தனித்துவமான அரிசி வகைகள்


தனித்துவமான அரிசி வகைகள்
x

இந்தியாவில் அதிகம் உட்கொள்ளப்படும் உணவுகளில் அரிசியும் ஒன்று. இது பசியை போக்குவதோடு உடலுக்கு தேவையான சக்தியையும் அளிக்கக்கூடியது. சாதம், பிரியாணி, புலாவ், இட்லி, கீர் போன்ற வடிவங்களில் அரிசியை சமைத்து உட்கொள்ளலாம்.

பெரும்பாலும் தென்னிந்தியாவிலும், நாட்டின் கிழக்குப் பகுதியிலும் அரிசி உணவு அதிகம் உட்கொள்ளப்படுகிறது. இதில் சுவாரசியமான விஷயம் என்னவென்றால் உலகளவில் அரிசி உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் இந்தியா முதலிடம் வகிக்கிறது.

2021-2022-ம் ஆண்டு நிலவரப்படி, 18.75 மில்லியன் மெட்ரிக் டன்கள் என்ற அளவில், இந்தியா அதிக அளவு அரிசியை ஏற்றுமதி செய்துள்ளது. அந்த ஆண்டில் சுமார் 6.5 மில்லியன் மெட்ரிக் டன் அரிசி ஏற்றுமதியுடன் வியட்நாம் இரண்டாவது இடத்தில் உள்ளது. உலகளவில் மிகப்பெரிய அரிசி உற்பத்தியாளராக இந்தியா விளங்குவதால் சந்தையில் பல்வேறு வகையான அரிசி வகைகள் கிடைக்கின்றன. அவற்றுள் நாட்டின் பல பகுதிகளில் புழக்கத்தில் இருக்கும் முக்கிய அரிசி வகைகள் குறித்து பார்ப்போம்.

இந்திராயணி அரிசி:

இந்த அரிசி வகை மகாராஷ்டிராவின் மேற்குப் பகுதியில் பயிரிடப்படுகிறது. இது அம்பேமோஹர் அரிசியின் கலப்பின வகையாகும். மசால் பாட், வாங்கிரி பாட் போன்றவற்றை தயாரிக்க இந்த அரிசி பயன்படுத்தப்படுகிறது.

பாஸ்மதி அரிசி:

பிரியாணி மீது ஆசை கொள்ளாதவர்கள் எவரும் இல்லை. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரும் ருசிக்கும் உணவாக பிரியாணி அமைந்திருக்கிறது. பிரியாணி அசைவ உணவாக பார்க்கப்பட்டாலும் சைவ உணவாகவும் சமைத்து பரிமாறப்படுகிறது. அதனை தயாரிக்க பயன்படுத்தப்படும் பாஸ்மதி அரிசி ஜம்மு காஷ்மீர், இமாச்சல பிரதேசம் மற்றும் பஞ்சாப் போன்ற பகுதிகளில் அதிகம் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த அரிசி நீண்ட நாட்கள் கெட்டுப்போகாத தன்மை கொண்டது. பஞ்சு போன்று மென்மையாகவும் இருக்கும். அரிசி வகைகளில் அதன் சுவையும் பிரமாதமாக இருக்கும். அதனால் அனைத்து தரப்பினராலும் விரும்பப்படும் அரிசியாக பாஸ்மதி அமைந்திருக்கிறது.

கருப்பு கவுனி அரிசி:

இந்த அரிசி அதிக அளவு நார்ச்சத்தும், புரதச் சத்தும் கொண்டது. மணிப்பூரில் சக் ஹாவ் அமுபி என்று அழைக்கப்படுகிறது. பொதுவாக மணிப்பூர் மற்றும் தமிழ்நாட்டில் பண்டிகை கொண்டாட்டங்கள் மற்றும் விருந்துகளின் போது பரிமாறப்படுகிறது.

மொக்ரா அரிசி:

சந்தையில் மலிவாக கிடைக்கும் அரிசி வகைகளுள் இதுவும் ஒன்றாகும். மோக்ரா என்றால் இந்தியில் மல்லிகை என்று பொருள். இந்த அரிசியில் அதிக அளவு ஸ்டார்ச் உள்ளடங்கி இருக்கும். நறுமணமும் கொண்டது. நாட்டின் பல பகுதிகளில் இந்த அரிசி புழக்கத்தில் இருக்கிறது.

கோபிந்தபோக் அரிசி:

பெங்காலி மக்கள் சாப்பிடும் உணவு வகைகளில் கோபிந்தபோக் அரிசிக்கு தனி இடம் உண்டு. இது பாசுமதி அரிசியை போன்று நீளமாக இல்லாவிட்டாலும் சுவையிலும், வாசனையிலும் தனித்துவமானது. பாஸ்மதி அரிசியை போன்று இதுவும் சுவை சேர்க்கக்கூடியது.

பாலக்காடன் மட்டை:

கேரளாவின் பாலக்காடு மாவட்டத்தில் விளையும் இந்த அரிசி மட்டா அரிசி என்றும் அழைக்கப்படுகிறது. இந்த அரிசியை அப்பம், இட்லி, தோசை போன்றவை தயார் செய்வதற்கு பயன்படுத்தலாம். சேர மற்றும் சோழ காலத்தில் பாலக்காடன் மட்டை அரிசி அரசர்களின் சமையல் கூடத்தில் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.


Next Story