'உலகின் நுரையீரலுக்கு' ஆபத்து
எதைச் செய்யாதே என்று சொல்கிறோமோ! அதில்தான் ஒருவனுக்கு ஆர்வம் ஏற்படும். அதை செய்யத்துடிப்பான். “புகை பிடிப்பது, மது அருந்துவது உடல் நலத்துக்கு கேடு” என பிரசாரம் செய்யப்படுகிறது. அதனால் புகைப்பிடிப்பவர்களின் எண்ணிக்கையும், மது அருந்துபவர்களின் எண்ணிக்கையும் குறைகிறதா என்ன?
புகை பிடிப்பதாலும், மது அருந்துவதாலும் நுரையீரல் பாதிக்கப்பட்டு, உயிருக்கு ஆபத்து ஏற்படலாம். இது தெரிந்தே, பலர் இந்த தவறை செய்கிறார்கள். இது தனிமனித பிரச்சினை.
ஆனால், இந்த உலகத்தின் நுரையீரலே பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டு இருக்கிறது.
உலகத்துக்கு நுரையீரலா?... ஆம்... வாருங்கள் பார்ப்போம்....
இந்தியாவுக்கு அருகே உள்ள உயரமான திபெத் பீடபூமி உலகத்தின் கூரை என அழைக்கப்படுவது போல், தென் அமெரிக்கா கண்டத்தின் வட பகுதியில் உள்ள அமேசான் காடுகள் 'உலகத்தின் நுரையீரல்' என்று அழைக்கப்படுகிறது. காடு என்றால் சாதாரண காடு அல்ல; 70 லட்சம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவு. இந்தியாவின் மொத்த நிலப்பரப்பையும் விட இரண்டு மடங்குக்கும் அதிகமானது. இதில் அதிகபட்சமாக 55 லட்சம் ச.கி.மீ. முழுக்க மழைக்காடுகள்.
பிரேசில், பெரு, பொலிவியா, கொலம்பியா, வெனிசூலா, கயானா, சுரினாம், பிரெஞ்ச் கயானா, ஈக்வடார் ஆகிய 9 நாடுகளில் பரந்து விரிந்து கிடக்கிறது அமேசான் காடுகள். இந்த காடுகளின் பெரும்பகுதி பிரேசில் நாட்டில் வியாபித்து இருக்கிறது.
மொத்த காடுகளில் 59.1 சதவீதம் இங்குதான் உள்ளது. பெரு நாட்டில் 12 சதவீதமும், பொலிவியாவில் 7.7 சதவீதமும், கொலம்பியாவில் 7.1 சதவீதமும், வெனிசூலாவில் 6.1 சதவீதமும், கயானாவில் 3.1 சதவீதமும், சுரினாமில் 2.5 சதவீதமும், பிரெஞ்ச் கயானாவில் 1.4 சதவீதமும், ஈக்வடாரில் 1 சதவீதமும் உள்ளன.
உலகில் பல்வேறு நாடுகளில் உள்ள மொத்த காடுகளையும் சேர்த்தாலும் அவற்றையெல்லாம் விட அமேசான் காடுகளின் பரப்பளவு அதிகம். இந்த காடுகளில் 39 ஆயிரம் கோடி மரங்கள் இருப்பதாக மதிப்பிடப்பட்டு உள்ளது. உலகில் எந்த பகுதியிலும் இல்லாத மரங்கள் இங்கு காணப்படுகின்றன. 16 ஆயிரம் வகையான உயிரினங்கள் இங்கு வசிக்கின்றன. இவற்றில் ஏராளமானவை மனிதர்களால் அறியப்படாதவை.
இங்கு ஏராளமான வினோத பறவைகள், பூச்சி வகைகள், விலங்குகள், 200 வகையான கொசுக்கள், ரத்தக்காட்டேரி வவ்வால்கள், கொடிய விஷம் கொண்ட பாம்புகள் என நாம் இதுவரை பார்த்திராத இந்த காடுகளில் உலா வருகின்றன. இதனால் அவற்றை என்ன பெயரிட்டு அழைப்பது என்று கூட தீர்மானிக்க முடியவில்லை.
