பால்தாக்கரே வழியில் பயணிக்கிறோம் எங்களது இந்துத்வாவில் கலப்படம் இல்லை - உத்தவ் தாக்கரே மீது ஷிண்டே தாக்கு


பால்தாக்கரே வழியில் பயணிக்கிறோம் எங்களது இந்துத்வாவில் கலப்படம் இல்லை - உத்தவ் தாக்கரே மீது ஷிண்டே தாக்கு
x
தினத்தந்தி 19 Oct 2023 12:30 AM IST (Updated: 19 Oct 2023 12:31 AM IST)
t-max-icont-min-icon

எங்களது இந்துத்வாவில் கலப்படம் இல்லை என்று உத்தவ் தாக்கரேவை முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே விமர்சித்தார்.

மும்பை,

எங்களது இந்துத்வாவில் கலப்படம் இல்லை என்று உத்தவ் தாக்கரேவை முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே விமர்சித்தார்.

நீதித்துறை மீது நம்பிக்கை

தானே நகரில் நடைபெற்ற நவராத்திரி விழாவில் கலந்துகொண்ட முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே அங்கு செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்டார். அப்போது சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் மீதான தகுதி நீக்க மனுக்கள் குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், "ஜனநாயகத்தில் பெரும்பான்மைக்கு முக்கியத்துவம் உள்ளது. மாநில சட்டசபையில் 50 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு எங்களுக்கு உள்ளது. நாங்கள் தான் உண்மையான சிவசேனா. அதை தேர்தல் ஆணையமே உறுதி செய்துள்ளது. நீதித்துறை மற்றும் கோர்ட்டு மீது எங்களுக்கு நம்பிக்கை உள்ளது. எந்த முடிவு எடுக்கப்பட்டாலும் அது தகுதி மற்றும் ஜனநாயகத்தின் அடிப்படையில் தான் எடுக்கப்படும்" என்றார். மேலும் அவர் கூறியதாவது:-

தசரா பேரணி

மராட்டியத்தில் எனது தலைமையிலான சிவசேனா, பா.ஜனதா, அஜித்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சி இணைந்த கூட்டணி நாடாளுமன்ற தேர்தலில் 48 தொகுதியில் 45 தொகுதிகளை கைப்பற்றும். அடுத்தவாரம் மும்பையில் உள்ள ஆசாத் மைதானத்தில், ஆசாத் சிவ சைனிகளின் தசரா பேரணி நடைபெறும். இந்த பொதுக்கூட்டம் வெற்றிபெறும். எங்கள் இந்துத்வாவில் கலப்படம் இல்லை. எங்கள் நோக்கம் பால் தாக்கரேவின் இந்துத்வாவை பின்பற்றுவது. எனவே இந்த தசரா பேரணி பாலாசாகேப் தாக்கரே சிந்தனைகளை கொண்டு சேர்க்கும்.

2 கோடியாக உயர்வு

அரசு கவிழும் என்ற கூற்று பலிக்காது. எங்களுக்கு 200-க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு உள்ளது. அரசு முழு பலத்துடன் செயல்பட்டு வருகிறது. உத்தவ் தாக்கரே அணி சமாஜ்வாடி குழுக்களுடன் கைகோர்த்துள்ளது. அவர்கள் ஆசாதுதீன் ஓவைசி தலைமையிலான எம்.ஐ.எம். கட்சியுடன் இணைந்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை. இது சிந்தனைகளின் சீரழிவு. 2019-ம் ஆண்டு அதிகாரத்திற்காக எடுக்கப்பட்ட நிலைப்பாட்டை முழு நாடும் பார்த்தது. அவர்களிடமிருந்து நாம் என்ன எதிர்பார்க்க முடியும்? மாநிலத்தில் உள்ள மகளிர் சுய உதவி குழுக்களை வலுப்படுத்தவும், அதன் பயனாளிகளின் எண்ணிக்கையை தற்போதைய 60 லட்சத்தில் இருந்து 2 கோடியாக உயர்த்தவும் எங்களது அரசு இலக்கு நிர்ணயித்து உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


Next Story