656 அடி உயரம்.. 740 படிக்கட்டுகள்.. மிரள வைக்கும் பாறை


656 அடி உயரம்.. 740 படிக்கட்டுகள்.. மிரள வைக்கும் பாறை
x

மலையின் உச்சிப் பகுதிக்கு சென்று சுத்தமான காற்றை சுவாசிக்க வேண்டும், அங்கு நிலவும் இதமான கால நிலையை அனுபவித்து மகிழ வேண்டும், விண்ணை முட்டும் வான் அழகை ‘செல்பி’ எடுத்து பகிர வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருக்கிறது.

மலையேற்ற பயணம் செய்பவர்கள் இத்தகைய ஆசைகளை எளிதாக நிறைவேற்றி விடுவார்கள். ஆனால் மலை உச்சி என்ற இலக்கை எட்டுவதற்கு அவர்கள் வெகு தூரம் பயணிக்க வேண்டி இருக்கும். அதற்கேற்ப தங்கள் உள்ளத்தையும், உடலையும் தயார்படுத்தி இருப்பார்கள். குழுவாக சாகச பயணம் மேற்கொண்டு இயற்கை அழகை ரசித்தபடியே இலக்கை எளிதில் எட்டிப்பிடித்து விடுவார்கள்.

பல மணி நேரம் பயணித்து மலையின் உச்சியை எட்டிப் பார்க்க இயலாதவர்களும் இலக்கை சென்றடையும் வகையிலான கட்டமைப்புகள் கொண்ட சுற்றுலா இடங்களும் இருக்கத்தான் செய்கின்றன. அப்படிப்பட்ட சுற்றுலா தலங்களுள் ஒன்று, 'பிக் குவாடேப் ராக்'. இது கொலம்பியா நாட்டின் புகழ்பெற்ற இடமாகும். இது 'பெனோன் டி குவாடாபே' என்றும் அழைக்கப்படுகிறது.

இந்த பாறை சுமார் 200 மீட்டர் (656 அடி) உயரம் கொண்டது. இதன் உச்சிப்பகுதிக்கு செல்வதற்கு சுமார் 740 படிக்கட்டுகள் ஏற வேண்டும். மிரள வைக்கும் இந்த பாறையை சென்றடைவது சிரமமான விஷயம்தான் என்றாலும் படிக்கட்டுகள் குறுக்கும், நெடுக்குமாக ஏறி செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டிருப்பது ஆறுதல் அளிப்பதாக உள்ளது.

இந்த படிக்கட்டுகள் பாறையின் விரிசலுக்கு இடையில் மிகவும் நேர்த்தியாக உருவாக்கப்பட்டிருக்கின்றன. அதற்கு ஏதுவாக பாறையில் எப்படி விரிசல் உருவானது? என்பதை பார்த்து பலரும் ஆச்சரியப்படுகிறார்கள். பாறைகளில் ஏறுதல், மலையேற்றம் மேற்கொள்ளுதல், நடைப்பயணம் செய்தல் போன்றவற்றை விரும்புபவர்களை இந்த பாறை நிச்சயம் கவரும். பாறையின் உச்சிப் பகுதிக்கு செல்லும் பாதையில் கன்னி மரியாள் கோவில் உள்ளது. சுற்றுலா செல்பவர்கள் அங்கு சென்று வழிபடுகிறார்கள். அங்கு அமர்ந்து ஓய்வெடுத்துவிட்டு தங்கள் பயணத்தை தொடர்கிறார்கள்.

மிகப்பெரிய பாறை சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக விளங்கும் இதனை காண்பதற்கு உலகம் முழுவதும் இருந்து சுற்றுலாப் பயணிகள் வருகிறார்கள். சிரமப்பட்டு படிக்கட்டுகளில் ஏறி மலை உச்சியை சென்றடைபவர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாக பாறை மீது மூன்று அடுக்கு கொண்ட காட்சி கோபுரம் அமைந்துள்ளது. அதன் மீது ஏறியும் கொலம்பியா நாட்டின் அழகை கழுகு பார்வையில் ரசிக்கலாம்.

இங்கு செல்வதற்கு கொலம்பியாவில் உள்ள மெடலின் நகரில் இருந்து பேருந்து இயக்கப்படுகிறது. இந்த பாறையின் அருகே நீர்த்தேக்கம் ஒன்றும் உள்ளது. பாறையின் உச்சியில் இருந்து அதன் முழு அழகை பார்த்து ரசிக்கலாம். நீர்த்தேக்கத்தில் படகு சவாரியும் நடைபெறுகிறது.


Next Story