இங்குள்ள நதிகளில் காணப்படும் 'ஈல்' என்ற ஒருவகை மீன், தன் உடலில் உள்ள மின்சாரத்தை பாய்ச்சி மனிதர்களை கொல்லும் தன்மை கொண்டது.
பூமியில் உள்ள பறவைகளில் ஐந்தில் ஒரு பங்கு பறவைகள் இங்கு வசிக்கின்றன. 'அனகோண்டா' பாம்புகள் இங்குதான் உள்ளன.
பூமத்திய ரேகை பகுதியில் அமைந்திருக்கும் இந்த அமேசான் காடுகளில் ஆண்டு முழுவதும் மழை பெய்து கொண்டே இருக்கும். இந்த காடுகள் வழியாக அமேசான் ஆறு பாய்கிறது. ஏராளமான துணை ஆறுகள் அதில் கலக்கின்றன. இதனால் தண்ணீருக்கு பஞ்சமே இல்லை.
காடு முழுவதும் அடர்த்தியான மரங்கள் என்பதால், தரையின் பெரும்பாலான பகுதிகள் சூரிய வெளிச்சத்தை பார்த்ததே கிடையாது. கணக்கில் அடங்காத இயற்கை வளங்கள் இங்கு கொட்டிக்கிடக்கின்றன.
ஆப்பிரிக்கா கண்டத்தின் வட பகுதியில் அமைந்துள்ள சகாரா பாலைவனத்தில் இருந்து மேற்கில் உள்ள அட்லாண்டிக் பெருங்கடலை நோக்கி வீசும் புழுதிக்காற்று ஆண்டுக்கு 18 கோடியே 20 லட்சம் டன் பாஸ்பரசை அமேசான் காடுகளில் கொண்டு போய் சேர்க்கிறது. இது அங்குள்ள தாவரங்கள் வளர பெரிதும் உதவியாக இருக்கிறது.
முன்னொரு காலத்தில் அமேசான் பகுதி முழுவதும் வனமாகவே இருந்தது. சுமார் 13 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் இங்கு மக்கள் குடியேற தொடங்கியதாகவும், முதலில் மத்திய அமெரிக்க பகுதியில் இருந்து மக்கள் வந்ததாகவும் வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.
அமேசான் பகுதியில் வசிப்பவர்களில் 60 சதவீதம் பேர் பூர்வீக பழங்குடியினர். இவர்களில் 400-க்கும் மேற்பட்ட குழுக்கள் உள்ளன. 170 வகையான மொழிகளை பேசுகிறார்கள். இவர்களில் நூற்றுக்கும் மேற்பட்ட குழுவினருக்கு வெளியுலக மக்களுடன் எந்த தொடர்பும் கிடையாது; தொடர்பு வைத்துக்கொள்ளவும் விரும்புவதில்லை.
பரந்து விரிந்து கிடக்கும் வனாந்திரம் என்பதால் எந்த மருத்துவ வசதியும் கிடையாது. அவர்களாகவே வைத்தியம் செய்து கொள்வார்கள். பல நூறு ஆண்டுகளுக்கு முன் மலேரியா காய்ச்சலாலும் மற்றும் சில வினோத நோய்களாலும் இங்கு 40 ஆயிரம் பேர் பலியானார்கள். தற்போது 2.5 லட்சம் பழங்குடியினரே வசிப்பதாக தெரிய வந்துள்ளது. பழங்குடியினரில் சில குழுக்களை சேர்ந்தவர்கள் ஆடை அணிவது இல்லை. சிலர் பெயருக்கு ஏதோ ஒன்றை உடலில் சுற்றிக்கொள்கிறார்கள். வெயில், மழை எதுவென்றாலும் அப்படியே இருக்கிறார்கள். தங்களுக்கான உணவை வேட்டையாடி தேடிக்கொள்கிறார்கள். புல், இலை, தளைகளால் உருவாக்கப்பட்ட குடிசைகளில் வசிக்கிறார்கள்.
