அ.தி.மு.க. பொன்விழா ஆண்டில் பொன்னான நினைவுகள்! - சைதை துரைசாமி


அ.தி.மு.க. பொன்விழா ஆண்டில் பொன்னான நினைவுகள்! - சைதை துரைசாமி
x

எம்.ஜி.ஆரின் சாதனைகளில் சத்துணவு திட்டமே மணி மகுடம். அதேபோன்று ஜெயலலிதாவுக்கு ‘அம்மா உணவகம்' அமைந்தது. எம்.ஜி.ஆர். காலத்தில் எனக்கு பொறியியல் கல்லூரி தொடங்குவதற்கும், மதுபான கடைகள் நடத்துவதற்கும் கிடைத்த வாய்ப்புகளை நிராகரித்து அறம் சார்ந்த பொதுமக்கள் சேவையில் மட்டுமே கவனம் செலுத்தி வருவதாக சைதை துரைசாமி கூறுகிறார்.

தமிழக வரலாற்றில் குறுகிய காலத்தில் கட்சி தொடங்கப்பட்டு, மாபெரும் வெற்றிகள் கண்ட ஓர் இயக்கம் என்றால், அது எம்.ஜி.ஆருக்காக மக்களால் உருவாக்கப்பட்ட அ.தி.மு.க. மட்டும்தான். 14 வயது மாணவ பருவத்தில் எம்.ஜி.ஆர். பேனா நண்பர்கள் அமைப்பை ஏற்படுத்தி போஸ்ட்கார்டில் எம்.ஜி.ஆரின் கொடைத்தன்மை, படங்களின் வசூல் தகவல்கள் மற்றும் புதிய படத்தின் சிறப்புகளை ஒருவருக்கொருவர் எழுதியனுப்பி மகிழ்ந்தோம்.

நான் சென்னைக்கு வந்ததும் கலையுலகப் பேரொளி எம்.ஜி.ஆர். மன்றத்தின் மூலம் எம்.ஜி.ஆர். ரசிகர் மன்றங்களை கவனித்து வந்த அண்ணன் ஆர்.எம்.வீரப்பன் மூலம் எம்.ஜி.ஆரை நெருங்கும் வாய்ப்பு கிடைத்தது. 1-10-1972 அ.தி.மு.க.வுக்கு விதை போட்ட நாள். 8-10-1972 திருக்கழுக்குன்றத்திலும், சென்னை லாயிட்ஸ் ரோடு பொதுக்கூட்டத்திலும் சொத்துக்கணக்கை கேட்டு பேசிய நாள்.

ராஜினாமா செய்ய மனு

10-10-1972 எம்.ஜி.ஆர். கட்சியில் இருந்து நீக்கப்பட்ட நாள். 17-10-1972 அ.தி.மு.க. தொடங்கப்பட்ட நாள். 26-11-1972 மக்கள் நம்பிக்கையை இழந்த தி.மு.க. எம்.எல்.ஏ.க்களின் வீடுகளுக்கு சென்று ராஜினாமா செய்யுமாறு மனு கொடுத்த நாள். அன்று முதல்-அமைச்சராக இருந்த கருணாநிதி வீட்டுக்கு சென்று மனு கொடுத்தபோது எலுமிச்சைப்பழம் கொடுத்து கிண்டல் செய்தார்.

அதற்கு பதிலடியாக 16-12-1972 சைதையில் நடந்த தி.மு.க. கூட்டத்தின் மேடையில் உயிரை பணயம் வைத்து அன்றைய முதல்-அமைச்சர் கருணாநிதிக்கு எலுமிச்சைப்பழ மாலை அணிவித்ததற்காக நான் கடுமையாக தாக்கப்பட்டேன். என் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

எம்.ஜி.ஆர். ஆட்சி கலைப்பு

சிறையில் கடுமையான சித்ரவதைகளை அனுபவித்தேன். அதனால்தான் என்னை, 'அ.தி.மு.க.வின் முதல் தியாகி' என்றும், 'அ.தி.மு.க.வின் பகத்சிங்' என்றும் பாராட்டி அங்கீகாரம் கொடுத்தார் எம்.ஜி.ஆர். திண்டுக்கல் நாடாளுமன்ற தேர்தலில் மாபெரும் வெற்றி. தொடர்ந்து கோவை நாடாளுமன்றம், சட்டமன்ற இடைத்தேர்தல், புதுச்சேரி பொதுத்தேர்தல் வெற்றி.

