கொலையாளிக்கு அடைக்கலம் கொடுத்தவர் போல சபாநாயகர் நடந்து கொள்கிறார் - சஞ்சய் ராவத் எம்.பி. தாக்கு
கொலையாளிக்கு அடைக்கலம் கொடுத்தவர் போல சபாநாயகர் ராகுல் நர்வேகர் நடந்து கொள்வதாக சஞ்சய் ராவத் எம்.பி. கடுமையாக விமர்சித்து உள்ளார்.
மும்பை,
கொலையாளிக்கு அடைக்கலம் கொடுத்தவர் போல சபாநாயகர் ராகுல் நர்வேகர் நடந்து கொள்வதாக சஞ்சய் ராவத் எம்.பி. கடுமையாக விமர்சித்து உள்ளார்.
சுப்ரீம் கோர்ட்டு கண்டிப்பு
முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே உள்ளிட்ட சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் தொடர்பான வழக்கை சபாநாயகர் ராகுல் நர்வேக்கர் விசாரணை நடத்தி வருகிறார். சபாநாயகர் வேண்டும் என்றே விசாரணையை காலம் தாழ்த்துவதாக உத்தவ் பாலாசாகேப் தாக்கரே சிவசேனாவினர் சுப்ரீம் கோர்ட்டில் முறையிட்டனர். அந்த மனு மீதான விசாரணை நேற்று முன்தினம் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன் நடந்தது. அப்போது நீதிபதிகள் எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கு விசாரணையை முடிக்க காலக்கெடுவை நிர்ணயம் செய்யாத சபாநாயகர் ராகுல் நர்வேகரை கண்டித்தனர். சபாநாயகர் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை தோற்கடிக்க முடியாது எனவும் எச்சரித்தனர்.
கொலையாளிக்கு அடைக்கலம்
சுப்ரீம் கோர்ட்டு கண்டிப்பை அடுத்து உத்தவ் பாலாசாகேப் தாக்கரே சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் சபாநாயகர் ராகுல் நர்வேகரை கடுமையாக விமர்சித்து உள்ளார். அவர், " கொலையாளிக்கு அடைக்கலம் கொடுத்து அவரை மேலும் குற்றங்கள் செய்ய உற்சாகப்படுத்துவது போல சபாநாயகர் செயல்படுகிறார். அவருக்கு சட்டம் தெரியாதா? சுப்ரீம் கோர்ட்டு இதுபோன்ற கடுமையான நிலைப்பாட்டை சபாநாயகருக்கு எதிராக ஒருபோதும் எடுத்தது இல்லை. சபாநாயகர், முதல்-மந்திரி மற்றும் அவரது அரசாங்கம் மராட்டியத்தின் பெயருக்கு களங்கம் விளைக்கிறது " என்றார்.