அமேசான் பழங்குடியினர் பற்றி அறிந்து கொள்ளவும், போதிய மருத்துவ வசதி அளித்து அவர்களுடைய வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்தவும் சர்வதேச அளவில் பல்வேறு முறை முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. என்றாலும் போதிய பலன் இல்லை.
வெளியாட்களை கண்டால் அம்பு எய்து கொன்று விடுவார்கள் என்பதால், தரை மார்க்கமாக அவர்களுடைய இருப்பிடங்களுக்கு செல்வது சாத்தியமற்றதாக இருக்கிறது. இதனால் ஹெலிகாப்டரில் சென்றபோது, அதை நோக்கி அம்புகளை எய்தனர். எனவே அந்த முயற்சியும் பலனற்று போனது.
மிகவும் உள்பகுதி அல்லாத சில இடங்களில் ஒன்றிரண்டு குக்கிராமங்கள் உள்ளன. அங்கு சுற்றுலாவாகவும், ஆராய்ச்சிக்காகவும் வெளிநாடுகளில் இருந்து அவ்வப்போது பலர் வருகிறார்கள். அவர்களை, அங்குள்ளவர்கள் படகுகளில் காட்டுக்குள் சிறிது தூரம் அழைத்துச் செல்கிறார்கள். அங்குள்ள கூடாரங்களில் அவர்கள் ஒன்றிரண்டு நாட்கள் தங்கிவிட்டு திரும்புகிறார்கள்.
தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள், பழங்குடியினர் சிலரை அவர்கள் வசிக்கும் காடுகளில் இருந்து சற்று வெளியே அழைத்து வந்து உலக வாழ்க்கை பற்றியும், வசதிகள் பற்றியும் காட்டி இருக்கிறார்கள். அவற்றையெல்லாம் அந்த பழங்குடியினர் அதிசயமாக பார்த்துவிட்டு, மீண்டும் தங்கள் இருப்பிடத்துக்கே திரும்பிவிட்டனர்.
அவ்வளவுதான். மற்றபடி அமேசான் காடுகளை பற்றியோ அங்குள்ள வளங்களை பற்றியோ, பழங்குடியினர் பற்றியோ முழுமையாக அறிந்துகொள்ள முடியவில்லை.
மனிதன் உயிர்வாழ காற்று அதாவது காற்றில் உள்ள ஆக்சிஜன் (பிராணவாயு) மிகவும் அவசியம். தாவரங்கள் கார்பன் டை ஆக்சைடை (கரியமில வாயு) எடுத்துக்கொண்டு ஆக்சிஜனை வெளியிடுகின்றன. அந்த வகையில் மரங்கள் மனிதனின் நெருங்கிய தோழன்.
இந்த உலகுக்கு தேவையான ஆக்சிஜனில் 20 சதவீதத்தை அதாவது ஐந்தில் ஒரு பங்கு ஆக்சிஜனை அமேசான் காடுகள் வழங்குகின்றன. இதனால்தான் அமேசான் காடுகளை 'உலகின் நுரையீரல்' என்கிறார்கள். ஆனால் அந்த நுரையீரலுக்கு சமீப காலமாக ஆபத்து ஏற்பட்டு உள்ளது.
உலகம் முழுவதும் உள்ள எரிமலைகள் மூலம் ஆண்டுக்கு 4 ஆயிரம் கோடி டன் 'பசுமைக்குடில்' வாயுக்கள் மற்றும் கார்பன் டை ஆக்சைடு வெளியேற்றப்படுவதாக மதிப்பிடப்பட்டு இருக்கிறது. இதில் 5 சதவீதத்தை அதாவது 200 கோடி டன்னை அமேசான் காடுகள் கிரகித்துக்கொள்கின்றன.
