போலீஸ்காரர் மீது தாக்குதல் நடத்திய இளைஞர்கள்; வலைதளத்தில் வீடியோ வைரல்
போலீஸ்காரர் மீது இளைஞர்கள் நடத்திய தாக்குதல் அடங்கிய வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது.
மும்பை,
போலீஸ்காரர் மீது இளைஞர்கள் நடத்திய தாக்குதல் அடங்கிய வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது.
தாக்குதல்
மும்பை சயான் பகுதியில் நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் போலீஸ்காரர் ஒருவர் ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது சாலை ஓரமாக கும்பலாக நின்ற இளைஞர்களை கண்டு அங்கிருந்து செல்லுமாறு தெரிவித்தார். இதனால் இளைஞர்கள் ஆத்திரமடைந்து போலீஸ்காரரிடம் வாக்குவாதம் செய்தனர். அக்கும்பல் திடீரென போலீஸ்காரரின் சட்டையை பிடித்து தாக்குதலில் ஈடுபட்டனர்.
வீடியோ வைரல்
தகவல் அறிந்த மற்றொரு போலீஸ்காரர் விரைந்து சென்று தாக்குதலில் ஈடுபட்டவர்களை தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டார். இந்த சம்பவம் அடங்கிய வீடியோ ஒன்று சமூகவலைத்தளத்தில் வைரலாக பரவியது. போலீஸ்காரர் மீது தாக்குதல் நடத்தியவர்கள் யார் என சயான் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே பகுஜன் சமாஜ்வாடி கட்சி எம்.எல்.ஏ. அபுஆஸ்மி 'எக்ஸ்' பக்க பதிவில், "பான் வாங்க இளைஞர்கள் சென்று உள்ளனர். அங்கு வந்த போலீஸ்காரர் லத்தியால் தாக்கியதால் ஒருவர் காயமடைந்தார். அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்" என்று தெரிவித்துள்ளார்.