மக்கள் பேராதரவுடன் 1977-ம் ஆண்டு அரியணை ஏறி மக்களுக்கான ஆட்சியை நடத்தினார். 1979-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் ஜெகஜீவன்ராம் ஆதரவு நிலைப்பாட்டை எம்.ஜி.ஆர். எடுத்தார். ஆனால், மக்கள் இந்திராகாந்தி பக்கம் தீர்ப்பளித்தார்கள். அதனால் எம்.ஜி.ஆர். ஆட்சி கலைக்கப்பட்டது.

இந்திய அரசியலில் சரித்திரம்

அடுத்து வந்த தேர்தலில், 'என்ன தவறு செய்தேன். என் ஆட்சியை கலைத்தார்கள்?' என்ற கேள்வியை மக்கள் முன்வைத்து, மாபெரும் வெற்றி பெற்றார். 1984-ம் ஆண்டு அமெரிக்க மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்து கொண்டே, தான் மட்டுமல்லாது தன்னுடைய தம்பிமார்களையும் வெற்றிபெற வைத்து இந்திய அரசியலில் சரித்திரம் படைத்தார்.

முதல்-அமைச்சராக பதவி ஏற்று முதல்-அமைச்சராகவே மறைந்தார். அ.தி.மு.க.வின் கொள்கை அண்ணாயிசம் என்று 1976-ம் ஆண்டு அறிவித்தார். அவரது 11 ஆண்டு கால ஆட்சியில் மக்களுக்கான நன்மைகளை பட்டியலிட்டால், அவை கணக்கில் அடங்காதவை.

உள்ளாட்சி தேர்தல் நடக்கவில்லை

1980-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் நான் தோற்று நின்றபோது எம்.ஜி.ஆர்., 'கவலைப்படாதே, நீதான் அ.தி.மு.க.வின் முதல் மேயர். அதற்கான களப்பணியில் இறங்கு' என்றார். பல்வேறு அரசியல் காரணங்களால் எம்.ஜி.ஆர். உயிருடன் இருந்தவரை, உள்ளாட்சித்தேர்தல் நடைபெறவே இல்லை.

தி.மு.க. அரசால் போடப்பட்ட 17 பொய் வழக்குகளில் இருந்தும் நிரபராதி என்று விடுதலை பெறுவதற்கு எம்.ஜி.ஆரே காரணமாக இருந்தார். சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை நிகழ்ச்சியில் எம்.ஜி.ஆர். பேசும்போது, ''இங்கு வந்து மேடையில் நிற்கும்போதே சைதாப்பேட்டை என்றால் எலுமிச்சை பழம்தான் எனக்கு ஞாபகம் வரும். எலுமிச்சை பழத்தை மாலையாக போட்ட துரைசாமியைத்தான் எனக்கு ஞாபகம் வருமே தவிர, பிறகுதான் இந்த நிகழ்ச்சிகூட ஞாபகம் வரும். நான் ஒரு அரசியல்வாதி. என்னுடைய அரசியல் கட்சியில் இருந்த ஒருவர் அப்போது இருந்த முதல்-அமைச்சருக்கு இந்த சைதாப்பேட்டையிலே துணிச்சலாக எலுமிச்சை பழம் மாலையை போட்டு, அந்த மேடையிலே அடித்து தூளாக ஆக்கி அவரை தூக்கி கொண்டுபோய் சிறைச்சாலையிலே போட்ட அனுபவம்தான் என் கண்முன்னே நிற்கும்'' என்று பாராட்டி பேசினார்.