குடியிருப்புகள், பண்ணைகளை உருவாக்குவதற்காகவும், சாலைகள் அமைப்பதற்காகவும், தொழில் வளர்ச்சி என்ற பெயரிலும் பல்வேறு நாடுகளில் காடுகள் அழிக்கப்படுகின்றன. இதற்கு அமேசான் காடுகளும் விதிவிலக்கு அல்ல. பல நாடுகளில் அமேசான் காடுகள் அழிக்கப்பட்டு வருகின்றன. கடந்த 1985 முதல் 2016 வரையிலான 31 ஆண்டுகளில் மட்டும் 4 லட்சத்து 21 ஆயிரத்து 774 ச.கி.மீ. பரப்பளவுக்கு காடுகள் அழிக்கப்பட்டு இருக்கின்றன.
இதுதவிர அவ்வப்போது தீ விபத்துகளும் ஏற்படுகின்றன. பிரேசில் நாட்டில் மட்டும் 2019-ம் ஆண்டு அமேசான் காடுகளில் 70 ஆயிரத்துக்கும் அதிகமான தடவை தீ விபத்துகள் ஏற்பட்டு உள்ளன.
அமேசான் மழைக்காடுகளை பாதுகாப்பதற்காக முன்பு பிரேசில் நாட்டில் தனியாக சட்டம் கொண்டுவரப்பட்டது. ஆனால் அந்த சட்டத்தில் அப்போதைய பிரேசில் அதிபர் ஜெயிர் போல்சோனாரோ சில தளர்வுகளை அறிவித்து உள்ளார். உலக நாடுகள் சொல்வது போல் அமேசான் காடுகளை பாதுகாப்பது முக்கியம் என்றாலும், காடுகளை ஓரளவு அழிக்காமல் நாட்டில் குடியிருப்புகளையும், தொழிற்கூடங்களையும் அமைக்க முடியாது என்பது பிரேசிலின் வாதமாக இருக்கிறது.
பிரேசிலில் உள்ள கால்நடை பண்ணைகளில் 80 சதவீத பண்ணைகள் காடுகளை அழித்து உருவாக்கப்பட்டவை என்று புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. பிரேசில் 2018-ம் ஆண்டில் மட்டும் ரூ.49 ஆயிரத்து 200 கோடிக்கு வெளிநாடுகளுக்கு இறைச்சி ஏற்றுமதி செய்து இருக்கிறது.
இதனால் கடந்த சில ஆண்டுகளாக அமேசான் காடுகளின் பரப்பளவு வெகுவாக குறைந்து வருகிறது. இங்கு காடுகள் அழிக்கப்படுவதை தடுத்து நிறுத்தாவிட்டால், புவி வெப்பமயமாவதை தடுத்து நிறுத்துவது இயலாத காரியமாகிவிடும் என்றும், பூமியின் வெப்பநிலை 4 டிகிரி வரை அதிகரிக்கும் ஆபத்து உண்டாகும் என்றும் விஞ்ஞானிகள் எச்சரித்து இருக்கிறார்கள்.
காடுகள் அழிக்கப்படுவதாலும், 'பசுமைக்குடில்' வாயுக்களின் வெளியேற்றம் காரணமாகவும் ஏற்கனவே பூமியின் வெப்பநிலை அதிகரித்து வருவதால், அமேசான் காடுகளை பாதுகாக்க சர்வதேச அளவில் தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. வனப்பகுதியில் புதிதாக குடியிருப்புகளை ஏற்படுத்துவது மற்றும் சுரங்க பணிகள், எண்ணெய் துரப்பண பணிகள், காகித தயாரிப்புக்காக மரங்களை வெட்டுதல், கால்நடை பண்ணைகள் அமைப்பது போன்றவற்றை தவிர்த்தல், இறைச்சி பயன்பாட்டை குறைத்தல் ஆகியவற்றின் மூலம் அமேசான் காடுகளை பாதுகாக்க முடியும் என்று உலக நாடுகள் யோசனை தெரிவித்து இருக்கின்றன. அதற்கு எந்த அளவுக்கு பலன் கிடைக்கும் என்று தெரியவில்லை.
