வானிலை மாற்றங்களை துல்லியமாக அறிய அதிநவீன செயற்கைக்கோள் - ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் தகவல்!
இந்த செயற்கைக்கோள்கள் தீவிர வானிலை மாற்றங்களை பற்றி மிகத் துல்லியமாக எச்சரிக்கை கொடுக்க வடிவமைக்கப்பட்டுள்ளன.
பெர்லின்,
ஐரோப்பிய விண்வெளி நிறுவனத்தின் 12 ஆண்டு கால வளர்ச்சியின் விளைவாக, 4 பில்லியன் டாலர்கள் செலவில் புதிய அதிநவீன செயற்கைக்கோள்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்த செயற்கைக்கோள்கள் தீவிர வானிலை மாற்றங்களை பற்றி முன்கூட்டியே மிகத் துல்லியமாக எச்சரிக்கை கொடுக்க வடிவமைக்கப்பட்டுள்ளன.
மூன்று "எம்.டி.ஜி-ஐ" இமேஜிங் செயற்கைக்கோள்கள் மற்றும் 2 "எம்.டி.ஜி-எஸ்" ஒலி அமைப்பு செயற்கைக்கோள்கள் கொண்ட அமைப்பு, சுமார் 3.8 டன் எடை கொண்ட விண்கலம் மூலம் விண்ணில் புவி வட்டப் பாதையில் நிலைநிறுத்தப்படும். இவை 2030 முதல் முழுமையாக செயல்பட தொடங்கும்.
இந்த செயற்கைக்கோள்கள் மருத்துவத்துறையில் பயன்படுத்தப்படும் ஸ்கேனர் போன்று வளிமண்டலத்தை முழுமையாக ஆராயக் கூடியவை. அவை புயல்கள் மற்றும் வெள்ளம் போன்றவற்றை முன்கூட்டியெ அறிவிப்பதில் சிறந்து விளங்கும். வளிமண்டலத்தை ஸ்கேன் செய்து தற்போதைய நிலைமை பற்றிய சிறந்த படத்தை அளிக்கும்.
"எம்.டி.ஜி-ஐ1" செயற்கைக்கோள் இந்த ஆண்டு இறுதிக்குள் ஏரியன் 5 ராக்கெட்டில் ஏவப்பட்டு, ஐரோப்பா மற்றும் ஆப்பிரிக்காவுக்கு மேலே விண்வெளியில் நிலைநிறுத்தப்படும்.
இந்த செயற்கைக்கோள்கள் போன்று குறைந்த துல்லியத்துடன் கூடிய தொழில்நுட்பத்தை சீனா ஏற்கெனவே பரிசோதித்துள்ளதாக ஐரோப்பிய அதிகாரிகள் கூறுகின்றனர். இந்த செயற்கைக்கோள்கள் "ஒலித்தல் அல்லது ஸ்கேனிங் நுட்பம்" மூலம், புதிதாக உருவாகும் புயல்கள் ரேடாரில் தெரியும் முன்னரே அவற்றைப் படம்பிடித்து அனுப்பும் என்று ஐரோப்பிய அதிகாரிகள் கூறுகின்றனர் .
இந்த செயற்கைக்கோள்கள் துல்லியமான அதிக திறன் கொண்டவை. அவை மிகவும் ஆற்றல்மிக்கவை, வானிலை நிகழ்வுகளை துல்லியமக கணிக்க முடியும் என்று 30 ஐரோப்பிய நாடுகளின் அமைப்பான "இயுமெட்சாட்" இன் மேம்பாட்டு இயக்குனர் கிறிஸ்டியன் வங்கி கூறினார்.