புனேயில் போலீஸ் நிலத்தை தனியாருக்கு விற்க அழுத்தம் கொடுக்கவில்லை - அஜித்பவார் விளக்கம்
புனேயில் போலீஸ் நிலத்தை தனியாருக்கு விற்க அழுத்தம் கொடுக்கவில்லை என அஜித்பவார் கூறியுள்ளார்.
புனே,
புனேயில் போலீஸ் நிலத்தை தனியாருக்கு விற்க அழுத்தம் கொடுக்கவில்லை என அஜித்பவார் கூறியுள்ளார்.
முன்னாள் போலீஸ் கமிஷனர் குற்றச்சாட்டு
புனே முன்னாள் கமிஷனர் மீரான் போர்வன்கர். பெண் ஐ.பி.எஸ். அதிகாரியான இவரது வாழ்க்கை வரலாறு புத்தகம் சமீபத்தில் வெளியானது. அதில் அவர் புனே ஏரவாடா பகுதியில் போலீசுக்கு சொந்தமான 3 ஏக்கர் நிலத்தை, கட்டுமான அதிபருக்கு விற்க 2010-ம் ஆண்டு அரசியல் தலைவர் ஒருவர் அழுத்தம் கொடுத்ததாக கூறியிருந்தார். போலீஸ் நிலத்தை விற்பனை செய்ய வேண்டும் என அழுத்தம் கொடுக்கப்பட்ட கட்டுமான அதிபர் சாகித் பால்வா பின்னர் 2-ஜி வழக்கில் கைது செய்யப்பட்டார் எனவும் கூறியிருந்தார். நேற்று முன்தினம் டெல்லியில் இதுதொடர்பாக பேட்டி அளித்த மீரான் போர்வன்கர் "அரசு நிலத்தை விற்பனை செய்ய கட்டுமான அதிபர்கள், அரசியல்வாதிகள், அதிகாரிகள், போலீசார் அடங்கிய கூடாரம் செயல்படுகிறது. பொதுமக்கள் விழிப்பாக இருக்க வேண்டும்" என்றார்.
அஜித்பவார் மறுப்பு
புத்தகத்தில் நிலத்தை விற்க அழுத்தம் கொடுத்தவர் புனே மந்திரி ததா என மட்டுமே மீரான் போர்வன்கர் குறிப்பிட்டு இருந்தார். எனவே போலீஸ் நிலத்தை கட்டுமான அதிபருக்கு கொடுக்க அப்போதைய புனே பொறுப்பு மந்திரி அஜித்பவார் தான் அழுத்தம் கொடுத்ததாக கூறப்படுகிறது. இந்த குற்றச்சாட்டை துணை முதல்-மந்திரி அஜித்பவார் மறுத்து உள்ளார். இதுகுறித்து அவர் நேற்று கூறியதாவது:- நான் அந்த நில விவகாரத்தில் எதுவும் செய்யவில்லை. அந்த நிலம் குறித்து முடிவு எடுக்க எந்த கூட்டத்திலும் நான் கலந்து கொள்ளவில்லை. புனே நில விவகாரத்தில் அப்போதைய உள்துறை மந்திரி ஆர்.ஆர்.பாட்டீலுக்கு இதை செய்யுங்கள், அதை செய்யுங்கள் என எந்த உத்தரவையும் நான் பிறப்பிக்கவில்லை. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.