காடு உயர நாடு உயரும் என்பார்கள். காடு செழித்தால்தான் நாடு செழிக்கும். காடுகள் அழிக்கப்பட்டால் மழைவளம் குறைந்து இந்த பூமியே பாலைவனமாகிவிடும். மனிதன் இல்லாமல் மரம், செடி-கொடிகள் வாழ முடியும். ஆனால் மரங்கள் இல்லாமல் மனிதன் வாழமுடியாது.
இந்த பூமி மனிதர்களுக்கானது மட்டுமல்ல; எல்லா உயிரினங்களுக்கும் சொந்தமானது. ஆனால் மனிதர்கள் மட்டுமே ஏகபோக உரிமை கொண்டாடுகிறார்கள். ஆறறிவு படைத்த மனிதனைத் தவிர வேறு எந்த உயிரினமும் இயற்கையை சேதப்படுத்துவதோ, அழிப்பதோ இல்லை. மனிதர்கள்தான் காடுகளை அழித்து குடியிருப்புகளையும், தொழிற்சாலைகளையும் உருவாக்குவதோடு தண்ணீரையும் மாசுபடுத்துகிறார்கள்.
நுனிக்கிளையில் இருந்துகொண்டு அடிக்கிளையை வெட்டுவது, தனக்குத்தானே குழி தோண்டிக்கொள்வதற்கு சமம். மனிதகுலம் அதைத்தான் செய்து கொண்டிருக்கிறது.
தன் செயலுக்காக எதிர்காலத்தில் ஒருநாள் மனிதன் வருந்த நேரிடும். அப்போது அவனைப் பார்த்து இயற்கை சிரிக்கும். அந்த சிரிப்புக்கு ஆயிரம் அர்த்தங்கள். கெட்ட பின்பு ஞானி ஆவதில் யாருக்கு என்ன லாபம்?
எனவே இயற்கையை நேசிப்போம்; உலகை பாதுகாப்போம்...
அமேசான் கரையில் 'அனகோண்டா'
* அமேசான் நதி தென் அமெரிக்கா கண்டத்தின் வடமேற்கு பகுதியில் பசிபிக் பெருங்கடலையொட்டி அமைந்துள்ள ஆண்டிஸ் மலைத்தொடரில் உள்ள 21 ஆயிரத்து 768 அடி உயரம் கொண்ட ஏருபஜா சிகரத்தில் உற்பத்தியாகிறது.
* பெரு நாட்டில் தோன்றும் இந்த நதி ஈக்வடார், கொலம்பியா, வெனிசூலா, பொலிவியா, சுரினாம், கயானா, பிரெஞ்ச் கயானா வழியாக சென்று 6,400 கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்து பிரேசில் நாட்டில் அட்லாண்டிக் பெருங்கடலில் கலக்கிறது.
* சிறியதும், பெரியதுமாக சுமார் 1,100 துணை ஆறுகள் அமேசானில் கலக்கின்றன. இவற்றில் மரனோன், அபுரிமாக் ஆகியவை முக்கிய உபநதிகள் ஆகும்.
* நீளத்தை பொறுத்தமட்டில், ஆப்பிரிக்க கண்டத்தில் பாயும் நைல் நதியை (7,088 கி.மீ.) அடுத்து உலகின் 2-வது பெரிய ஆறு அமேசான்.
* இதன் ஆழம் 15 மீட்டர் முதல் 50 மீட்டர் வரை உள்ளது. அகலத்தை பொறுத்தமட்டில் இடத்துக்கு ஏற்பவும், மழைக்காலத்துக்கு ஏற்பவும் 700 மீட்டர் முதல் 14 கி.மீ. வரை உள்ளது.