பாராட்டு விழா

ஜெயலலிதாவும் என்மீது பேரன்பு காட்டினார். அ.தி.மு.க.வில் கொள்கை பரப்பு செயலாளராக பொறுப்பேற்ற ஜெயலலிதாவின் முதல் பொதுக்கூட்டமே, கருணாநிதிக்கு எலுமிச்சை பழ மாலை அணிவித்த வழக்கில் 9 மாத தண்டனையில் இருந்து விடுதலையான எனக்கு நடந்த பாராட்டு விழா கூட்டம்தான். அதில், எனக்கு மாலை அணிவித்து, மலர்கிரீடம் சூட்டி, 'அ.தி.மு.க.வின் துணிச்சல்மிக்க சிப்பாய்' என்று புகழ்ந்து பாராட்டினார், ஜெயலலிதா.

எம்.ஜி.ஆரின் வாக்கை நிறைவேற்றும் வகையில் 2011-ம் ஆண்டு நடந்த சென்னை மேயர் தேர்தலில் என்னை வேட்பாளராக நிறுத்தி 5.20 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றியடைய வைத்தார். மேயராக வெற்றி பெற்ற நான் மக்களுக்கு நேர்மையான, தூய்மையான சேவை செய்யும் வாய்ப்பை பெற்றேன்.

அம்மா உணவகம்

எம்.ஜி.ஆரின் சாதனைகளில் சத்துணவு திட்டமே மணி மகுடம். அதேபோன்று ஜெயலலிதாவுக்கு 'அம்மா உணவகம்' அமைந்தது. 2014-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. மாபெரும் வெற்றி அடைந்ததற்கு 'அம்மா உணவகம் ஒரு முக்கியமான காரணம்' என்று இந்த திட்டத்தை கொண்டு வந்த என்னை ஜெயலலிதா வெளிப்படையாக பாராட்டினார்.

'சேவையை பிரதானப்படுத்திய பொது வாழ்க்கையை அமைத்துக்கொள்' என்பதுதான் எம்.ஜி.ஆர். எனக்கு இட்ட கட்டளை. அதனால்தான் எம்.ஜி.ஆர். காலத்தில் எனக்கு பொறியியல் கல்லூரி தொடங்குவதற்கும், மதுபான கடைகள் நடத்துவதற்கும் கிடைத்த வாய்ப்புகளை நிராகரித்து அறம் சார்ந்த பொதுமக்கள் சேவையில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறேன்.

மனிதநேய இலவச ஐ.ஏ.எஸ். கல்வி அறக்கட்டளை

எம்.ஜி.ஆரின் பாதையில் என்னுடைய சொந்த நிதியில் இருந்து மனிதநேய இலவச ஐ.ஏ.எஸ். கல்வி அறக்கட்டளையை இன்று வரை இலவசமாக நடத்தி 3,600-க்கும் மேற்பட்ட மாணவர்கள் போட்டி தேர்வில் வெற்றி பெற்று மத்திய, மாநில அரசின் உயர் பதவியில் பணிபுரிகிறார்கள்.

இந்தியாவிலேயே 40 சிறந்த கல்வியாளர்களில் முதலாவதாக மனிதநேயத்தை தேர்வு செய்து பாராட்டியுள்ளது உலக புகழ்பெற்ற போர்ப்ஸ் பத்திரிகை. பொன்விழா நிறைவு செய்துள்ள அ.தி.மு.க.வுக்கு என்னை போலவே தியாகங்களை செய்திருக்கும் தொண்டர்கள், அவர்தம் குடும்பத்தினர், பிரதிபலன் பாராத எம்.ஜி.ஆர். பக்தர்கள், எழுத்தாளர்கள், பேச்சாளர்கள், கவிஞர்கள் தொடர்ந்து ஆதரவு தரும் பொதுமக்கள் அனைவரையும் இந்நாளில் வணங்குகிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story