அறிவிக்கப்பட்ட 24 மணி நேரத்தில் பெண்களுக்கான திட்டம் நிறுத்திவைப்பு - அரசு உத்தரவு
அறிவிக்கப்பட்ட 24 மணி நேரத்தில் பெண்களுக்கான திட்டத்தை நிறுத்தி வைத்து அரசு உத்தரவிட்டுள்ளது
மும்பை,
முக்கிய மந்திரி மகிளா சக்திகரன் அபியான் திட்டம் மாநிலத்தில் வரும் அக்டோபர் 2-ந் தேதி முதல் 2024-ம் ஆண்டு அக்டோபர் மாதம் வரை செயல்படுத்தப்பட இருந்தது. இந்த திட்டம் பெண்களின் சமூக பொருளாதார மேம்பாட்டிற்கான மாநில மற்றும் மத்திய அரசுகளின் அனைத்து திட்டங்கள் மற்றும் கொள்கைகளை செயல்படுத்த ஒரு ஒருங்கிணைந்த தளமாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த திட்டத்தை பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை மந்திரி கண்காணிக்க வேண்டும். இதுகுறித்த மாதாந்திர அறிக்கைகளை முதல்-மந்திரி மற்றும் துணை முதல்-மந்திரிகளிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்று கடந்த 20-ந் தேதி அரசு வெளியிட்ட உத்தரவில் கூறப்பட்டு இருந்தது. ஆனால் இந்த திட்டம் அறிவிக்கப்பட்ட 24 மணி நேரத்திற்குள், அதாவது 21-ந் தேதி வெளியிடப்பட்ட புதிய அறிவிப்பில், முந்தைய நாள் இந்த திட்டம் குறித்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவு மறு உத்தரவு வரும் வரை நிறுத்தி வைக்கப்படுகிறது என்று கூறப்பட்டுள்ளது.