* மழைக்காலத்தில் அமேசான் நதியில் இருந்து வினாடிக்கு 1 கோடியே 10 லட்சம் கனஅடி நீர் அட்லாண்டிக் கடலில் கலக்கிறது. சாதாரண காலங்களில் வினாடிக்கு 70 லட்சம் கனஅடி நீரை கடலில் கொண்டு போய் சேர்க்கிறது.
* பூமியில் இருந்து ஆறுகள் வழியாக கடலில் சென்று கலக்கும் தண்ணீரில் 20 சதவீதம் அமேசானில் இருந்து செல்லும் நீர் என்பது குறிப்பிடத்தக்கது.
* அமேசான் மூலம் ஒரு நாளில் கடலில் சென்று கலக்கும் தண்ணீர், அமெரிக்காவின் நியூயார்க் நகருக்கு 12 ஆண்டுகளுக்கு போதுமானது.
* அமேசான் பல்வேறு கிளைகளாக சென்று கடலில் கலக்கும் கழிமுகத்தில் பல தீவுகள் உள்ளன. அதில் மரஜா என்ற ஒரு தீவு, பரப்பளவில் சுவிட்சர்லாந்து நாட்டை விடவும் பெரியது.
* அமேசான் கழிமுக பகுதியில் ஆண்டுக்கு இரண்டு அல்லது மூன்று முறை பவுர்ணமி நாட்களில் மிகப்பெரிய அலைகள் தோன்றும். போரோரோகா என அழைக்கப்படும் இந்த நீரலைகள் ஆற்றில் 800 கி.மீ. தூரம் வரை செல்லும்.
* அமேசானின் வடிநிலப்பகுதியின் பரப்பளவு 70 லட்சத்து 50 ஆயிரம் சதுர கி.மீ. உலகின் மிகப்பெரிய ஆற்றுப்படுகை இதுதான்.
* உலகின் மிகப்பெரிய பாம்பாக கருதப்படும் அனகோண்டாவின் வாழ்விடமாக அமேசான் கரைப்பகுதி விளங்குகிறது.
* இந்த ஆறு 3 ஆயிரம் வகையான மீன்களின் புகலிடமாக உள்ளது. இதில் வாழும் பிரன்கா என்ற ஒருவகை ராட்சத மீன்கள் கூட்டமாக வந்து, ஆழம் குறைந்த பகுதியில் நடமாடும் கால்நடைகளை இழுத்துச் சென்று அவற்றின் மாமிசத்தை உண்ணும்.
* அடர்ந்த காடுகள் வழியாக பாய்வதால் அமேசான் கரையில் அதிக ஊர்களோ, நகரங்களோ கிடையாது. பிரேசிலின் மனாஸ் அமேசான் கரையில் உள்ள பெரிய நகரம் ஆகும். இங்கு 17 லட்சம் மக்கள் வசிக்கிறார்கள்.
* அமேசான் ஆற்றின் குறுக்கே பாலங்கள் எதுவும் கிடையாது.
* சுலோவேனியா நாட்டைச் சேர்ந்த பிரபல நீச்சல் வீரர் மார்ட்டின் ஸ்டிரெல் கடந்த 2007-ம் ஆண்டு அமேசான் நதியை, அது உற்பத்தியாகும் இடத்தில் இருந்து கடலில் கலக்கும் இடம் வரை 66 நாட்களில் நீந்தி கடந்தார். இதன்மூலம் அவர் உலக 'கின்னஸ்' சாதனை புத்தகத்தில் 4-வது முறையாக இடம்பெற்றார்.
* ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த பிரான்சிஸ்கோ டி ஓரல்லானா என்ற ராணுவ வீரர்தான் இந்த நதிக்கு அமேசான் என்ற பெயரை சூட்டினார்.
சகாரா பாலைவனம்
உலகின் பெரிய வனத்தை பற்றி சொல்லும் போது, பெரிய பாலைவனத்தை பற்றி சொல்லாமல் இருக்க முடியாது.
* உலகின் மிகப்பெரிய பாலைவனமான சகாரா, ஆப்பிரிக்கா கண்டத்தின் வட பகுதியில் 92 லட்சம் ச.கி.மீ. பரப்பளவில் அமைந்துள்ளது.
