உத்தவ் தாக்கரே, சஞ்சய் ராவத் மனுக்கள் தள்ளுபடி


உத்தவ் தாக்கரே, சஞ்சய் ராவத் மனுக்கள் தள்ளுபடி
x
தினத்தந்தி 27 Oct 2023 12:15 AM IST (Updated: 27 Oct 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

அவதூறு வழக்கில் இருந்து விடுவிக்க கோரிய உத்தவ் தாக்கரே மற்றும் சஞ்சய் ராவத் மனுக்களை கோர்ட்டு தள்ளுபடி செய்தது.

மும்பை,

அவதூறு வழக்கில் இருந்து விடுவிக்க கோரிய உத்தவ் தாக்கரே மற்றும் சஞ்சய் ராவத் மனுக்களை கோர்ட்டு தள்ளுபடி செய்தது.

அவதூறு வழக்கு

முதல்-மந்திரி ஷிண்டே தலைமையிலான நாடாளுமன்ற சிவசேனா குழுவின் தலைவராக இருப்பவர் ராகுல் செவாலே எம்.பி. இவர் குறித்து உத்தவ் பாலாசாகேப் தாக்கரே சிவசேனா கட்சியின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான சாம்னாவில், கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பர் 29-ந் தேதி கட்டுரை வெளியானது. இதில் ராகுல் செவாலே கராச்சியில் ஓட்டல் மற்றும் ரியல் எஸ்டேட் வியாபாரம் செய்வதாக கூறப்பட்டு இருந்தது.

இந்த குற்றச்சாட்டுகளை மறுத்த ராகுல் செவாலே, மக்கள் மத்தியில் தனது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையிலும், அரசியல் வாழ்க்கையை முடிக்கும் வகையிலும் பொய்யான குற்றச்சாட்டுகள் தெரிவிக்கப்பட்டு உள்ளதாக கூறி சம்பந்தப்பட்ட பத்திரிகையின் ஆசிரியரான உத்தவ் தாக்கரே, நிர்வாக ஆசிரியரான சஞ்சய் ராவத் மீது மஜ்காவ் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் அவதூறு வழக்கு தொடர்ந்தார்.

விடுவிக்க மறுப்பு

இந்த வழக்கில் இருந்து தங்களை விடுவிக்க கோரி முன்னாள் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேவும், சஞ்சய் ராவத்தும் மனு தாக்கல் செய்தனர். அதில் அவர், "குற்றச்சாட்டில் எங்களுக்கு எதிராக எந்த ஆதாரமும் இல்லை. தாங்கள் நிரபராதிகள். சந்தேகத்தின் அடிப்படையில் இந்த வழக்கில் நாங்கள் தவறாக இணைக்கப்பட்டு உள்ளோம்" என்று தெரிவித்து இருந்தனர்.

இந்த மனுவை விசாரித்த கோர்ட்டு, உத்தவ் தாக்கரே மற்றும் சஞ்சய் ராவத்தின் மனுவை தள்ளுபடி செய்தது. இருப்பினும் இதுகுறித்து விரிவான உத்தரவு வெளியிடப்படவில்லை.


Next Story