நீரை குளிரூட்ட எளிமையான தொழில்நுட்பம்
தண்ணீரை குளிரூட்டும் சூரிய சக்தியில் இயங்கும் சாதனத்தை உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த பி.காம் மாணவி அஞ்சால் சிங் என்பவர் கண்டுபிடித்துள்ளார்.
அஞ்சாலின் தந்தை மகாராஷ்டிரா மாநிலம் கல்யாண் என்ற இடத்தில் பெட்ரோல் பங்கில் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார். ஒரு நாள் கடும் வெயிலில் தன் தந்தை பணியாற்றிக் கொண்டிருப்பதைப் பார்த்தார். இந்த வெயில் காலத்தில் குளுமையான தண்ணீர் இருந்தால் அப்பாவுக்கு சற்று இதமாக இருக்கும் என்று எண்ணினார். அப்போதுதான் சூரியசக்தியில் இயங்கும் சாதனைத்தைக் கண்டுபிடிக்கும் யோசனை தோன்றியது. ஒரு பட்டையில் சூரியசக்தி தட்டும், வெப்பத்தை ஏற்படுத்தும் தட்டும் பொருத்தி சிறிய மின்விசிறியை இணைத்தார். இப்படித்தான் இந்த குளிரூட்டும் சாதனத்தைக் கண்டுபிடித்தார். சூரியசக்தியில் மின் விசிறியும் வெப்ப தட்டும் இயங்கும்போது தண்ணீரை குளுமைப்படுத்துகின்றன.
இது குறித்து அஞ்சால், "நான் கண்டுபிடித்த சாதனத்துக்கு சோலார் கூலிங் பெல்ட் என்று பெயரிட்டுள்ளேன். எந்த பாட்டிலிலும் இதனை எளிதில் பொருத்தலாம். இந்த பெல்ட் தண்ணீரை முழுமையாக குளிரூட்டும். பிரிட்ஜ் தண்ணீரை குடிப்பதைப் போன்றே இருக்கும். இதனை உருவாக்க ரூ.4 ஆயிரம் செலவானது. எனது கண்டுபிடிப்பில் கவரப்பட்ட மீரட் கல்லூரி ஒன்று எனக்கு உதவ முடிவு செய்திருக்கிறது. என்னைப் போன்ற இளம் கண்டுபிடிப்பாளர்களுக்கு அரசு உதவினால், நம் நாட்டை உலக அளவில் ஒளிரச் செய்ய முடியும்" என்றார்.