மத்திய அரசு விதித்த தடைக்கு வரவேற்பு: மராட்டியத்தில் ஏதோ தீவிர சதி செய்ய திட்டமிட்டது, பி.எப்.ஐ.- முதல்-மந்திரி ஷிண்டே குற்றச்சாட்டு


மத்திய அரசு விதித்த தடைக்கு வரவேற்பு: மராட்டியத்தில் ஏதோ தீவிர சதி செய்ய திட்டமிட்டது, பி.எப்.ஐ.- முதல்-மந்திரி ஷிண்டே குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 29 Sept 2022 6:30 AM IST (Updated: 29 Sept 2022 6:30 AM IST)
t-max-icont-min-icon

பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மீது மத்திய அரசு விதித்த தடையை வரவேற்ற முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே, மராட்டியத்தில் அந்த அமைப்பு ஏதோ தீவிர சதி செய்ய திட்டமிட்டது என்று குற்றம் சாட்டினார்.

மும்பை,

பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மீது மத்திய அரசு விதித்த தடையை வரவேற்ற முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே, மராட்டியத்தில் அந்த அமைப்பு ஏதோ தீவிர சதி செய்ய திட்டமிட்டது என்று குற்றம் சாட்டினார்.

ஷிண்டே வரவேற்பு

பயங்கரவாத செயல்களுக்கு நிதியுதவி அளித்த குற்றச்சாட்டின் பேரில் நாடு முழுவதும் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா (பி.எப்.ஐ) அமைப்பை சேர்ந்த அலுவலகங்களில் என்.ஐ.ஏ. மற்றும் அந்தந்த மாநில போலீசார் அதிரடி சோதனை நடத்தி பலரை கைது செய்தனர். இந்த நிலையில் அந்த அமைப்பை 5 ஆண்டுகளுக்கு தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது.

இதற்கு மராட்டிய முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே வரவேற்று உள்ளார். இது குறித்து அவர் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

தீவிர சதி திட்டம்

பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பை சேர்ந்தவர்கள் கொலை உள்ளிட்ட தீவிர குற்றங்களில் ஈடுபட்டுள்ளனர். சமீப காலமாக அவர்கள் பயங்கரவாதத்துக்கு நிதியுதவி அளிப்பதில் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். அரசியலமைப்பு சாசனத்தை அவமதிப்பதோடு, நாட்டின் ஒற்றுமை, சமூக நல்லிணக்கம் ஆகியவற்றை சீர்குலைக்கும் வகையில் நடந்து கொண்டனர். மரட்டியத்தில் அவர்கள் ஏதோ தீவிர சதி செய்ய திட்டமிட்டனர்.

புனேயில் அவர்கள் பொது அமைதியை கெடுக்க முயன்றனர். பாகிஸ்தான் ஆதரவு கோஷம் எழுப்பியவர்கள் இந்தியாவில் வாழும் உரிமை இல்லாதவர்கள். அவர்களை உள்துறை பார்த்து கொள்ளும். தடை விதித்த மத்திய அரசின் முடிவை வரவேற்கிறோம். சரியான நேரத்தில் சரியான முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

தேசவிரோத செயல்களில் ஈடுபட்டு சமூகத்தை பிளவுபடுத்தும் சமூக விரோதிகளின் திட்டங்கள் ஒருபோதும் வெற்றியடையாது.

இவ்வாறு அவர் கூறினார்.

தேவேந்திர பட்னாவிஸ் கருத்து

இதேபோல துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் நிருபர்களிடம் கூறியதாவது:-

பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பை சேர்ந்தவர்கள் சமூகத்தில் வன்முறை விதையை விதைத்தனர். இதற்கு போதிய ஆதரங்கள் உள்ளன.

வடகிழக்கு மாநிலத்தில் ஒரு மசூதி இடிக்கப்பட்டதாக போலி வீடியோ, வன்முறையை தூண்டும் நோக்கத்துடன் பரப்பப்பட்டது. கடந்த காலத்தில் அமராவதியில் இதுபோன்ற ஒரு சம்பவத்தைப் பார்த்தோம். அந்த வீடியோ வங்கதேசத்தில் இருந்து வந்தது என்பது பின்னர் தெரியவந்தது.

பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவை தடை செய்ய கோரிய முதல் மாநிலம் கேரளா தான். இதே கோரிக்கைகள் பிற்காலத்தில் நாட்டின் பிற மாநிலங்களிலும் முன்வைக்கப்பட்டன. இந்த அமைப்பை மத்திய அரசு தடை செய்துள்ள நிலையில், மற்ற மாநிலங்களை போலவே மராட்டியமும் தடையை அமல்படுத்துவது குறித்து விரிவான உத்தரவை வெளியிடும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story