* கி.மு.3,400-ம் ஆண்டு வாக்கில் ஏற்பட்ட காலநிலை மாற்றத்தின் காரணமாக வட ஆப்பிரிக்காவில் கடும் வறட்சி உண்டாகி, அதனால் இந்த பாலைவனம் உருவானதாக விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.
* ஆப்பிரிக்கா கண்டத்தின் மொத்த பரப்பளவில் 31 சதவீதம் சகாரா பாலைவனம்தான்.
* 4,800 கி.மீ. நீளமும், 1,800 கி.மீ. அகலமும் கொண்ட மணற்பாங்கான இந்த பாலைவனம் எகிப்து, அல்ஜீரியா, சாட், எரித்ரியா, லிபியா, மாலி, நைஜர், துனீசியா, சூடான், மொராக்கோ, மவுரிதானியா நாடுகளில் பரந்து விரிந்து கிடக்கிறது.
* மாலி நாட்டின் 65 சதவீத பகுதி சகாரா பாலைவனம்தான். இந்த நாட்டில் வெப்பம் மிகவும் அதிகமாக இருக்கும் என்பதால், இதை ஆப்பிரிக்காவின் 'பிரஷர் குக்கர்' என்று சொல்வது உண்டு.
* சகாரா பாலைவனத்தின் வடக்கே மத்திய தரைக்கடலும், மேற்கே அட்லாண்டிக் பெருங்கடலும், கிழக்கே செங்கடலும் உள்ளன. மேற்கேயும், கிழக்கேயும் செல்லச்செல்ல இந்த பாலைவனம் சமவெளி பகுதியாக மாறுகிறது.
* இந்த பாலைவனத்தில் உள்ள சில மணற்குன்றுகள் 600 மீட்டர் உயரம் வரை இருக்கும். சில உயரமான மலைகளும் உள்ளன.
* சாட் நாட்டில் திபெஸ்தி மலையில் உள்ள 3,415 மீட்டர் உயரம் கொண்ட எமி கவுசி சிகரம்தான் சகாரா பாலைவனத்தின் உயரமான இடமாகும்.
* உலகிலேயே வெப்பம் மிகுந்த பகுதியாக கருதப்படும் சகாராவில் சராசரியாக 100.4 முதல் 104 டிகிரி பாரன்ஹீட் வரை வெப்பநிலை இருக்கும். ஒரு முறை அல்ஜீரியாவில் உள்ள பாலைவன பகுதியில் (பவு பெர்னோஸ்) 116 டிகிரி வெப்பம் பதிவாகி இருந்தது. மணல் பகுதியில் (போர்ட் சூடான்) அதிகபட்சம் 182.3 டிகிரி வரை வெப்பம் பதிவாகி இருக்கிறது. பகலில் எந்த அளவுக்கு அதிக வெப்பம் இருக்குமோ, அதே அளவுக்கு இரவில் குளிர் வாட்டி எடுக்கும்.
* சகாரா பாலைவனத்தின் பெரும்பாலான பகுதிகள் ஆண்டுக்கு 2 செ.மீ.க்கும் குறைவான மழையையே பெறுகின்றன.
* சகாரா பாலைவனத்தில் 20-க்கும் மேற்பட்ட ஏரிகள் உள்ள போதிலும் அவற்றில் பெரும்பாலானவை உப்பு நீர் ஏரிகள் ஆகும். சாட் என்ற ஏரி மட்டும் நன்னீர் ஏரி.
* இந்த பாலைவனத்தில் பல ஆறுகள் ஓடுகின்ற போதிலும் குறிப்பிட்ட காலங்களில் மட்டுமே அவற்றில் தண்ணீர் இருக்கும். நைல் நதியும், நைகர் நதியும் இங்கு ஓடும் வற்றாத ஜீவநதிகள் ஆகும்.
* 2,800 வகையான தாவரங்கள் இங்கு உள்ளன.
