத்தில் இவரது மகத்தான சேவையை பாராட்டி, மத்திய அரசு பத்மஸ்ரீ விருது அறிவித்துள்ளது.

''மத்திய அரசின் பத்மஸ்ரீ விருதை ஹீமோபிலியா நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு காணிக்கையாக்குகின்றேன். இந்த நோய் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் மருந்துகள் விலை அதிகமாக இருக்கிறது. இதை குறைந்த விலையிலும், தாராளமாக கிடைக்கும் வகையிலும் பிரதமர் நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக இந்தியாவிலேயே இம்மருந்தை உற்பத்தி செய்ய பிரதமர் நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று விருது பெற்ற மகிழ்ச்சியை வெளிக்காட்டாமல், அர்த்தமுள்ள கோரிக்கையை முன்வைத்து நம்மை சிந்திக்க வைத்திருக்கிறார், இந்த சேவை சீமாட்டி.

சிறு வயது சோகம்

டாக்டர் நளினியின் சிறுவயது பருவம் சோகம் நிறைந்தது. அதாவது, அவருக்கு 12 வயது இருக்கும்போது தந்தையான டாக்டர் பார்த்தசாரதிக்கு தலையில் ரத்த அழுத்தம் காரணமாக ரத்தகட்டு ஏற்பட்டது. இதனால் அவரால் இயல்பாக இருக்க முடியவில்லை. நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதையும் அவர் நிறுத்திவிட்டார். இப்படிப்பட்ட இக்கட்டான சூழ்நிலையில் தான் விடாமுயற்சியாக நளினி டாக்டருக்கு படித்தார்.

'குடும்ப ரத்தத்தில் ஊறிய சேவை'

''எனது தந்தை மக்களுக்காக சிறந்த சேவை செய்து '2 ரூபாய் டாக்டர்' என பெயர் வாங்கியவர். எனது அத்தை ராஜி சென்னை பாலவாக்கத்தில் முதியோர் இல்லம் உருவாக்கி சேவை செய்தார். எனவே சேவை என்பது எங்கள் ரத்தத்திலேயே ஊறியது. சிறுவயதிலேயே சேவையிலேயே கவனம் செலுத்தியதால் திருமணம் போன்றவற்றை பற்றி யோசிக்கவில்லை. மத்திய அரசு எனக்கு பத்மஸ்ரீ விருது அறிவித்து இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. மத்திய அரசிற்கும், புதுச்சேரி முதல்-அமைச்சர் ரங்கசாமிக்கு நன்றி. நான் உயிரோடு இருக்கும்வரை சேவை செய்வேன்'' என்றார்.


Next Story