குழந்தை பிறப்பு குறைவதால் ஏற்படும் ஆபத்து
இந்தியாவின் மக்கள் தொகை இன்னும் சில ஆண்டுகளில் சீனாவை விஞ்சி விடும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அப்படியிருக்க, ஐக்கிய நாடுகளின் மக்கள் தொகை பிரிவின் சமீபத்திய அறிக்கையின்படி, அடுத்த 78 ஆண்டுகளில் இந்தியாவின் மக்கள் தொகை 41 கோடி குறைந்துவிடும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.
அதாவது சமீபத்திய கணக்கெடுப்பின்படி இந்தியாவின் மக்கள் தொகை சுமார் 141.2 கோடி. இது 2100-ம் ஆண்டில் 100.3 கோடியாக குறையும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. அமெரிக்காவின் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் இது தொடர்பாக விரிவான ஆய்வறிக்கையை சமர்ப்பித்துள்ளனர். அவர்களின் கருத்துப்படி, இந்தியாவின் கருவுறுதல் விகிதம் குறைந்து கொண்டிருப்பதால் மக்கள் தொகையும், மக்கள் தொகை அடர்த்தியும் படிப்படியாக குறையும்.
தற்போது இந்தியாவின் கருவுறுதல் விகிதம் ஒரு பெண்ணுக்கு 1.76 ஆக உள்ளது. அதாவது ஒரு பெண் சராசரியாக ஒரு குழந்தையே பெற்றெடுக்கும் நிலை இருக்கிறது. சில குடும்பங்களில் இரண்டு குழந்தைகள் பிறக்கின்றன. இந்த கருவுறுதல் விகிதம் 2032-ம் ஆண்டில் 1.39 ஆக குறையும் என ஆய்வாளர்கள் மதிப்பிட்டுள்ளனர். அதேபோல் 2052-ம் ஆண்டில் கருவுறுதல் விகிதம் 1.28 ஆக இருக்கும். 2082-ம் ஆண்டில் 1.2 ஆகவும், 2100-ம் ஆண்டில் 1.19 ஆகவும் குறைந்துவிடும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. ஒரு குழந்தைக்கு மேல் பெற்றெடுக்கும் ஆர்வம் குறைந்து வருவதே இதற்கு முக்கிய காரணமாக அமைந்திருக்கிறது.
குழந்தை பிறப்பு விகிதம் குறைவதன் காரணமாக மக்கள் தொகை குறைவதோடு மக்கள் தொகை அடர்த்தியும் எதிர் வரும் ஆண்டுகளில் கணிசமாக குறையும். இந்தியா மற்றும் சீனாவின் மக்கள் தொகை இப்போது கிட்டத்தட்ட சமமாக உள்ளது.
இருப்பினும், மக்கள் தொகை அடர்த்தியின் அடிப்படையில் இரு நாடுகளுக்கும் இடையே மிகப்பெரிய வேறுபாடு உள்ளது. இந்தியாவில் சராசரியாக ஒரு சதுர கிலோ மீட்டருக்கு 476 பேர் உள்ளனர். மறுபுறம், சீனாவில் ஒரு சதுர கிலோமீட்டருக்கு சராசரியாக 148 பேர் மட்டுமே உள்ளனர். 2100-ம் ஆண்டு வாக்கில், இந்தியாவின் மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோமீட்டருக்கு 335 ஆக குறையும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் மக்கள் தொகை அடர்த்தியில் ஏற்படும் இந்த சரிவு, ஒட்டுமொத்தமாக உலக மக்கள்தொகை அடர்த்தி குறைவதை விடவும் அதிகமாக இருக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள். அவர்களின் கூற்றுப்படி, ஒரு நாட்டின் மக்கள்தொகை வளர்ச்சி வீழ்ச்சி அடைந்து எதிர்மறையாக மாறும்போது வாழ்க்கைத் தரமும் தேக்கமடைந்துவிடும். மக்கள்தொகையும் கடும் வீழ்ச்சி அடைந்துவிடும்.