* சகாராவின் பல பகுதிகள் மனிதர்களும், விலங்குகளும் வாழ முடியாத இடங்களாகும். ஒட்டகங்களும், ஆடுகளும் அதிக அளவில் உள்ளன. பல்லிகள், மணல் விரியன், நெருப்புக் கோழி, காட்டு நாய்கள், ராட்சத பல்லிகள் போன்ற விலங்குகளும் காணப்படுகின்றன.
* இங்கு காணப்படும் வெள்ளி எறும்பு என்ற உயிரினம் பூமிக்கு அடியில் குழியில் வசிக்கும். ஒரு மணி நேரத்துக்கு மேல் இவை வெளியில் திரிந்தால் வெப்பத்தால் இறந்துவிடும். வெப்பம் தாங்காமல் செத்து கிடக்கும் கிடக்கும் உயிரினங்களை இவை உணவாக உட்கொள்ளும்.
இந்தியாவில் காடுகள் எவ்வளவு?
இந்தியாவின் மொத்த பரப்பளவு 32 லட்சத்து 87 ஆயிரத்து 263 ச.கி.மீ. நம் நாட்டில் 1952-ம் ஆண்டில் புதிதாக வன பாதுகாப்பு கொள்கை உருவாக்கப்பட்டது. அதன்படி, நாட்டின் மொத்த பரப்பரளவில் மூன்றில் ஒரு பங்கு, அதாவது 33.33 சதவீதம் காடுகள் மற்றும் மரங்கள் இருக்க வேண்டும்.
மத்திய வனத்துறை மந்திரி பூபேந்திர யாதவ் சமீபத்தில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த வன மற்றும் வன உயிரின பாதுகாப்பு அறிக்கையின்படி, இந்தியாவின் மொத்த நிலப்பரப்பில் 24.62 சதவீதம் காடுகள் உள்ளன. அதாவது, காடுகளின் பரப்பளவு 8 கோடியே 9 லட்சம் ஹெக்டேர் ஆகும்.
2021-ம் ஆண்டுக்கு முந்தைய 2 ஆண்டுகளில் மட்டும், இந்தியாவின் வனப்பரப்பளவு 2,261 ச.கி.மீ. அதிகரித்து இருக்கிறது. இது சற்று ஆறுதல் அளிப்பதாக உள்ளது.
அதிக வனப்பரப்பளவை கொண்ட மாநிலங்களில் மத்தியபிரதேசம் முதல் இடத்தில் இருக்கிறது. இதை அடுத்து அருணாசலபிரதேசம், சத்தீஷ்கார், ஒடிசா, மராட்டிய மாநிலங்கள் உள்ளன.
சதவீத அடிப்படையில் பார்த்தால், வடகிழக்கு மாநிலமான மிசோரம் முதலிடத்தில் இருக்கிறது. அந்த மாநிலத்தின் மொத்த பரப்பளவில் 84.53 சதவீதம் காடுகள் ஆகும். மற்ற வடகிழக்கு மாநிலங்களான அருணாசலபிரதேசத்தில் 79.33 சதவீதமும், மேகாலயாவில் 76 சதவீதமும், மணிப்பூரில் 74.34 சதவீதமும், நாகாலாந்தில் 73.90 சதவீதமும் காடுகள் ஆகும்.
தமிழகத்தின் பரப்பளவு 1 லட்சத்து 29 ஆயிரத்து 966 ச.கி.மீ. இதில் 17.59 சதவீதம்தான் காடுகள். அதாவது 22 ஆயிரத்து 877 ச.கி.மீ. அளவுக்கு காடுகள் உள்ளன. இதில் 19 ஆயிரத்து 388 ச.கி.மீ. காப்புக்காடுகளாகவும், 2,183 ச.கி.மீ. பாதுகாக்கப்பட்ட காடுகளாகவும், 1,386 ச.கி.மீ. வகைப்படுத்தா காடுகளாகவும் உள்ளன.