வங்கி மோசடி வழக்குகளின் எண்ணிக்கை நடப்பு நிதியாண்டில் வெகுவாக குறைவு!


வங்கி மோசடி வழக்குகளின் எண்ணிக்கை நடப்பு நிதியாண்டில் வெகுவாக குறைவு!
x

ரூ.100 கோடிக்கும் மேலான தொகையில் நடைபெறும் வங்கி மோசடிகள் வெகுவாக குறைந்துள்ளன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

நடப்பு நிதியாண்டில் ரூ.100 கோடிக்கும் மேலான தொகையில் நடைபெறும் வங்கி மோசடிகள் வெகுவாக குறைந்துள்ளன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகாரப்பூர்வ தரவுகளின்படி, தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகளில் மோசடி வழக்குகளின் எண்ணிக்கை 118 ஆக குறைந்துள்ளது. இந்த எண்ணிக்கை 2020-21 கால கட்டத்தில், 265 ஆக இருந்தது.

நடப்பு நிதியாண்டில் பொதுத்துறை வங்கிகளில் ரூ.100 கோடிக்கு மேல் நடந்த மொத்த மோசடி வழக்குகளின் எண்ணிக்கை 80 ஆக குறைந்துள்ளது.இந்த எண்ணிக்கை 2020-21 கால கட்டத்தில், 167 ஆக இருந்தது. தனியார் வங்கிகளில், 98இல் இருந்து 38 ஆக குறைந்துள்ளது.

நடப்பு நிதியாண்டில் மொத்த தொகையின் அடிப்படையில், பொதுத்துறை வங்கிகளில் இது ரூ.65,900 கோடியில் இருந்து ரூ.28,000 கோடியாக குறைந்துள்ளது. தனியார் வங்கிகளில், ரூ.39,900 கோடியிலிருந்து ரூ.13,000 கோடியாக குறைந்துள்ளது.

மோசடிகளை தடுக்கும் வகையில், முன்கூட்டிய எச்சரிக்கை அமைப்பு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை ரிசர்வ் வங்கி எடுத்து வருகிறது. கடந்த ஆண்டில், ரிசர்வ் வங்கி தகவல் தொழில்நுட்ப பிரைவேட் லிமிடெட் (ரிபிட்) உடன் இணைந்து முன் எச்சரிக்கை அமைப்பு செயல்படுத்தப்பட்டது.

ஏபிஜி ஷிப்யார்ட் மற்றும் அதன் விளம்பரதாரர்களால் செய்யப்பட்ட ரூ.22,842 கோடி வங்கி மோசடியை நாட்டின் மிகப்பெரிய வங்கி மோசடிகளில் ஒன்றாக பாரத ஸ்டேட் வங்கி இந்த ஆண்டின் தொடக்கத்தில் அறிவித்தது.பஞ்சாப் நேசனல் வங்கியில் நிரவ் மோடி செய்த மோசடி தொகையை விட இது அதிகமாகும்.

ஆனால், இவற்றையெல்லாம் விட அதிகமாக, ரூ.34,615 கோடி மோசடியில் ஈடுபட்ட டி.ஹச்.எப்.எல் மோசடியை மிகப்பெரிய வங்கி மோசடிகளில் ஒன்றாக கடந்த மாதம் சிபிஐ அறிவித்தது குறிப்பிடத்தக்கது.


Next Story